புல்மோட்டையில் தங்கியுள்ள வன்னி அகதிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் நகைகளை கொள்வனவு செய்து கொள்ளை லாபம்பெறும் உள்ளுர்வாசிகள்..!
திருமலை புல்மோட்டையில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி அகதிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சில உள்ளுர் வாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் தமது பிள்ளைகளுக்கு பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வாங்கவும் பணம் இல்லாத காரணத்தினால் தமது தங்க நகைகளை விற்றுப் பணம் பெற வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் நலன்புரி நிலையங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாததனால் நகைகளை விற்றுப் பணத்தைப் பெறுவதற்கு முகாம்களுக்கு பணிபுரிய வரும் உள்ளுர்வாசிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அந்த உள்ளுர் வாசிகள் அகதிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு நகைகளை வாங்குகின்றனர். அகதிகளும் தமக்கு அவசியம் பணம் தேவைப்படுவதால் இந்த உள்ளுர் நபர்களிடம் குறைந்த விலைக்கு நகைகளை விற்று பணத்தைப் பெறுகின்றனர். உள்ளுர் வாசிகள் இந்த நகைகளை வெளியே கொண்டுசென்று சரியான பவுண் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெறுகின்றனர். தமக்கு நடமாடும் வங்கி சேவையொன்றை ஆரம்பித்தால் தாம் நியாய விலைக்கு நகைகளை அடகுவைத்து பணத்தைப் பெறலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment