நினைத்தேன் எழுதுகிறேன் - துக்ளக் ஆசிரியர் சோ
இது நல்லதல்ல!
நான் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக தலைவர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.
தேர்தலில் நல்ல வெற்றிகளைப் பெற்று, அடுத்த மத்திய அரசில் அதிமுக இடம் பெற்றாலும், ஜெயலலிதா சொல்லதை மட்டும் கேட்கிற அரசாக, அந்த அரசு இருப்பதற்கு வாய்ப்பில்லை. பல கட்சிகளின் ஆதரவுடன், ஒரு கட்சியின் தலைமையில் அரசு அமையும்.
கம்ய+னிஸ்ட்கள் அந்த அரசில் இருந்தாலோ அவர்கள் ஆதரவு அந்த ஆட்சிக்கு தேவைப்பட்டாலோ இலங்கை மீது படையெடுப்பு நடத்துவதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
காங்கிரஸ் ஆதரவு அந்த அரசுக்குத் தேவைப்பட்டாலும் சரி, காங்கிரஸ் தலைமையில் அந்த அரசு அமைந்தாலும் சரி - இதே நிலைதான். இலங்கையைப் பிளக்க, இங்கிருந்து ராணுவத்தை அனுப்புவதை காங்கிரஸ் ஏற்காது.
பா.ஜ.க.வின் நிலையும் இதுவேதான். என்பது அக்கட்சியால் தெளிவாக்கப்பட்டு விட்டதால், அந்தக் கட்சியின் ஆட்சியானாலும், அக்கட்சி ஆதரவு பெற்ற ஆட்சியானாலும் படையெடுப்பு நடக்காது.
பா.ஜ.க. காங்கிரஸ் கம்ய+னிஸ்ட்கள் ஆகிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல், தொடர்பு இல்லாமல், ஒரு ஆட்சி அமையப் போவதில்லை. ஈழத்தை இங்கிருந்து யாரும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை.
பங்களாதேஷ் (அப்போது கிழக்குப் பாகிஸ்தான்) மீது இந்திய ராணுவ நடவடிக்கை, மற்றும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை ஆகியவற்றை ஜெயலலிதா உதாரணம் காட்டியிருக்கிறார் அவை இரண்டும், இந்த ஈழ சமாச்சாரத்தில் இருந்து வேறானவை. பங்களாதேஷ் (கிழக்குப் பாகிஸ்தான்) தேர்தலில் வெற்றி பெற்ற முஜிப+ர் ரஹ்மானை சிறையிலிட்டு, ராணுவத்தை அனுப்பி மக்களை அடக்க பாகிஸ்தான் முனைந்தபோது - பாகிஸ்தான் ராணுவத்தினரால் துரத்தப்பட்டு, இந்தியாவிற்குள் ஒரு கோடிக்கு மேல் அகதிகள் வந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர். மேலும் மேலும் பங்களாதேஷ் மக்களை அகதிகளாக இந்தியாவிற்குள் விரட்டினர். சர்வதேச நாடுகள் இதை கண்டித்தன. பாகிஸ்தான் அலட்சியம் செய்தது.
அப்போது பங்களாதேஷில் தீவிரவாதம் இருக்கவில்லை, நாசவேலைகள் நடக்கவில்லை. தேர்தலில் போட்டியிட்டு வென்ற கட்சியினால், ஜனநாயக உரிமையை கோரி இயக்கம் நடத்தப்பட்டது. அந்த நிலையில், பிரிவினை கோரி நடத்தப்பட்ட இயக்கம் அல்ல அது. அது அடக்கப்பட்டு, சர்வதேச அளவில் பாகிஸ்தான் கண்டனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில், இந்தியாவிற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அகதிகளை அனுப்பியதால் விளைந்த பொருளாதார சுமையையும், பாகிஸ்தான் ராணுவம் தான் இந்தியா மீது சுமத்தியது. அகதிகளில் எத்தனை பேர் பாகிஸ்தான் சார்பாகச் சதி செய்ய வந்தார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது, அதை நிறுத்தத்தான் - நம்மீது திணிக்கப்பட்ட ஒரு கோடி அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காணத்தான் - ராணுவம் பங்களாதேஷ் (கிழக்குப் பாகிஸ்தான்) சென்றது. இலங்கைத் தமிழர்கள் எல்லாருமே இந்தியா வந்தால் கூட, இதில் பாதியை எட்டாது.
இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றது - இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை, நாட்டைப் பிளக்க, நமது படை செல்லவில்லை. இலங்கையின் ஒருமைப்பாட்டை குலைக்காமல், அமைதியையும், ஜனநாயக வழிமுறையையும் நிலைநாட்டவே அமைதிப்படையாக இலங்கை அரசும் சம்மதித்து, நமது ராணுவம் அனுப்பப்பட்டது.
இவை இரண்டும் - இன்னோரு நாட்டிற்கு படையை அனுப்பி, பிளவு வேலை நடந்த முன்னோடிகள் அல்ல. தேர்தல் பிரச்சார வேகத்தில், ஈழம், தனிநாடு, படையெடுப்பு என்றெல்லாம் பேசுவது, நல்லதல்ல.






0 விமர்சனங்கள்:
Post a Comment