புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது - சிதம்பரம் கூறுகிறார்
இராணுவ பலத்தால் இலங்கை இனப்பிரச்சினையில் வெற்றி காணலாம். ஆனால் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழ்நிலையில், விடுதலைப் புலிகளின் விளையாட்டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து ப.சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கைப் பிரச்சினையால் அங்கிருந்து பெருமளவில் அகதிகள் வருவார்கள் என நான் நினைக்கவில்லை. சிலர் வரலாம். அதை அரசு சமாளிக்கும். நமது கவலைகள் எல்லாம் சண்டை நிற்க வேண்டும் என்பதுதான்.
மனிதக் கேடயமாக அப்பாவிகளை பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அப்பாவி மக்களை இலங்கை அரசு பாடுபடுத்தக் கூடாது.
இந்த கவலைகள் உரிய முறையில் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த கவலைகள் குறித்து இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சமுதாயம் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட மறுத்து வந்தனர். இலங்கையும், தாக்குதலை நிறுத்த முடியாது என பிடிவாதம் பிடித்து வந்தது.
இரண்டு பேரிலும் அதிக தவறை செய்தது இலங்கை அரசுதான். இராணுவத்தைக் கொண்டு வெற்றி காணலாம் என அவர்கள் முடிவு செய்து விட்டனர். இராணுவ ரீதியாக தீர்வு காணலாம். ஆனால் நிரந்தர வெற்றி பெற முடியாது. இராணுவ நடவடிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது.
பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா இல்லையா என்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. மனித உயிர்கள் இழப்பை நாம் அனுமதிக்க முடியாது. அதற்கு மேல் இப்போதைக்கு நாம் எண்ண வேண்டிய அவசியம் இல்லை.
பிரபாகரனுக்கு நாங்கள் கெடுதல் நினைக்க விரும்பவில்லை. ஆனால் அவர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என விரும்புகிறோம். இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. அப்படி எதையும் இந்தியா செய்யவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment