இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அல் - ஜஸீராவில் செய்திகள்

இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அல் ஜஸீரா தவறான செய்திகளை ஒளிபரப்பி வருவதாக புத்திஜீவிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சீ. என். என். , பி. பி. ஸி. போன்ற மேற்குலக ஊடகங்களில் தவறான செய்திகளை ஒளிபரப்பி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாற்றூடகமாகவே அல்ஜஸீரா தனது சேவையை ஆரம்பித்தது.
அப்படியான ஒரு ஊடகம் இலங்கை விடயத்தில் தவறாகச் செயற்படுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமது நாட்டுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிடும் போது பக்கச் சார்பின்மையை பாதுகாக்கும் இந்த சர்வதேச ஊடகங்கள் மூன்றாம் உலக நாடுகளுடன் தொடர்புடைய செய்திகள் தொடர்பில் மாற்றமாகவே செயற்படுகின்றன.
அல்- ஜெkரா ஊடகம் எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வெளியிட்டுவரும் செய்திகள் மூலம் இது புலனாகின்றது.
அல்- ஜெஸீரா சர்வதேச ஊடக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கையில்:-
tஇலங்கை முஸ்லிம் உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத்:-
வன்னியில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் அரச படைகளால் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் திரிபுபடுத்திய செய்திகளை ஒளிபரப்பு செய்வதை அறிந்து நாம் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் சம்பந்தமாக பல வெளிநாட்டு ஊடகங்கள் பொய்யான திரிபுபடுத்திய செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டதன் காரணமாகவே அல்- ஜkரா போன்ற மாற்று ஊடகத்தின் அவசியம் உலகினால் உணரப்பட்டது.
ஆனால், அல் ஜஸீராவும் எமது நாடு தொடர்பாக இவ்வாறு பொய்யான செய்திகளையும், தகவல்களையும் ஒளிபரப்புவதையிட்டு இலங்கை முஸ்லிம் சமயத் தலைவர் என்றவகையில் நான் பெரிதும் கவலையடைகிறேன்.
அதேநேரம், அல்- ஜஸீராவின் இச் செயற்பாட்டை வன்மையாகவும் கண்டிக்கின்றேன்.
வெளிநாடுகளிலிருந்து வருகின்ற பிரதிநிதிகள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் அளித்துவருகின்ற சேவைகளைப் பார்த்து அரசைப் பெரிதும் மெச்சுகிறார்கள்.
விடுவிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அளிப்பது போன்று வேறு எந்த நாடுமே சேவை அளிப்பதில்லை என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அல்- ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்தினர் புலி ஆதரவாளர்களால் தவறாக வழி நடத்தப்பட்டதால் தான் அவர்கள் இவ்வாறு பொய்யான செய்திகளை ஒளிபரப்புகிறார்கள் என்பது தெரிகிறது.
ஆகவே இலங்கையின் கள நிலவரத்தை அறிந்து உண்மைச் செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு அல்- ஜஸீரா நிறுவனத்தினரை இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன்.
* சர்வதேச இந்து மதபீட பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான இறைமை உண்டு. இந்த இறைமையை மீறி யார் நடந்த கொண்டாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
செய்திகள் உண்மை, பொய் என்பதற்கு புறம்பாக எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி அந்த நாட்டு அரசினது அனுமதியுடனேயே செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட வேண்டியது அவர்களது பொறுப்பாகும். அதுதான் உண்மையானதும் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமாகும்.
உலகில் எத்தனையோ செய்திகள் வெளிவராமல் உள்ளன. அது அந்தந்த நாடுகள் தங்களது இறைமையைப் பேணுவதற்காகவும் நாட்டை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதற்காகவும் அந்த நாடுகள் அவ்வாறு நடந்து கொள்கின்றன.
இந்த வகையில் வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கை அரசின் அனுமதியைப் பெறாமல் தகவல்களை வெளியிடுவதும் நடந்து கொள்வதும் முறையற்ற செயலாகும்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்கள் மூலமாக தெளிவானதும், சிறந்ததுமான தகவல்களை வெளிக் கொண்டுவர வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யூகோஸ்லாவியா மற்றும் ஹங்கேரியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், சிங்கப்பூருக்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகருமான ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் ஸரூக்:-
அல்-ஜஸீரா உட்பட சில ஆங்கில ஊடகங்கள் இலங்கை விவகாரம் தொடர்பாக பொய்யானதும், திரிபுபடுத்தப்பட்டதுமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த ஊடகங்கள் செய்திகள் தொடர்பாக சரியான முறையில் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளாமல் அவற்றை வெளியிடுகின்றன.
அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை அமைந்திருக்கின்றது. சுயலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படும் சிலர் வழங்கும் தகவல்களை மாத்திரம் வைத்துக்கொண்டு உண்மையை அறியாமல் செய்திகளை வெளியிடுவது எமக்குப் பெரிதும் கவலையளிக்கின்றது.
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சகல மக்களுக்கும் அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்துகொடுத்திருக்கின்றது. இம்மக்களுக்கான சேவைகளின்போது ஏற்படுகின்ற சிறுசிறு குறைபாடுகளையும் கூட உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இம்மக்களுக்கான நிவாரண சேவையில் அரச நிறுவனங்களுக்கு மேலதிகமாக முப்பது, நாற்பது அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அத்தோடு பல தொண்டர் அமைப்புக்களும் இம்மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இம்மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென நடமாடும் ஆஸ்பத்திரிகளையும் கூட அமைத்திருக்கிறது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள் மக்களுக்கென துரிதமாகவும், விரைவாகவும் பாரியளவு நலன்புரி சேவைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்து வருகின்றது. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல் பொய்யான செய்திகளை வெளியிட்டு இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இந்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் கள நிலமைகளை சரியான முறையில் அறிந்து உண்மையை வெளியிடுவதே பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாக இருக்க வேண்டும்.
*களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் பிரிவு கலாநிதி ரோகண லக்ஷ்மன் பியதாஸ:-
உலகிலுள்ள ஒவ்வொரு வளர்முக நாடும் சுயாதீனமாக வளர்ச்சி அடையும்போது அதனை மேற்குலக நாடுகள் தவறான பார்வையிலேயே நோக்குகின்றன. இதற்கு 1970 தசாப்த கால வியட்நாம் யுத்தம் சிறந்த உதாரணம்.
அமெரிக்கா, வியட்னாமை ஆக்கிரமித்தபோது அந்த ஆக்கிரமிப்பிலிருந்து அந்நாட்டை மீட்டெடுக்கவென முன்வந்த தேசப் பற்றாளர்களை மேற்குலக ஊடகங்கள் ‘வியட்கொங்’ என்று கூறின. இன்று பாகிஸ்தானில் அல்கைதா இயக்கம் எழுச்சி பெற்றுள்ளது. இருந்தும் அது குறித்து அமெரிக்கா எதுவும் பேசுவதில்லை. அவர்கள் பயங்கரவாதத்தை தமது நிகழ்ச்சி நிரலின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். இது குறித்து எந்த ஊடகமும் கதைப்பதில்லை.
இன்று இலங்கை, நாடு என்றவகையில் எழுச்சி பெற்றிருக்கையில் மனித உரிமை மீறல், பெண் துஷ்பிரயோகம் இடம்பெறும் நாடு என்ற அபிப்பிராயம் உலகில் உருவாக்கப்படுகின்றது.
எமது நாடு சுயாதீனமாக எழுச்சி பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவதற்கு சர்வதேச ஊடகங்கள் செயற்படுகின்றன. இதுவும் ஒருவகையில் பயங்கரவாத செயற்பாடாகும்.
கடந்த வாரத்திற்குள் அல்- ஜkரா ஊடக வலையமைப்பு இலங்கையில் இடம்பெறுகின்ற மனிதாபிமான நடவடிக்கைக்கு எதிராக வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களை பிரசாரம் செய்கின்றன. அவர்கள் எமது பாதுகாப்பு படையினர் இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்தமை குறித்து எந்த அறிக்கையையும் பிரசாரம் செய்யவில்லை.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த சர்வசே ஊடகங்களுக்கு எமது நாட்டு அரசியல் கட்சிகளும் சில ஊடகங்களும் வால் பிடிக்கின்றன. இருந்தாலும் பொய் எந்நாளும் நிலைக்காது என்பதை சொல்லியாக வேண்டும். உண்மை வெளிப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சர்வதேச ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்ற இப்பிரசார நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.






0 விமர்சனங்கள்:
Post a Comment