விடுதலைப்புலிகளின் மற்றுமொரு மண் அரண் பகுதியை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற பகுதியில் ஏ35 வீதிக்குக் குறுக்காக விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அரண் ஒன்றின் 500 மீற்றர் நீளமான பகுதியை விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
இந்தச் சண்டைகளின்போது, முன்னரங்க பகுதியில் இருந்த விடுதலைப்புலிகள் பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, இராணுவம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மோதல்கள் நடைபெறுகின்ற பகுதி நாளுக்கு நாள் சுருங்கிச் செல்வதனால், அங்கு சிக்கியுள்ள மக்களையும், அங்கு காயமடைகின்றவர்களையும் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது தொடர்பாக வன்னி்ப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களை, வவுனியாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தலைமை அதிகாரி சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதாக இராணுவ தலைமையகம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
அத்துடன், ஐநாவின் குழந்தைகள் நலன்காக்கும் அமைப்பின் வவுனியா மாவட்ட தலைமையதிகாரியும் இன்று வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதியைச் சந்தித்து இராணுவத்தினரிடம் சரணடைகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மறுவாழ்வு பற்றியும், அது தொடர்பில் ஐநா அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கி்ன்றது.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment