புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை அரசு ஏற்க வேண்டும்:டேவிட் மிலிபண்ட்
விடுதலைப்புலிகள் விடுத்துள்ள ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபண்ட் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மனிதாபிமான நிலவரத்தை கருத்திற்கொண்டு போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பை நாம் தொடர்ந்து விடுத்து வருகிறோம்.விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.மோதல் இடம்பெறும் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதற்கு போர் நிறுத்தம் அவசியம். இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை மீள் அமுல்படுத்த வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கமைய இரு தரப்பினரும் மனிதாபிமான நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.பொதுமக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோன் ஹோம்ஸின் இலங்கை விஜயத்தினை தாம் வரவேற்பதாகவும்தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி பிரான்ஸ் மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர்களுடன் தானும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும்,மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களின் மனிதாபிமான் நிலவரம் குறித்து ஆராயவுள்ளதாகவும் டேவிட் மிலிபண்ட் தெரிவித்துள்ளார்.
மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், மருத்துவ உதவிகள், சுதந்திரமான நடமாட்டம் போன்றவற்றை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மிலிபண்ட் கோரிக்கை விடுவதாக தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment