மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்
பொதுமக்கள் தம்முடன் இருக்கும்வரை தமக்குத் தோல்வி ஏற்படாது என விடுதலைப் புலிகளின அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்கவில்லையென்ற ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டையும் அவர் மீண்டும் மறுத்துள்ளார்.
“மக்கள் எம்மைவிட்டுச் செல்லவிரும்பவில்லை” என நடேசன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாகவுக்குக் கூறியுள்ளார்.
அதேநேரம், பொதுமக்கள் வாழ்ந்துவரும் பகுதிகள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்துவதாகவும், பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இன்னமும் வன்னியில் இருப்பதாகவும், தாம் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் மேலும் கூறினார்.
“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியும் என நாம் நம்புகிறோம்” என்றார் அவர்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் வசமிருந்த மேலும் சிறிய நிலப்பரப்பை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மண்அணைகளை மீட்டிருப்பதுடன், விடுதலைப் புலிகள் பலமான எதிர்த்தாக்குதல்களை நடத்திவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டது: இராணுவம்
இது இவ்விதமிருக்க பாதுகாப்பு வலயத்தை 2 ½ கிலோ மீற்றராக் குறைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார அறிவித்துள்ளார்.
புதிய பாதுகாப்பு வலயம் கரையாமுள்ளிக் குளத்தின் தென்பகுதியிலிரந்து வெல்லாமுள்ளிவாய்க்காலை உள்ளடக்கியதாகவிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
“பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் நிலைமைகளைக் கவனத்தில்கொண்டே பாதுகாப்பு வலயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார் அவர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment