அரசியல்த் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும்: ஹிலாரி கிளின்டன்
விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் அரசியல்த் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இடம்பெயர்ந்திருக்கும் 300,000 இலட்சம் மக்களையும் உடனடியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவர், ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.
மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலேயே எதிர்கால சமாதானம் தங்கியிருக்கிறதென்பதுடன், தமிழ் மக்களை உள்ளடக்கியதான அதிகாரப்பரவலாக்கத்தை அமுல்படுத்தவேண்டிய தேவையிருக்கிறதென மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஹிலாரி கிளின்டன் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுடன் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கலந்துரையாடிய பின்னரே, ஹிலாரி கிளின்டன் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்ததாகவும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின்; பேச்சாளர் ஐயன் ஹெலி ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தி;ன் மனிதாபிமான நிலைவரங்களை நேரில்ப் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கவேண்டுமென இலங்கையிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஜயன் ஹெலி குறிப்பிட்டார்.
26 வருட காலமாக நிலவி வந்த மோதல்கள் முடிவுக்கொண்டுவரப்பட்டிருப்பதை அமெரிக்கா நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களப் பேச்சாளர், சமாதானத்தை முன்னெடுப்பதும், ஜனநாயகம் மற்றும் சகிப்புத் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் தற்போது நல்ல சந்தர்ப்பமெனவும் கூறியுள்ளார்.
“இலங்கை அரசாங்கம் சமாதானத்தை வென்றெடுக்கும் என்பதில் தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதுடன், தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினத்தவருக்கான அதிகாரப் பரவாக்கலை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை; அரசாங்கம் மேற்கொள்ளும்” என்றார் அமெரிக்க இராஜங்கத் திணைக்களப் பேச்சாளர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment