கவலையில் புலிகள்! பிரபாகரன் உடல்நிலை... பற்பல நோய்களின் தாக்கத்தில்..
'புதுக்குடியிருப்பு மருத்து வமனை தாக்குதலின்போது பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பிவிட்டார். விரைவில், பிரபாகரனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்போம்!' எனஇலங்கை மீடியாக்களிடம் கொக்கரித்து வருகிறார் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா. நான்காம் ஈழப்போரின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதாகக் கருதப்படும் வேளையில், போரின் ஒவ்வொரு அசைவுமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை குறிவைத்தே நகர்ந்துவருகிறது. இதைக் கண்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.
'வடக்கை மீட்டெடுப்போம்; ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்குவோம்' என்ற கோஷத்துடன் கடந்த வருடம் ஜூன் மாதம் நான்காம் கட்ட ஈழப்போரைத் தொடங்கிய இலங்கை அரசு, கிட்டத்தட்ட தன் குறிக்கோளின் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. ஐம்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிதித்துறை, நீதித்துறை, காவல்துறை என்று தனி அரசாங்கம் நடத்திவந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தின் இந்த பாய்ச்சலால், தற்போது ஐந்து சதுர கி.மீ. பரப்பளவில் முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. புலிகளின் நிர்வாக நகரமாக உலகெங்கும் அறியப்பட்டிருந்த கிளிநொச்சியை இழந்து, ஆனையிறவில் பின்வாங்கி, முல்லைத்தீவில் பதுங்கி... தற்போது புதுக்குடியிருப்பின் பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்தபடி புலிகள் தங்கள் இறுதிப் போரில் மும்முரம் காட்டுகின்றனர்.
பிரபாகரன், அவர் மகன் சார்லஸ் ஆண்டனி, உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற் புலித் தலைவர் சூசை உள்ளிட்ட முக்கியமான தலைவர்களைத் தேடி இந்தப் பகுதியில்தான் மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ராணுவம். இதற்கிடையில், கடந்த 21-ம் தேதி ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சரணடைந்த (புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களான) தயா மாஸ்டரும் ஜார்ஜும் வெள்ளமுள்ளிவாய்க்கால் என்ற பகுதியில் மக்களோடு மக்களாக பிரபாகரனும் புலிகளின் முக்கியத் தலைவர்களும் பதுங்கியிருப்பதாக ஒரு புதுத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். இதன்பிறகு இந்தப் பகுதியிலும் உச்சகட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டிருக்கிறது.
சரணடைந்த இந்தப் புலிகள் தந்த சில தகவல்களில் பிரபாகரனின் உடல்நிலை பற்றியும் இருப்பதாகக் கேள்விப்பட்டோம் நாம். அதைத் தொடர்ந்து புலிகள் வட்டாரத்துச் செய்திகளை நெருங்கிப் பார்க்கக்கூடிய சிலரிடம் பேசினோம். 'இலங்கையோட கடந்த 40 வருஷ வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்... பிரபாகரன் சிங்கள இனவெறி அரசாங்கத்துக்கு எவ்வளவு பெரிய சிம்ம சொப்பனமா இருந்தார்னு தெரியும். கொழும்பில் வசிக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கில் வாழும் தமிழர்களுக்கெல்லாம்கூட, அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்ததே புலித் தலைவர் மீதான சிம்ம சொப்பனத்தால்தான்! அதனாலதான் சிங்கள அரசை யார் ஆண்டாலும் பிரபாகரனைப் பிடிக்காது. இப்பவும் போர்ல, தான் பிடிபடாமல் இருப்பதற்கான எல்லா வியூகங்களையும் அவர் வகுத்துக்கிட்டேதான் இருக்கார். வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நகர்ந்து காட்டுவழியா திருகோணமலைப் பகுதிப் பக்கம் போயிட்டார் என்பதாகவே எங்களுக்குத் தகவல். புதிய பலத்தோடு அவர் தாக்குதல் தொடுப்பதற்கான ஆயத்தங்கள் நடக்கிறது. அது இலங்கை அரசாங்கமே எதிர்பார்க்காத முற்றிலும் புதிய கூட்டணித் தாக்குத லாகவும் இருக்கலாம். ஆனா, பிரபாகரனின் உடல் நிலை குறிச்சுத்தான் எங்களுக்கு ரொம்பக் கவலையா இருக்கு!'' என்றவர்கள் சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்கள்.
'நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வரை முல்லைத் தீவின் ஒரு பகுதியில் 'பங்கரில்' அவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் 30 நிமிஷம் மெய்க்காப்பாளர்கள் புடைசூழ வாக்கிங் போவார். போர் தொடங்கியதும் ராணுவம் அவரோட நடவடிக்கைகளை உன்னிப்பா கவனிக்கவும்... வெளியே வர்றதைத் தவிர்த்துட்டாரு. ஒரு பதுங்கு குழியில உருவாக்கப்பட்ட 'இன்டோர் ஜிம்'மில் உடற்பயிற்சிகள் செய்வார். உடற்பயிற்சி முடிஞ்சதும் 20 நிமிஷம் அவரோட மெய்க்காப்பாளர்கள் அவருக்கு பாடி மசாஜ் பண்ணுவாங்க. அப்புறம் காலையில மெய்க் காப்பாளர்கள் சோதிச்சுக் கொடுக்கிற உணவைச் சாப்பி டுவார். காலையில் அரிசி மாவுல செஞ்ச புட்டும் முருங்கைக் காய் போன்ற எளிய காய்கறியும் சிறிதளவு சாம்பாரும்தான் சாப்பிடுவாரு.
தற்கொலைப் படையா செயல்பட்டு வீர சாவைத் தழுவின கரும்புலிகளின் குழந்தைகள் தங்கியிருக்கற செஞ்சோலை பெண்கள் காப்பகத்துக்கும், காந்தரூபன் ஆண்கள் காப்பகத்துக்கும் இடையில் போய் வருவார். போரில் உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் புலிகள் வாழுற மையத்துக்குப் போவார். அதுக்குப் பிறகு சார்லஸ் ஆண்டனி தலைமையில் முல்லைத்தீவில் செயல்படும் கணிப்பொறி பிரிவின் மையக் கட்டடத்துக்குப் போவார். அங்கு 1000 கம்யூட்டர்களோட புலிகளின் அமைப்பின் பல முக்கிய வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த விசிட்டுக்குப் பிறகு மதிய சாப்பாடு முடிச்சுட்டு ஓய்வெடுப்பார்.
சாயங்காலம் 20 நிமிஷம் மறுபடி பாடி மசாஜ் செஞ்சு குளிச்சுட்டு, வேலையை ஆரம்பிப்பார். புலிகளின் முக்கியமான தலைவர்களை சந்திக்கறது மாலையில்தான். அப்புறம் பயிற்சி முகாம்களுக்குப் போய் தன்னோட நேரடிப் பார்வையில் பயிற்சிகளை நடத்து வார். இரவு கோதுமைக் கூழ் சாப்பிடுவார். இத்தனை துல்லியமாக அவர் எல்லாம் வகுத்துக் கொண்டபோதும் 2007-ம் வருடம் ஜூன் மாதம் போர் தீவிரமான பிறகு ஒவ்வொன்றாகச் சில பிரச்னைகள் அவருக்கு ஏற்பட்டது...' என்று வருத்தத்துடன்சொன்னார்கள்.
புலிகளின் மருத்துவப் பிரிவில் பிரபாகரனுக்கு சிகிச்சை அளித்த முக்கியமான ஒருவரிடம் பேசினோம். 'பிளட் பிரஷர் அவருக்கு முதலில் வந்தது. இதற்கான ஒழுங்கான சிகிச்சையும் பராமரிப்பும் ஓய்வும் இல்லா மல் போனால்... ரத்த அழுத்தத்துக்கே உரிய விளைவு கள் அடுத்தடுத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். சிறுநீரகக் கோளாறு வரையில் அது கொண்டுபோகும் என்றும் எச்சரித்தார்கள்.
ஒரு முறை மூளைக்குப் போகும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளித்ததால், அப்போது அவருக்கு சிக்கல் ஏதும் வரவில்லை. அவருக்கு 'டைப் 2' சர்க்கரை நோயும் இருக்கு. இதனால் இடையிடையே படபடப்பும் சோர்வும் ஏற்படுவதுண்டு. அவர் உடற்பயிற்சிகள் செய்யறப்ப... மீட்டிங்குகள் நடத்தறப்ப... போர் வியூகங்கள் வகுக்கறப்பன்னு பல தடவை இந்தப் படபடப்பு அவரை படுத்தி எடுத்துச்சு. இதனாலேயே எங்கள் மருத்துவக் குழுவை சேர்ந்த ஒருவர் அவர் கூடவே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். உடனே மாத்திரையைக் கொடுத்து படபடப்பு குறைக்கப்படுகிறது. பக்கத்தில் ஆள் இருந்து உடனே கவனிக்காமல்போனால் இதுவே மாரடைப்பாக மாறும் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கொசுக்கடியால் வரக்கூடிய சில பிரச்னைகளும் அவரை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. இதுபோக, தொடர்ந்த ராணுவப் பயிற்சிகளின் பக்க விளைவாக 'ஹெர்னியா'ங்கற குடல் இறக்கம் நோயின் அடை யாளங்களும் இருக்கிறது. இதை ஆபரேஷன் மூலம் தான் சரி செய்யமுடியும். ஆனால், அதற்கான சூழலும் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இப்போது தலைவருக்கு ஏது?
இதுபோக, மூளைக்குப் போகிற ரத்த ஓட்டத்திலும் சில சிறிய பிரச்னைகள் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான மருந்தையும் தலைவர் எடுத்துக்கறாரு. இதுதவிர, 'மேனிக் டிப்ரஷன்' என்கிற மனோரீதியான பிரச்னைக்கும் தலைவர் அவ்வப்போது ஆளாகிறார். சட்டென்று கோபப்பட வைக்கிற பிரச்னை இது. முடிஞ்சவரைக்கும் இப்ப அவர்கூடவே ஒரு மருத்துவர் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். இப்போதுள்ள நிலைமையில் தொடர்ந்து மருத்துவரும் அவரோடு இருக்க முடியுமா என்பதுதான் கவலையாக இருக்கிறது. ஆனால், இத்தனையும் கண்டு நாங்கள்தான் கவலை கொள்கிறோமே தவிர... தலைவர் என்றைக்கும் போல அதே மிடுக்கோடும் கம்பீரத்தோடு கட்டுக்குலையாத உறுதியோடும்தான் வளைய வருகிறார்!' என்றார்.
- மு. தாமரைக்கண்ணன்
(நன்றி ஆனந்த விகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment