இலங்கையர்களுக்குப் புகலிடம் வழங்கவேண்டாம்: அரசாங்கம் கோரிக்கை
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்ற இலங்கையர்களுக்கு இடமளிக்கவேண்டாமென சர்வதேச சமூகத்திடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாகவும், ஜனநாயகத்தோடும் வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கூறினார்.
நூட்டில் சுமூகநிலை ஏற்பட்டிருப்பதால் பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டு புகலிடம் கோருபவர்களுக்கு சர்வதேச நாடுகள் புகலிடம் வழங்கக் கூடாது எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
பல்வேறு காரணங்களைக் கூறி அரசியல் தஞ்சம் கோரிய சுமார் 5 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருவதுடன், இவர்கள் கனடா, சுவீடன், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையின் பாதுகாப்பைக் காரணம்காட்டியே இவர்களில் பலர் புகலிடம் கோருவதாகக் கூறினார்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் தங்கியிருந்து அந்தநாடு வழங்கும் அனுகூலங்களைப் பெற இலங்கையர்களை அனுமதிக்கமுடியாதெனவும் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கடந்த 3 தசாப்தங்களாகத் தொடர்ந்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்திருப்பதால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.
கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு தோன்றியிருப்பதாக கடந்த சில நாட்களக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேபோல, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபையும் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர்களைத் திருப்பியனுப்ப அந்த நாடு தீர்மானித்திருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment