கடத்தல்காரர்களிடமிருந்து சமயோசிதமாக தப்பிவந்த பாடசாலை சிறுமி
மட்டக்களப்பில் 8 வயது மாணவி தினுஷிகா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு வாரமாவதற்குள் இரத்தினபுரி பகுதியிலும் 13 வயது மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
பெல்மதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நிசாந்தினி என்ற மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இரத்தினபுரிகாவத்தை கெட்டேதென்ன நகரில் இருந்து புதன்கிழமை பகல் 2.30 மணியளவில் இந்த மாணவி தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
வெள்ளை வானில் வந்த சிலர் மாணவியின் முகத்தில் மயக்க மருந்தை வீசியதும் மாணவி மயங்கவே வானில் தூக்கிக் கடத்திச் சென்றுள்ளனர்.
பெல்மதுளை நகரில் அந்த வான் நிறுத்தப்பட்டபோது கடத்தல்காரர்கள் வானைவிட்டு இறங்கி அப்பால் சென்றுள்ளனர். இந்த நேரம் மாணவிக்கு சுயநினைவு வரவே, அவர் வானைவிட்டு இறங்கித் தப்பியுள்ளார்.
அங்கிருந்து தனது சொந்த ஊரான குட்டாப்பிட்டிக்கு வந்து தான் கடத்தப்பட்ட சம்பவத்தை பெற்றோருக்குக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாணவி பெற்றோருடன் சென்று முறையிட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வானில் வேறு ஒரு மாணவியும் மயங்கியபடி கிடந்தார் எனவும், தான் சுயநினைவுக்கு வந்து தப்பி வரும்போது அந்த மாணவியைத் தட்டி எழுப்பியதாகவும் ஆனால், அந்த மாணவி விழிக்கவில்லை எனவும், இந்த மாணவி பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வானில் மயக்கமான நிலையில் காணப்பட்ட மாணவி குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார், மாணவி கடத்தப்பட்டதாகத் தமக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்கள்.
இந்த மாணவி கடத்தப்பட்ட சம்பவமானது இப்பகுதி எங்கும் பரவியுளளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment