பட்டினியால் சாகும் மக்கள்
தாயகன்
வன்னியில் இதுவரை காலமும் விமானக்குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்களினால் அழிவை சந்தித்து வந்த மக்கள் தற்போது பட்டினிக் கொடுமையால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளமை அங்கு இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தின் உச்சக்கட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
வன்னியில் தலை விரித்தாடும் பட்டினிக் கொடுமையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் போஷாக்கு குறைபாட்டினால் எலும்பும் தோலுமாக காணப்படும் சிறுவர்களைப் பார்த்தால் வன்னியில் ஒரு சோமாலியா உருவாகியுள்ளதை உணர முடிகிறது.
பெருத்த தலை, வீங்கிய கண்கள், ஒட்டிய கன்னங்கள், எலும்புக் கோர்வைகள் தெரியும் உடல், உப்பிய வயிறென விந்தை உலகத்து சிறுவர்களைப் போல் வன்னியிலுள்ள சிறுவர்கள் உருமாறி வருவதை நெஞ்சில் ஈரமுள்ள எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.
கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகள், இலக்கின்றி வந்து விழும் ஆயிரக் கணக்கான ஷெல்களென மரண பூமியில் வாழும் இந்தக் குழந்தைகள் தா, தந்தையரைப் பிரிந்த, உறவுகளை இழந்த சோகங்களைக் கூட உணர முடியாதவர்களா, வயிற்றைத் தடவியவாறு கைகளில் சிரட்டைகளுடன் கஞ்சிக்கு அலையும் காட்சி இன்று வன்னியில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
வன்னியில் இன்று கஞ்சியே பிரதான உணவாகி விட்டதனால் அது வழங்கப்படும் இடங்களில் நீண்ட வரிசைகளில் பட்டினியோடும் குழந்தைகளுக்கு ஒரு சிரட்டை கஞ்சியாவது வாங்கி விட வேண்டுமென்ற பரிதவிப்போடும் காத்திருக்கும் பெற்றோர், கலங்கிய கண்களுடன் கஞ்சி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் குழந்தைகள் என பட்டினிக் கொடுமையில் வன்னி மண் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.
கஞ்சிக்காக வரிசையில் நின்றவர்கள் மயங்கி விழுவதும், திடீரென வந்து விழும் ஷெல்களினால் அவ்விடத்திலேயே துடிதுடித்து சாவதும் சிதறி ஓடுவதும் பின்னர் மீண்டும் கஞ்சிக்காக வரிசைகளில் முண்டியடித்து நிற்பதுமான ஒரு கொடுமையான நிகழ்வு வன்னியில் நடந்தேறி வருகின்றது.
வன்னியில் உள்ள சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் மட்டுமன்றி உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இராணுவத்தின் இடைவிடாத குண்டு வீச்சுக்கள், ஷெல், தாக்குதல்களினால் இங்குள்ள குழந்தைகள், சிறுவர்களின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு செவிட்டுத் தன்மை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வன்னியில் தற்போது எஞ்சியுள்ள பகுதிகள் மீது கடும் ஷெல் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் குண்டுகள் விழுந்து வெடிக்கும் போது கூட இந்தக் குழந்தைகள் தப்பியோட நினைப்பதில்லை. குண்டுகள் விழுந்து வெடிக்கும் இடங்களில் இந்தக் குழந்தைகள் பித்துப் பிடித்தவர்களை போல் வெறுத்திப் பார்த்தபடி இருக்குமளவுக்கு மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெற்ற தாக்குதல்களில் 4795 பொது மக்கள் கொல்லப்பட்டும் 9869 பேர் காயமடைந்துமுள்ளதாக வன்னி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பலியான 4795 பேரில் 1207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாமாரும் அடங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை காயமடைந்த 9869 பேரில் 2864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாமாரும் அடங்குகின்றனர். அத்துடன் இவர்களில் 1437 பேர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். இவர்களில் 394 பேர் சிறுவர்களென்பது கொடுமையான விடயம்.
வன்னியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருந்துள்ள நிலையில் 70 ஆயிரம் பேரே அங்கிருப்பதாகக் கூறி அந்த 70 ஆயிரம் பேருக்குக் கூட போதாத உணவுப் பொருட்களையே அரசு அண்மைக்காலமாக அனுப்பி வன்னி மக்களை பட்டினி போடத் தொடங்கியது.
3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தி வந்த போதும் அதனை முற்றாக மறுத்த அரசாங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாக உறுதிபடக் கூறி வந்தது.
ஆனால் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து 3,4. தினங்களுக்குள் 182000 பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் இன்னும் சில ஆயிரம் பேர் புலிகளின் பிடிக்குள் இருப்பதாகவும் கூறியது. இதன் மூலம் தான் முன்னர் கூறிய 70 ஆயிரம் என்ற எண்ணிக்கை பிழையென்பதை அரசே பகிரங்கப்படுத்தியது.
தற்போது வன்னியில் இன்னும் சில ஆயிரக் கணக்கானோரே இருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் விடுதலைப் புலிகளும் வன்னியில் இன்னும் 165000 பொதுமக்கள் 5 கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாக அரசு கூறிய 182000 பொது மக்களையும் இன்னும் வன்னியில் இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் புலிகளும் கூறும் 165000 பொதுமக்களையும் சேர்த்தால் வன்னியில் 347000 பொதுமக்கள் இருந்துள்ளமை தெரிய வருகிறது.
347000 பொதுமக்கள் இருந்துள்ள நிலையில் கடந்த பல மாதங்களாக 70 ஆயிரம் பொதுமக்களை கணக்கு வைத்தே அரசாங்கம் அரைகுறையாகவும் இடையிடையேயும் உணவுப் பொருட்களை அனுப்பி வந்துள்ள நிலையில் வன்னியில் பட்டினி நிலைமை எப்படித் தலை விரித்தாடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வாறான பட்டினிக் கொடுமையாலேயே சிறுவர்கள், குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பட்டினி மரணங்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் போஷாக்கு குறைபாட்டினால் இக் குழந்தைகளின் உடலில் நோ எதிர்ப்பு சக்தி இல்லாமல் போயுள்ளதனால் தொற்று நோகளுக்காளாகியும் பல சிறுவர்கள் மரணிக்கின்றனர்.
மோசமான குண்டுத்தாக்குதல்கள், தொற்று நோகள், சரியான பராமரிப்பின்மை, பட்டினிக் கொடுமை, போஷாக்கின்மை, உளரீதியான பாதிப்பு போன்ற காரணங்களினால் வன்னியில் தற்போது சிறுவர் மரண வீதங்கள் மிக மோசமாக அதிகரித்துச் செல்வதாகவும் வன்னி மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்க எவ்வித மருந்துப் பொருட்களோ, மருத்துவமனை வசதிகளோ வன்னியில் கிடையாது. அங்குள் ளமக்கள் மரணத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றுவதற்கான எந்தவொரு மாற்றுவழிகளும் அங்கு இல்லை.
வன்னியில் தற்போது மனிதர்கள் வாழ்வதாகக் கூற முடியாது. அங்கு நடைப்பிணங்களே வாழ்கின்றன. குற்றுயிரும் குலையுயிருமாக அவதிப்படும் அவலங்கள், காயங்களுடன் மருத்துவ சிகிச்சைகளின்றி பரிதவிக்கும் பரிதாபங்கள், குருதி பெருக்கெடுத்தோடும் காயங்களுடன் தமது குழந்தைகளை அணைத்தபடி உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளியும் கொடுமைகளென வன்னி ஒரு பாவப்பட்ட பூமியாகிவிட்டது.
இதேவேளை வன்னியில் தினமும் கொட்டப்படும் விமானக் குண்டுகள், இடைவிடாது ஏவப்படும் ஷெல்களால் ஏற்படும் அழிவுகள் ஒருபுறமிருக்க அவற்றிலிருந்து வெளிவரும் கந்தகப் புகை, நச்சுப் பொருட்களினாலும் அங்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறைமாதப் பிரசவங்கள், விகாரமான தோற்றங்களிலும் அங்க அவயவக் குறைபாடுகளுடனும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சோமாலியா, எதியோப்பியா, ருவாண்டா நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள், பட்டினி மரணங்களை நாம் இவ்வளவு காலமும் கேள்விப்பட்டும் ஊடகங்கள் மூலம் அறிந்துமே வந்துள்ளோம். ஆனால் இன்று அதே நிகழ்வுகள் எமது மண்ணில் அரங்கேறி வருகின்றன. பட்டினியால் பரிதவித்து பலியாகும் பாலகர்களும் போஷாக்கின்றி இறக்கும் முதியவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றனர்.
வன்னியில் ஒருவாரத்தில் பட்டினியால் 12 பேர் மரணமாகியுள்ள அதேவேளை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களில் போஷாக்கின்மையால் கடந்த ஒரு வாரத்தில் 50 முதியவர்கள் மரணமாகியுள்ளதாக செட்டிகுளம் திடீர் மரண விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பேரதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய இந்த பட்டினி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வன்னி மக்கள் தமது பசியைப் போக்குவதற்காக தவிட்டைக் கரைத்து அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் வன்னியில் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தை போக்குமாறு விடுதலைப் புலிகளும் அங்குள்ள பொது அமைப்புகளும் உலக நாடுகளிடம் பலமுறை வேண்டுகோள்களை விடுத்த போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறுவர் உரிமைகள், சிறுவர் நலன்களுக்காக வா கிழியக் கத்தும் சர்வதேச அமைப்புகள் கூட வன்னியில் ஓர் இனத்தின் வித்துக்கள் பூவும் பிஞ்சுமாக அழிந்து கொண்டிருப்பதை வாமூடி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. கண்டன அறிக்கைகளுடன் தமது கடமை முடிந்து விட்டதென இந்தக் கையாலாகாத அமைப்புகள் நினைத்து விட்டன.






0 விமர்சனங்கள்:
Post a Comment