முகத்தை இறுக்கமாக வைத்திருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்
வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மாநாடு முடிவுறும் வரை முகத்தை மிகவும் இறுக்கமாகவே வைத்திருந்தார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் புன்னகைக்கவும் இல்லை.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கொச்னர் ஆகியோர் நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சுநடத்தினர்.
இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள், நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோஹன பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் மற்றும் பல உயர்மட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சுமார் 9.30 மணியளவில் ஆரம்பமான பேச்சுவார்த்தை 11.30 வரை நீடித்தது.
அதனையடுத்து இலங்கை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினர். அதன்போதே பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் மிகவும் இறுக்கமான முறையில் முகத்தை வைத்திருந்தார். ஏற்கனவே 10 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த செய்தியாளர் மாநாடு அமைச்சர்களின் சந்திப்பு நீடித்தமையின் காரணமாக 11.30 க்கே ஆரம்பித்தது. ஊடகவியலாளர் சந்திப்பு முடியும்வரை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் யாருடனும் பெரிதாக புன்னகைக்கவில்லை. இது இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் என்றும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான தமது முயற்சி பலிக்கவில்லை என்றும் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாப்பதற்காக போர்நிறுத்தத்தை கோரவில்லை என்றும் சிவிலியன்களை காப்பாற்றுவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐ.நா. வின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக தமக்கு அழைப்பு விடுத்த இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சுக்கு நன்றி தெரிவித்த டேவிட் மிலிபான்ட் மிகவும் இறுக்கமான முகத்துடனேயே விடைபெற்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment