முரளிதரன், இனியபாரதி இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம். தமிழ்ச்செல்வனின் மனைவி உட்பட பல முன்னாள் புலி உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடினர்.
புலிகளின் முன்னாள் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு. இனியபாரதி உட்பட்ட குழுவொன்று இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து அங்கு முகாம்களில் தங்கியுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளனர்.
திரு. இனியபாரதி அவ்விஜயம் பற்றி கூறுகையில், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்காக நாம் அங்கு சென்றோம். முன்னாள் போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து உரையாட வாய்ப்புக்கிடைத்தது. அங்கு தமிழ்ச்செல்வனின் மனைவி குழந்தைகளைச் சந்தித்தோம், அவர் முகாமிலிருந்து வெளியேறி கொழும்பில் உள்ள தமது உறவினர்களுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுதளைச் செய்துதருவதாக உறுதியளித்த அமைச்சர் முரளிதரன், பா.உ பசில் ராஜபக்ச அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழ்ச்செல்வனின் மனைவியின் வேண்டுதலை தெரிவித்தபோது, பசில் ராஜபக்ச அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் ஓரிரு நாட்களில் கொழும்பு வருவர்.
அங்குள்ள மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புவதற்குமான தேவைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் நாமும் எம்மால் முடிந்தவற்றை அம்மக்களுக்கு தொடர்ந்தும் செய்வதற்கு ஆவலாக உள்ளோம் என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment