இடம்பெயர்ந்தவர்களைக் கையாழும் விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. விதிமுறை
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் விடயங்களைக் கையாழுதல் மற்றும் மனிதநேய விவகாரங்கள் குறித்து சர்வதேசத்துடன் இணைந்துசெயற்படுதல் போன்றவற்றில் பின்பற்றவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை முன்வைத்துள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகள் தொடர்பாக உதவிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை கொழும்பில் கூடி ஆராயும்போது இந்த விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த விதிமுறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக இலங்கைவந்த வோல்டர் கலின் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தார்.
மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
“இந்த வழிகாட்டி நடைமுறைகள் சர்வதேசச் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு உதவியாகவிருக்கும். இதனை அரசாங்கம் பின்பற்றவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறோம்” என அந்த ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கும், உதவிவழங்கும் நாடுகள் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகளுக்குமிடையில் நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் வெளியேற அனுமதித்தல் மற்றும் அவர்களை விரைவில் மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கான அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment