இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இறுதி அறிக்கை தயார் : சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் முடிவடைந்ததும் சமர்ப்பிப்பதற்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை இறுதிப்படுத்தி வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து, வெஸ்மினிஸ்டர் முறையை உருவாக்கும் யோசனைத் திட்டங்கள் அடங்கிய இறுதித் தீர்வுத்திட்டம் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் நோக்கிலேயே இறுதி அறிக்கை தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான 11 கட்சிகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த சில வாரங்களாகக் கூடி இறுதி அறிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இந்த இறுதி அறிக்கை தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார் திஸ்ஸ வித்தாரண.
13வது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சித்தபோது, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகத் தெளிவான நிலைப்பாடு இன்மையால் பிரச்சினை தோன்றியது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், தற்பொழுது புதிய அரசியலமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பிரச்சினை இல்லாமல் போயுள்ளது என்றார்.
அத்துடன், உரிய பொறிமுறை ஊடாக மாகாணசபைகளுக்குத் தேவையானளவு நிதியுதவியை வழங்குவதற்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண மேலும் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment