புலித்தலைமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டிருந்து மீண்ட மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
புலித்தலைமையின் கோரப் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா, சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி மருத்துவர்கள் வன்னியில் இருந்த இறுதிக் காலங்களில் தவறான செய்திகளை வெளியிட்டார்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
வன்னிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கால கட்டங்களில் புலித்தலைமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டிருந்த இம்மருத்துவர்கள் புலித்தலைமையின் நிர்ப்பந்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த இக்கட்டான நிலையினையும் மேற்படி மருத்துவர்கள் வன்னியில் எமது அப்பாவி மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதாபிமான பணிகளையும் மனதில் கொண்டு இவர்களை இவர்களது உறவினர்களுடன் ஒன்று சேர்க்க உதவுமாறு ஜனாதிபதி அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இம்மருத்துவர்களது உறவினர்கள் தன்னைச் சந்தித்து இவர்களது விடுதலை தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவர்களது விடுதலை தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் சாதகமான முடிவை எடுப்பார் எனத் தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment