ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி
இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் இலங்கை தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதும் இது பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பே அனைவர் மத்தியிலும் நிறைந்து போயுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் ஓரளவேனும் கருத்தொருமைப்பாட்டை தமிழக அரசியல் கட்சிகள் கொண்டிருந்தன. இன்று அவை பிரிந்து எதிரும் புதிருமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளுடன் அணிவகுத்திருப்பது எந்தவகையில் தமிழர் பிரச்சினையை தேர்தல் மேடைகளில் அரங்கேற்றப்போகின்றன என்ற வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பா.ம.க.வும், இன்று ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடவுள்ளன. விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. அணியிலும் அதேபோன்று பா.ம.க., அ.தி.மு.க. விலும் அணி சேர்ந்துள்ளன.
இதேவேளை பிரதானமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனவும் காங்கிரஸை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறார் எனவும் அ.தி.மு.க. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக கண்டனக் குரல் எழுப்பி வருகின்றது.
அதேபோன்று அ.தி.மு.க. இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் வெறுமனே முதலைக் கண்ணீர் வடித்து வருவதாகவும் திடீரென ஜெயலலிதாவுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது எவ்வாறு பற்றும் பாசமும் வந்தது எனவும் முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியி ருக்கிறார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளின் அணுகுமுறைகளும் தேர்தலை மையமாகக் கொண்டவை மட்டுமே என்பதே தற்போது நிலவும் பொதுவான கருத்தாகும்.
இதேவேளை, அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி இலங்கை பிரச்சினை தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார். எனினும் நேற்று முன்தினம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய அவர் எதிர்க்கட்சிகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன் இந்தத் தேர்தலில் மக்கள் மத்தி யில் மத்திய அரசின் குறைகளையோ, அல்லது மாநில அரசின் குறைபாடுகளையோ எடுத்துக்காட்டி தேர்தல் பிரசார நடவடிக்கைளை மேற்கொள்ளாது இலங்கை தமிழர் பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு எதிர்க்கட்சிகள் புறப்பட்டுள்ளன. ""இதற்கு நாங்கள் ஆரம்பிக்கின்றோம். பின்னர் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்'' என இந்திய கம்யூனிஸ்ட் தான் ஆரம்பத்தில் பிள்ளையார் சுழிபோட்டது எனவும் ?தலமைச்சர் கூறியுள்ளார்.
இதனை பார்க்குமிடத்து இலங்கைத் தமிழர் தொடர்பில் இதுவரை தமிழகக் கட்சிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் கொட்டி, நீண்ட பட்டியல் போட்டு அதற்கு நியாயம் தேடும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடப் போகின்றன என ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் கட்சித் தலைவர்கள் எந்த நிமிடம் எந்தக் கட்சிக்கு தாவுவார்கள் என்றோ, எந்த நேரம் எந்த ?டிவை எடுப்பார்கள் என்றோ எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இருந்தும் இந்த விதமான அரசியல் குத்துக்கரணங்களைப் புரியாத கட்சித் தொண்டர்கள் தலைவர்களை நம்பி அவர்களின் கொள்கைகளுக்காக தீக்குளிப்பதும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து கொள்வதும்தான் இந்திய அரசியலில் மிகவும் பரிதாபகரமானதாகும்.
இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டுமென்பதில் சில தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழக மக்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதை மறுக்க முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காக பெருந்தொகைப் பணத்தை மக்கள் வா? வழங்கியுள்ளதுடன் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்தும் வருகின்றனர். எனினும் அரசியல் தலைமைத்துவங்கள் இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த ?னைவது மிகவும் கவலைக்கு?யதாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பரவலாக எதிரொலித்து வரும் இலங்கைத் தமிழர் விவகாரம் தேர்தலுக்குப் பின்னர் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை உறுதியாகக் கூற முடியாது. பொதுவாக இரு பிரதான கட்சிகளும் இலங்கை விவகாரத்தை தங்களின் அரசியல் வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்தும் போக்கையே குறியாக கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியலைச் சற்று நோக்கினால் கடந்த காலங்களில் அரசியலில் ஒருவருக்கொருவர் ஜென்ம விரோதிகளாக இருந்தவர்கள் கூட இன்று தேர்தலில் கைகோர்த்து இருப்பதுடன், அன்று தூற்றியவர்களை இன்று வாயாரப் போற்றவும் செய்கிறார்கள். இவை யாவும் தமிழக அரசியல் தலைமைத்துவங்களிடம் உறுதியான அரசியல் கொள்கை எதுவும் கிடையாது என்ற யதார்த்தத்தையே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.
இவை அனைத்துக்கும் அப்பால், தேர்தல் காலத்தில் அளிக்கப்படும் உறுதிமொழிகள் யாவும் ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலைமையையே இதுவரை தோற்றுவித்துள்ளது என்ற உண்மையையும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment