புலிகள் சமாதானப் பேச்சுக்கு வந்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார்
2005 இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சமாதானப் பேச்சுக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். விடுதலைப் புலிகள் முதல் சுற்றுக்கு வந்தனர்.
பின்னர் இரண்டாவது சுற்றுக்கு வர மறுத்தனர். அதற்கு வந்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார். யுத்த அழிவுகளும் ஏற்பட்டிருக்காது சமாதான முறையில் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டிருக்குமென வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால தெரணியகலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மித்திரபால,
நாட்டில் 30 வருடகால யுத்தத்தால் சகல இனமக்களுமே பாதிக்கப்பட்டனர். அதனை முடித்த பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது.
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி விடுதலைப் புலிகள் அப்பாவி தமிழ் இளைஞர்கள், யுவதிகளை ஆயுதம் ஏந்திப் போராட வைத்து தவறான வழிக்கு இட்டுச் சென்றனர்.
இதனால், கிடைத்த பலன் என்ன? தமிழ் மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டும் அகதிகளாகவும் மாற்றப்பட்டனர்.
எல்லாத் தமிழர்களும் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. தெற்கில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழுகின்றனர்.
தமிழ் மக்களின் மீது ஐக்கிய தேசியக்கட்சியினர் மேற்கொண்ட வன்முறைகளால்தான் இந்த யுத்தம் மூண்டது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் ஆரம்பித்த யுத்தம் எமது ஆட்சியில் முடிவுக்கு வந்தது.
யுத்தம் முடிவுற்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவர்களின் உரிமைகளை வழங்கி அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதுதான் ஜனாதிபதியின் அடுத்த நடவடிக்கையாகும் என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment