மாவிலாறு அணைக்கட்டை மூடிய புலிகள் ஜனாதிபதியை பலவந்தமாக யுத்தத்திற்கு தள்ளினர்
மாவிலாறு அணைக்கட்டை மூடிய விடுதலைப்புலிகளே ஜனாதிபதியை பலவந்தமாக யுத்தத்துக்கு தள்ளினர். அங்குள்ள முப்பதினாயிரம் மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்க்கையை நடாத்தி வந்தது இந்த நீரின் மூலமாகவே. பலம்மிக்க எமது இராணுவம் அன்று மாவிலாற்றில் ஆரம்பித்த யுத்தம் இன்று வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மல்வாணை பியகம சுதந்திர வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோருக்குமாகவே பாடுபடுகின்றார்.
அன்று புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை இரண்டு நாட்களுக்குள் வெளியேறுமாறு கட்டளையிட்டனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது பற்றி சர்வதேச சமூகம் அறிந்திருக்க வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் நான் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளேன். நான் இப்பதவிக்கு வருமுன்னர் யாழ்ப்பாணத்தில் பெயரளவிலேயே நீதிமன்றங்கள் செயற்பட்டன. புலிகளின் தீர்ப்புகளுக்கு நீதிவான்கள் கையொப்பமிடுவது மாத்திரமே அங்கு நடந்தது. "அ' எழுத்துக்கூட தெரியாத, சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாத பிரபாகரனின் புகைப்படங்கள் நீதிமன்றங்களில் தொங்க விடப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் கொழும்பு நகரத்தைப் போன்று அழகான நீதிமன்ற கட்டிடம் இருக்கவில்லை.
தற்போது மிக அழகான நீதிமன்ற கட்டிடம் அங்கு காட்சியளிக்கிறது. உலக வங்கி உதவியுடன் நான் அதனை செய்து முடித்தேன்.
முஸ்லிம் சமூகத்தினரின் குவாஸி நீதிமன்றங்களின் பிரச்சினைகளை தீர்க்க நான் என்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.
41 வருட அரச சேவையிலிருந்து தான் அடுத்தமாதம் ஓய்வுபெறப் போவதாகவும் தெரிவித்தார்.
பதில் நீதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தமதுரையில்;
எப்பொழுதும் நாம் அந்நிய மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்பொழுது தான் எமக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வு வரும்.
குற்றவாளிகளும் மனிதர்களே. நாம் அவர்களை ஒதுக்கிவிட முடியாது.
இலங்கையில் சிறைச்சாலைகளில் இடநெருக்கடிகள் காணப்படுகின்றன. 4800 பேர் இருக்க வேண்டிய சிறைச்சாலையில் 52,000 பேர் இருக்கின்றனர். இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் அல்ஹாஜ் எம்.எம்.ஏ. கபூர் தமதுரையில்;
பதவியில் இருக்கும் போது அதிகாரங்களையும் சலுகைகளையும் ஆகக் கூடுதலான அளவுக்கு உபயோகிக்க முயலும் அரச சேவகர்கள் மத்தியில் தமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மிகக் குறைந்தளவில் உபயோகித்தவர் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவே. இவரது பணிவன்பான குணம் ஏனையவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர் குணசிறி ஜயனாத், ரவி விஜேசேகர, பியகம பிரதேச சபைத் தலைவர் பிரஸன்ன சம்பத், களனி விகாரையின் பிரதம குரு கொள்ளுபிடியே மகிந்த சங்கரக்கித தேரோ, மௌலவி எம்.எச்.எம். லாபிர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment