ஊனப்பட்ட உறுப்பினர்களை தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராகுமாறு கட்டளை
குறுகிய நிலப்பரப்புக்குள் பொதுமக்களைப் பணயக்கைதிகள் போல் பிடித்துவைத்துக்கொண்டு அவர்களின் பின் பதுங்கியிருக்கும் பிரபாகரன் மற்றும் தலைவர்களையும் முற்றாக அழிக்கும் இறுதி யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசபடையினருக்கு எதிராக இறுதித் தாக்குதலை நடத்துவதற்காகப் பிரபாகரன் தற்போது ஊனமுற்றிருக்கும் இயக்க உறுப்பினர்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் ஊனமுற்றவர்கள் அடங்கிய தற்கொலைத் தாக்குதல் படையணியொன்றைப் பிரபாகரன் தயார் செய்துள்ளார் எனவும் பிரபாகரனும் தலைவர்களும் பதுங்கியிருக்கும் பதுங்குகுழி நிலையங்களை இராணுவத்தினர் நெருங்கும் போது மேற்படி ஊனமுற்ற புலிகளின் தற்கொலைப் படையணி தாம் கட்டியிருக்கும் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கவைத்துப் பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.
யுத்த நடவடிக்கைகளற்ற பாதுகாப்பு வலய மற்றும் அதனை அண்டிய குறுகிய பிரதேசங்களிலும் மட்டுமே தற்போது பிரபாகரனும் இயக்கத்தினரும் மறைந்திருந்து இயங்கிவருகின்றனர். மனிதக் கேடயங்களாகப் பிரபாகரன் பயன்படுத்திவரும் பொதுமக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிவிட்டார்கள் என்றால் பிரபாகரனதும் அவருடைய உயர்மட்ட சகாக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான புலிகள் இயக்கத்தினரையும் ஒரு வாரகாலத்துக்குள் அழித்தொழிப்பது அரச படையினருக்குப் பெரிய காரியமாக இருக்காது. மக்கள் வெளியேறிவிட்டால் தாம் இராணுவத்தினரால் கொல்லப்படப்போவது உறுதியென்பதை பிரபாகரன் நன்கு அறிவார். இதனாலேயே அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்காகவும் அவ்வாறு இரகசியமாக தப்பியோட முயலும் தமிழர்களைச் சுட்டுக்கொல்வதற்கும் விசேட குழுவினரை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் குறித்த பிரதேசங்களில் மக்கள் வெளியேறக்கூடிய சந்துபொந்துப் பகுதிகளில் நிறுத்தியுள்ளனர். பிரபாகரன் தன் இனமக்களைத்தானே கொன்றொழித்தேனும் தன் உயிரைப் பாதுகாக்கும் ஒரு மகா தன்னலமானதும் அரக்கத்தனமானதுமான நடவடிக்கையைத் தற்போது இறுதியாக மேற்கொண்டுள்ளார். தமிழர்களைப் பாதுகாப்பது என்று கூறிப் புறப்பட்ட பிரபாகரன் இன்று தமிழரைக்கொன்றொழிக்கும் நடவடிக்கைகளிலும் தமிழர்களைப் பலிகொடுத்தேனும் தன்னையும் தன் சகாக்களையும் உயிர்தப்பவைக்கும் கீழ்த்தரமான வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்.
எவ்வாறாயினும் அப்பிரதேச மக்களே உயிர்போனாலும் பரவாயில்லை தாம் புலிகளின் கைப்பிடியிலிருந்து தப்பிச் செல்வது என்ற உறுதியுடன் புலிகளின் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அப்பகுதியிலிருந்து தினமும் இரகசியமாகத் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தப்பிவந்து இராணுவ முகாம்களிலும் இராணுவப் படையணியினரிடமும் அடைக்கலம் தேடி வந்த மக்கள் கூறும் தகவல்களிலிருந்தே அந்தப்பிரதேசங்களில் பிரபாகரனால் பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலைமை தெரியவருகின்றது. ஆயினும் பொதுமக்களை விட புலிகள் இயக்கப் படைகளிலிருந்து தப்பிவரும் புலிகள் இயக்கத்தினரே பிரபாகரனின் இரகசியத் திட்டங்கள் பற்றிய முக்கிய தகவல்களைப் படையினருக்குத் தெரிவித்துள்ளனர். அண்மையில் புலிகள் இயக்கத்திடமிருந்து தப்பியோடி வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகள் இயக்க முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ரர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் இவ்வாறு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை இராணுவப்புலனாய்வு பிரிவுக்குத் தெரிவித்தனர்.
இவ்வாறு கடந்தவாரம் பிரபாகரன் செயற்படும் குறுகிய பகுதியிலிருந்து தப்பியோடி இராணுவத்திடம் சரணடைந்துள்ள ஒரு புலிகள் இயக்கப் படையணித் தலைவரே பிரபாகரனின் இறுதித்திட்டம் பற்றியும் இறுதியுத்தத்திற்காக ஊனப்பட்ட இயக்கஉறுப்பினர்களை அடங்கிய தற்கொலைப் படையணியைப் பிரபாகரன் அமைத்துள்ளது பற்றியும் படையணி அதிகாரிகளுக்குக் கூறியுள்ளார். இவ்வாறு ஊனப்பட்டவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படியும் கட்டளையிடும்போது தற்கொலைக் குண்டுகள் பொருத்தப்பட்ட கவச அணிகளை அணிந்து கொண்டு இராணுவத்தினர் முன்பாய்ந்து தற்கொலைத் தாக்குதலை நடத்தவேண்டும் எனவும் ஊனப்பட்ட புலிகள் இயக்கத்தினருக்குப் பிரபாகரன் அறிவித்துள்ளார். இவ்வாறு ஊனப்பட்ட தற்கொலைப் படையணியினர் இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடிக்க தாக்குதலை நடத்த தற்கொலைக் கவச அணியுடன் தயாராக இருப்பதுடன் தீவிர பயிற்சிபெற்ற 50 தற்கொலைப் படையணியினர் தற்போது பிரபாகரன் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி நிலையத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு வலயப்பிரதேசங்களில் தற்போது சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் புலிகள் இயக்கத்தினரால் பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. தப்பிவந்துள்ள மேற்படி புலிகள் இயக்கப் படையணித்தலைவர் குறித்த ஊனப்பட்டவர்கள் அடங்கிய தற்கொலைப் படையணிபற்றி தகவல் தெரிவித்துள்ள அதேவேளை பிரபாகரன் இராணுவத்துக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் இறுதித் தாக்குதலுக்காகச் செய்துள்ள படையணி ஏற்பாடுகள் பற்றிய இரகசியத் தகவல்களையும் கூறியுள்ளார். இதற்கேற்ப இராணுவத்துக்கு எதிரான இறுதித் தாக்குதலுக்காக படையணியினரை பொட்டுஅம்மான் தலைமை தாங்கிச் செல்வார் எனவும் அவருக்கு உதவியாக சூசை, கபில்அம்மான் மற்றும் படையணித்தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு பிரபாகரன் ஊனப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தற்கொலைப் படையணி அமைத்திருப்பது பற்றியும் உறுப்பினர்களிடையே பெரும் குழப்பநிலையும் எதிர்ப்பும் தோன்றியுள்ளதாக மேலும் மேற்படி இராணுவத்திடம் சரணடைந்த படையணித்தலைவர் கூறியுள்ளார்.
திவயின: செய்தியும் விமர்சனமும் 10.05.2009
Thinakural






0 விமர்சனங்கள்:
Post a Comment