புலிகள் சார்பு ஊடகங்கள் சர்வதேச சமூகத்தை தவறான வழிக்கு இட்டுச்செல்வதாக குற்றச்சாட்டு
மோதல் வலயத்திலுள்ள பொதுமக்களின் இழப்புகள் தொடர்பாக "கட்டுக்கதை'களை பரப்புவதன் மூலம் புலிகளுக்கு சார்பான ஊடகமானது சர்வதேச சமூகத்துக்கு தவறான தகவல்களை வழங்குவதாக அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் ஷெல் தாக்குதலில் 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக "தமிழ்நெற்' இணையத்தளம் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது. இதனை "பிரசாரம்' என்று அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.
இந்தக் கட்டுக்கதைகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இவை புலிகளுக்கு சார்பான இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இலங்கை அரசிற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் மாசு கற்பிக்கும் நோக்கத்துடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் உலகின் பாரிய பணயக் கைதிகள் மீட்புப் பணியில் பாதுகாப்பு படையினர் பங்களிப்பு வழங்கி வருகின்றமை தெளிவான சாட்சியமாகும். புலிகள் தாங்கிகள், மோட்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தியபோதும் 116,000 பொதுமக்களை படையினர் பாதுகாத்துள்ளனர்.
ஆளற்ற விமானப்புகைப்படப் பதிவுகள் புலிகளின் உண்மையான தன்மையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளன.
"விடுதலைப்புலிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை மீட்கும் மனிதாபிமானப் பணி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பணியில் அரசாங்கமும் படையினரும் இறுதிக்கட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு எதிராகப் புலிகளுக்கு சார்பான பிரசார இயந்திரமானது தமது நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளது' என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட தாக்குதல் சூன்ய வலயத்திற்கு சமீபமாக 53, 58 ஆவது படையணிகள் பணயக்கைதிகளை மீட்கும் பணியை தற்போது மேற்கொண்டுள்ளனர். புலிகளின் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கு முயற்சிக்கும் பொதுமக்களை புலிகள் பலவந்தமாகத் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு சாத்தியமான பாதைகளில் புலிகள் ஆட்களை வைத்திருக்கின்றனர். அப்பகுதியிலிருந்து தப்புவதற்கு முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது சூடு நடத்துவதைத் தவிர தேர்வு இல்லை. எல்லையில் பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் மீது மோட்டார் தாக்குதல்களை புலிகள் நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது. புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் அவர்களை இலக்கு வைத்து மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல மணித்தியாலங்கள் அது நீடித்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை புலிகளால் அதிகளவு இரத்தப் பெருக்கு ஏற்பட்டதற்கு சாட்சியமாக 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்தனர். முல்லைத்தீவு கடல் வழியாக படையினரின் பகுதிகளுக்கு சுமார் 300 பொதுமக்கள் பிரவேசிக்க முயற்சித்த போது புலிகள் சுட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்குச் சூட்டின் மத்தியில் பொதுமக்கள் தப்பி வந்ததாகவும் கடுமையாக காயமடைந்த 12 பேர் அநுராதபுரம் வைத்தியசாலையில் விமானப்படையினரால் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment