சரணடைய விரும்பும் போராளிகளுக்கு உதவத் தயார்: ஐ.சி.ஆர்.சி.
அரசாங்கப் படையினரிடம் சரணடைய விரும்பும் விடுதலைப் போராளிகளுக்கும், அரசாங்கத்துக்குமிடையில் இடைத்தரகர்களாகச் செயற்படத் தயாரென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சரணடைய விரும்பும் புலிகளின் உறுப்பினர்கள் தம்மைத் தொடர்புகொண்டால் அவர்கள் தொடர்பான விபரங்களைப் பொலிஸார் அல்லது பாதுகாப்புத் தரப்பினரிடம் சமர்ப்பித்து, சரணடையச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரத் தயாரென செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்தன. பலர் அதிகாரிகளிடம் சரணடைந்தள்ளனர். அரசாங்கத்தின் அனுமதியுடன் இவ்வாறு சரணடைந்த 5000 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்கு நாம் அண்மையில் சென்றிருந்தோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதநேயச் சட்டங்களை இலங்கை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான உதவிகளைச் செய்துகொடுக்கத் தாம் தயாரெனவும், ஒரு தலைப்பட்சமாகத் தடுத்துவைக்கப்படுதல், சட்டரீதியற்றமுறையில் நடத்தப்படுதல், கைதுகள் போன்றன நடைபெறாமல் அதிகாரிகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
“பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், என்ன நிலைமையில் அவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் 1989ஆம் ஆண்டு முதல் கண்காணித்து வருகின்றோம். இது தொடர்பாக அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளோம். இந்த வருடம் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள 135 இடங்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 6,700 பேரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கியிருந்ததுடன், தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்தோம்” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment