இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான உணவைத் தாமே தயாரிப்பதற்கு நடவடிக்கை

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்து உண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கதிர்காமர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் தமக்கான உணவைத் தாமே சமைத்து உண்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏனைய பகுதிகளிலும் இந்த நடைமுறையை அமுல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் அலுவலகத்தின் புனர்வாழ்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எம்மிடம் கூறினார்.
ஒவ்வொரு குடும்பங்களும் தமக்குத் தேவையான உணவுகளைத் தாமே தயாரித்து உண்பதற்கான பாத்திரங்கள் மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 40,000 குடும்பப் பொதிகள் மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை முதல் இந்திய நிவாரணப் பொருள்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், முதற்கட்டமாக இந்தப் பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு தனியாகச் சமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
குடும்பங்கள் ஒவ்வொன்றும் தமக்கான உணவைத் தயாரிப்பதற்குத் தேவையான அரிசி மற்றும் உலருணவுப் பொருள்களை உலக உணவுத் திட்டம் வழங்கி வருவதுடன், ஏனைய உபபொருள்களை அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்குவதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தமக்கான உணவைத் தயாரிப்பதாகவும், அங்குள்ள குடும்பங்களும் விரைவில் தமக்கான உணவைத் தாமே தயாரித்து உண்பதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
2,000 பேரைக் கொண்ட ஐந்து குழுக்கள் சமைத்து உண்பதற்கான பொருள்களைத் தாம் வழங்கி வருவதாக வவுனியாவில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
சமைத்த உணவுகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும்போது ஏற்படும் தாமதத்தால் அவை பழுதடைந்த நிலையில் செல்வதால், இதனால் அவற்றை அங்குள்ள மக்கள் வீசவேண்டிய நிலை காணப்படுகிறது. எனினும், இடம்பெயர்ந்த மக்கள் உணவுப் பொதிகளை வீசுவதாக சிலர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான உணவைத் தாமே தயாரித்து உண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க கடந்தவாரம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, வன்னியிலிருந்து யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் 11,000ற்கும் அதிகமான மக்கள் தமக்கான உணவுகளைத் தாமே முகாம்களில் சமைத்து உண்கின்றனர். இதற்குத் தேவையான பொருள்களை கியூடெக் நிறுவனமும், ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
அவ்வாறு தமக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாமே சமைத்து உண்கின்றபோதும் மதிய உணவை உண்பதற்கு மாலை 4 மணியாவதாக முகாம்களிலுள்ள சிலர் கூறுகின்றனர். இராணுவத் தொடரணிகளால் வீதிகள் மூடப்படும்போது சமையலுக்குத் தேவையான மரக்கறி மற்றும் மீன்களை கொள்வனவு செய்து உரியநேரத்தில் விநியோகிக்கமுடியாத நிலை இருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.
இது இவ்விதமிருக்க, பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்வரும் சில தினங்களில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 200,000 இலட்சம் பேரைப் பராமரிப்பதில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும், அரசாங்கமும் மேலும் ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்ந்தால் மேலும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுமென மனிதநேய ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment