ஈழம் என்ற பெயரில் உள்ள கட்சிகளை ரத்து செய்ய வேண்டும்- ஜ.தே.க!
ஈழக் கோரிக்கைகளை கொண்ட கட்சிகளை ரத்துச் செய்து அவற்றை வேறு பெயரில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் ஈழக் கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் தோற்கடிக்க முடியுமென கூறியுள்ளது.
அரசு பயங்கரவாதத்தை அழித்துள்ள நிலையில், ஈழக் கோரிக்கையை தோற்கடிக்க ஐ.தே.க. அரசுக்கு முழுமையாக உதவும் என்று அக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்றுத்தந்த நாடுகளுடன் சிறப்பான உறவுகளை பேண வேண்டும். அதுபோல் எதிராக வாக்களித்த நாடுகளுடனும் நாம் நல்லுறவுகளை இராஜதந்திர ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளே தமது வாக்குகளை பிரயோகித்த நிலையில் அவர்களுடனான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் எமது ஏற்றுமதிகள் அதிகமாக மேற்கு நாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதுடன், ஈழக்கோரிக்கையை சர்வதேச ரீதியிலும் தோற்கடிக்க வேண்டும். இதற்கு சர்வதேச உதவியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்.
இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள அதிகளவான மக்கள் பல காலமாக புலிகளின் பிடியில் இருந்துள்ளனர். இதனால் அவர்களின் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் உட்பட நிர்வாகத்தில் இருந்துள்ளதனால் அம்மக்களது சிந்தனை ஈழமாகவுள்ளது. இந்த சிந்தனையிலிருந்து இவர்களை விடுவித்து நாம் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு அம்மக்களுக்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இதன் மூலமே இதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள ஈழக் கோரிக்கையை தோற்கடிக்க முடியும்.
தமிழ் மக்களுக்கான பிரச்சினை 1956 இல் சிங்கள மொழி அமுல்படுத்தப்பட்டதிலிருந்து ஆரம்பமானது முதல் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் என இதற்கு பின் வந்த தலைவர்களால் தீர்வு முன்வைக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகளால் இல்லாமல் செய்யப்பட்டது.
அரசாங்கம் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டுமென கோருகையில் அரசிலுள்ள மற்றுமொரு தரப்பினர் இன்னுமொன்றை கூறுகின்றனர். எனவே கடந்த கால பிழைகளை அரசிலுள்ள ஒரு சிலரால் மீண்டும் செய்யாது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு நாம் ஒத்துழைக்க தயாராகவுள்ளோம். இந்நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அரசிலுள்ள ஒரு சில அமைச்சர்கள் இது தொடர்பாக எம்மை விமர்சிப்பதுடன், சேறு பூசுகின்றனர். தேவையில்லாமல் நாம் கட்சி அடிப்படையில் செயற்படுவோம். எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
கடந்த காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியவற்றை ஒவ்வொன்றாக காட்டி கட்சியை சேறு பூசுகின்றனர். எதிர்க்கட்சியென்ற வகையில் அரசின் சரி, பிழைகளை விமர்சிக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் குறித்தும் விமர்சித்தோம். உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் யாரென தெரியாதுள்ளது.
நாட்டில் சுதந்திரமான சுகாதார சேவையில்லை. மக்கள் வைத்தியரையே சந்திக்கின்றனர். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை மருந்தகங்களில் அவர்கள் வாங்குகின்றனர். நாம் சுகாதாரம், கல்வி மற்றும் பொருட்கள் விலையேற்றம் குறித்தே கருத்து தெரிவித்தோம்.
இந்நிலையில் எமக்கு சேறு பூசுவதை விடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசுக்கு அக்கறையிருக்குமாயின் எமது உதவி குறித்து பதிலளிக்கட்டும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment