யார் கூறுவது பொய்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
இலங்கைத் தமிழர்கள் படும் அவலங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு பொய் கூறுபவர்கள் யார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும்,சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை அனுப்புவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷனயாப்பா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தாம் என்ன பொய்யான தகவல்களை கொடுத்தோம் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.
யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பலநூறு பேர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா? யுத்தப் பிரதேசத்தில் உள்ள 1,50,000 மக்களுக்கு மாதக்கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப்பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பொய்யா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் இருந்த வன்னிப்பிரதேசத்தில் 70,000 பேர் இருப்பதாக உலகம் முழுக்க பொய்யைக்கூறி 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடந்த 6 மாதத்துக்கு மேலாக பட்டினி போட்டவர்கள் யார் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் அவர்,இன்னும் ஏறத்தாழ 150,000 மக்கள் புதுமாத்தளனில் இருப்பதாகக் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment