கருணாநிதியின் இரகசிய திட்டம் குறித்து ஜெயலலிதா வெளியிடும் புதிய தகவல்
நாமக்கல்:தமிழ் நாட்டில் தேர்தல் முடியும்வரை போர் நிறுத்தம் கடைப்பிடிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளதாக அ.இ.அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசியை ஆதரித்து நாமக்கலில் நேற்று மாலை ஜெயலலிதா ஆற்றிய உரையில்;அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க வேண்டுமெனில் மே 13 ஆம் திகதி வரை போர் நிறுத்தம் செய்யுமாறும் தேர்தல் முடிந்ததும் மீண்டும் தாக்குதலை தொடருமாறும் ராஜபக்ஷவிடம் கருணாநிதி கூறியதாக தனக்கு நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளதெனத் தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது;
உங்களுக்கு நான் இப்போழுது ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லப் போகிறேன்.கவனமாக கேளுங்கள்.கருணாநிதி ராஜபக்ஷ இணைந்து தீட்டியுள்ள சதித் திட்டத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்ஷவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக எனக்கு நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
அதாவது கருணாநிதி ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது.தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால் ஜெயலலிதாவிற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கே அவர் சொல்கிறபடி மத்திய அரசு அமைந்துவிட்டால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதைக் கேளுங்கள்.தேர்தல் நடக்கும் திகதியான மே மாதம் 13 ஆம் திகதிவரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுதுதான் நான் பெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று மீண்டும் என் தயவில் மத்திய அரசு அமைந்தால் நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டி விடலாம்.நீங்கள் எனக்கு உதவினால் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.எனவே உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க மே மாதம் 13 ஆம் திகதி வரை போர் நடத்தாமல் பொறுத்திருங்கள்.இங்கு தேர்தல் முடிந்தவுடன் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று கருணாநிதி ராஜபக்ஷவுடன் பேசியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.
தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி.கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.எனவே வருகின்ற தேர்தலில் தமிழின துரோகி கருணாநிதியை மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்களெல்லாம் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். பங்களாதேஷின் நிலைமை
காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத்தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன. அந்தளவிற்கு வரலாறு தெரியாதவர்களும் விபரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள்.
எங்களுடைய சொல்லை கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லியிருந்தேன். இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (INTERNATIONAL LAW) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலணியா? என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர்தான் விபரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.
இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேஷிற்கு விடுதலை வாங்கித் தரவில்லையா? இந்திராகாந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.
1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்து விட்டார் போலும். இன வெறியைத் தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திராகாந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பிறகு இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி இந்திய நாட்டில் பிரதமராக இருந்த போது இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.
இந்திராகாந்தி எந்தச் சர்வதேச சட்டத்தை பின்பற்றி பங்களாதேஷிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ்காந்தி எந்த சர்வதேசச் சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ, அதே சர்வதேச சட்டத்தைப் பின்பற்றித்தான் அதே தர்ம நியாயங்களைப் பின்பற்றித்தான் நான் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment