பிரபாகரனின் மரணத்தில் நக்கீரன் பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி (படங்கள் இணைப்பு)

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை இலங்கை அரசு உறுதியாக ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறது. பிரபாகரன் உடலை கருணா, தயா மாஸ்டர் இருவரும் அடையாளங் கண்டு உறுதிப்படுத்திய செய்திகளும் புகைப்படங்களுடன் ஆதாரங்களாக வெளிவந்துள்ளன. எனினும் புலம்பெயர்வாழ் புலிகளின் ஆதரவாளர்கள் இவையாவும் பொய்யான செய்திகள் என்றும் தலைவர் திரும்பி வருவார் என கூறிக்கொண்டு வருகின்றனர். பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என்கிற விவாதங்கள் இன்னும் ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன. அதேசமயம் பிரபாகரன் உயிரோடு வந்து அதிசயத்தை நிகழ்த்துவார் என புலிசார் ஊடகங்கள் இன்னும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றன.
புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்ட பின்னரும் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் எதனையும் புலிசார் ஊடகங்களால் நிருபணம் செய்ய முடியவில்லை. தலைவரை யாரும் நெருங்கமுடியாது என்கிற காலங்காலமாக கட்டியமைக்கப்பட்ட பிரச்சாரத்தின் கீழ் ஊறிப்போனவர்கள் தலைவர் உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியாமல் வெறும் வாய்ஜாலங்;களால் தலைவரின் வரவை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
.இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் புலனாய்வு பத்திரிகையான நக்கீரன் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என புதிய செய்தியொன்றை அட்டைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிட முடியாத நக்கீரன் பத்திரிகை பிரபாகரன் தனது இறப்பு பற்றிய தொலைகாட்சி செய்தியை சிரித்துக்கொண்டு பார்ப்பதாக புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை புலிகளின் ஊடகங்களும் தீபம் தொலைக்காட்சியும் முக்கியத்துவப்படுத்தி நேற்றைய தினம் வெளியிட்டுள்ளன.
நக்கீரன் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படம் 02.03.2003 புலிகளின் தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளிவந்ததாகும். பிரபாகரன் பாலசிங்கத்துடன் உரையாடுகின்ற இந்தப்படத்தை உல்டா பண்ணி தலைவர் உயிரோடு இருப்பதாக காட்ட முற்பட்டதன் மூலம் நக்கீரனின் புலனாய்வின் தரத்தை கேலிக்குள்ளாக்கியுள்ளக்கப்பட்டுள்ளது. இத்தகைய புகைப்பட மோசடியை அம்பலப்படுத்தி தேனீ இணையத்தளம் 2004ம் ஆண்டு ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்து. அதே புகைப்படத்தை நக்கீரன் பத்திரிகை பிரபாகரன் உயிரோடு இருப்பதற்காக தற்போது பயன்படுத்தியுள்ளது.
சந்தனக்கடத்தல் வீரப்பனின் விடயத்தில் நக்கீரன் பல உண்மைகளைக் கொண்டு வந்ததை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பிரபாகரனின் கொலையில்; நக்கீரனின் இந்த புதிய கண்டு பிடிப்பு புகைப்பட மோசடி மூலம் அம்பலமாகியுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையான செய்தி. பாசிஸ்டுகளின் மரணங்கள் இத்தகைய வழிகளில்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பது வரலாறு தெரிவிக்கின்ற உண்மையாகும். இதில் பிரபாகரனின் மரணம் எந்தவிதத்திலும் விதிவிலக்கல்ல. இல்லாத ஒருவரை உயிரோடு இருப்பதாக காட்ட முனைவதன் நோக்கம்தான் என்ன?. புலிகளின் தலைவரின் குரலைக்கூட வெளியில் கொண்டுவர முடியாத நிலையில்தான் புலம்பெயர் புலிகளின் பிரச்சார ஊடகங்களும் ஆதரவாளர்களும் உள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற மடத்தனமான புலனாய்வு செய்திகளை வெளியிட்டு புலிகளின் மரணத்தை மேலும் கேவலப்படுத்தப்படுகின்றது.
02.03.2003 அன்று தமிழ்நெற்றில் வெளிவந்த புகைப்படங்கள்

நன்றி:தேணி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment