புலம்பெயர்ந்த மக்களே உசாராகுங்கள், மீண்டும் உண்டியல் உலாவலம் ஆரம்பம் -அர்ச்சுணன்!
நாட்டிற்கு வெளியே ஆன தமிழ் ஈழ அரசு என்ற அறிவிப்புடனும், வவுனியாவில் உள்ள அகதிகளுக்கு எனவும் மீண்டும் நிதி உதவி கோரும் புலிகள்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களே நீங்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. கடந்த காலங்களில் உங்களிடம் நிதியுதவி கோரிய போது உதவியை நீங்கள் செய்யுங்கள் தலைவர் போராட்டத்தினை நிகழ்த்துவார் என விடுதலை புலிகளின் பொறுப்பாளர்கள் உங்களுக்கு போதித்து இருந்தார்கள்.
அதனாலோயோ என்னவோ நீங்கள் கொடுபதுடன் நிறுத்திவிட்டு உங்கள் விடுதலைகான பங்கை செலுத்திவிட்டதாக திருப்தி பட்டு கொண்டீர்கள். தலைவர் தமிழ் ஈழ எடுத்து தருவார் நிதியுதவியினை நீங்கள் வழங்குங்கள் என்று புலிகளின் பொறுப்பாளர்கள் உங்களுக்கு போதித்து இருந்தார்கள். பின்னர் தலைவர் புதுமத்தாளன் பகுதிக்குள் சுற்றி வழைக்கப்பட்டதும், தலைவரை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் வீதிக்கு வாருங்கள் , கொடியை பிடியுங்கள் ,கோசத்தினை எழுப்புங்கள் என்று உங்களை அழைத்தார்கள். நீங்கள் அதனையும் செய்தீர்கள். புலிகள் இயக்கத்தினை தடை செய்த நாடுகளில் அந்த கொடிகளை நாங்கள் ஏந்தி சென்றால் அந்த செயல் புலிகளின் தலைவரை காப்பாற்றுமா என்று நீங்களும் சிந்திக்கவில்லை. அல்லது உங்களுக்கு இருந்த தீர்கதரிசனத்தினால் அப்படி நடந்து கொண்டீர்களா? ஒவ்வொரு பகுதியாக பிரதேசங்களை புலிகள் இழந்து வந்த போது உங்களுக்கு அதனை அவர்கள் அறியப்படுத்தினார்களா? படையினரை உள்ளுக்கு புகவிட்டு பின்னர் தலைவர் அடிப்பார் என்றார்கள், படையினர் புகுந்த பின்னர் ஊடுருவி அடிபார் என்றார்கள்.எல்லாம் முடிந்த பின்னர் இப்பொழுது நாட்டிற்கு வெளியே தமிழ் ஈழ அரசு நிறுவப்போவதாக கூறுகின்றார்கள்.
புலம்பெயர்ந்த மக்களே ,
புலிகளின் தலைவர் சரண் அடைந்தது மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை,
அவர் கொல்லப்பட்டது மே மாதம் 18 ஆம் திகதி மாலை.
ஆனால் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என உங்களில் பலரின் நம்பிக்கைக்கு பாத்திரமான புதினம் ஒப்புக்கொண்டது ஜூன் மாதம் 17 ஆம் திகதி காலை.
புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதினை அவர்களின் ஆதரவாளர்களுக்கு ஒரு மாதம் காலம் சென்று அறிவித்து இருந்தார்கள். இன்னமும் அவர்கள் உங்களுக்கு முழு உண்மையினை கூறவில்லை. தலைவர் போரிட்டு மடிந்தார் என்று இன்னமும் உங்களுக்கு பொய்யே உரைக்கின்றனர். புலிககளின் தலைவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கை அரச படையினரிடம் சரண் அடைவதற்கு சென்றார்கள், ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது என்று நோர்வே நாட்டின் சர்வதேச அபிவிருதி அமைச்சர் பி.பி.சி கடும் வாதம் நிகழ்சியில் (Hard Talk) கூறியிருந்தார். புலிகளின் தலைவர்கள் சரண் அடைய போகும் விடயம் இலங்கை அரசிற்கு தெரியப்படுத்தப் பட்டு இருந்தது. ஆனால் அதனை அரசு இராணுவ தளபதிக்கு அறியப்படுத்தினார்களா என்பது எனக்கு தெரியாது என புலிகளின் புதிய சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் அவுஸ்ரேலிய வானொலிக்கு தெரிவித்து உள்ளார்.
புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் கூறியபோது உங்களுக்கு புலிகளின் ஊடகங்கள் எப்படி பொய்யுரைத்தன. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் முதலில் உங்களுக்கு என்ன கூறினார். புலித்தேவனும், நடேசனும், ரமேஷ் ஆயியோர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் கூறினார். நான் ஒரு பூப்புனித நீராட்டு விழா விருந்திக்கு சென்று இருந்தேன். அங்கு வந்த புலி நிதி சேகரிப்பாளர் ஒருவர், தலைவர் சாகவில்லை அமரிக்காவில் இருக்கின்றார் என அங்கு வந்த அனைவருக்கும் கூறிக்கொண்டு இருந்தார். நல்ல வேளை தலைவர் வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்கு ஒத்தாசையாக இருக்கின்றார் என்று கூறவில்லை.
கோபால்சாமியின் கோமாளித்தனம்
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக புலிககளின் சர்வதேச தொடர்பாளார் செல்வராஜா பத்மநாதன் அறிவித்ததும் கோபால்சாமி முதலில் இவ்வாறு கூறினார். “ பிரபாகரன் கொல்லப்பட்டதாக பத்மநாதன் அறிவித்தது கடைந்தெடுத்த அயோக்கியதனமான செயல், தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்கு கிடையாது, மிக அண்மையில்தான் அவர் இந்த பொறுப்பிற்கே நியமிக்கப்பட்டார்,வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கியிருப்பதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைதிருக்கின்றது ”. இவ்வாறு கோபால்சாமி முதலில் கூறியிருந்தார். ஆனால் இவர் இவ்வாறு கூறியதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வெவ்வி வழங்கியதும், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக புலிகளின் அனைத்துலக தகவல் தொடர்பாளரான செல்வராஜா பத்மநாதன் அறிவித்து இருப்பது அறிந்து நம்பிக்கை துளிர்ந்தது என்று அவரது பத்திரிகையில் வை.கோ எழுதியிருந்தார். மேடைகளில் அரசியல் பேசும் போது எல்லாம் இதிகாசங்களையும், இலக்கியங்களை எடுத்து ஆதாரம் காட்டி பேசும் வை.கோ அவர்கள், இலங்கை அரசியல் பேசும் பொழுதும், புலிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுதும் உளறிதள்ளி விடுகின்றார்.
இயக்கம் அழிந்த பின்னர் ஒற்றுமை வேண்டி நிற்கும் புலிகளின் வெளிநாட்டு தலமை !
அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைந்து தம்முடன் செயற்படுமாறு புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் அழைப்பு விடுத்து இருக்கின்றார். பாரிய பரப்பளவை கட்டு பாட்டில் வைத்து கொண்டு இருந்த போது , ஆயிரக்கணக்கான போராளிகள் இருந்த போது எல்லாம் தேவைப்படாத தமிழர் ஒற்றுமை இப்பொழுது மட்டும் ஏன் புலிகளுக்கு வேண்டும். ஏங்கே போனது உங்கள் ஏகப்பிரநித்துவம், என்ன சாதித்தது உங்கள் ஏகப்பிரதிநித்துவம்? நீங்கள் பேசிய தமிழ் தேசியம் என்னவாயிற்று? 30 வருடத்திற்கு மேலாக நீங்கள் நடத்திய போராட்டத்தில் தமிழர்களுக்கு நீங்கள் பெற்று கொடுத்தது என்ன?மனோகணேசன் கூறியது போன்று எங்களை 1948 ஆம் ஆண்டிற்கு மீண்டும் அழைத்து சென்றதுடன் , மேலதிகமாக 3 லட்சம் அகதிகளையும் கொடுத்து விட்டு சென்று விட்டீர்கள். புலம் பெயர்ந்த தமிழர்களையும் உங்களுக்கு விட்டு வைக்கும் நோக்கம் இல்லை. அவர்கள் தஞ்சம் கோரிய நாடுகளின் நிம்மதியாக வாழுவது உங்களின் பொறுப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் தற்பொழுது நாட்டிற்கு வெளியேயான தமிழ் ஈழ அரசை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். நாட்டில் இருந்த மக்களை அகதிகளாக்கி, அவர்கள் முகாம்களில் முடங்கி வாழுவதற்கு வகை செய்து விட்டு , தற்பொழுது வெளிநாடுகளில் நிம்மதியாக வாழும் மக்களின் வாழ்க்கையிலும் மண்ணை தூவுவதற்கு நாடுகடந்த தமிழ் ஈழ அரசு அமைக்கப்போவதாக கூறிய வாறு மீண்டும் உண்டியலுடன் வலம் வருவதற்கு புலிகளின் முகவர்கள் நோட்டம் விடுகின்றனர்.
புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களே, நீங்கள் புலிகளின் இணையதளங்களை மட்டும் தளங்களாக பார்பதினை தவிர்த்து , தளங்கள் பலவற்றிக்குள் சென்று உங்கள் மனங்களை சற்று புகுர்த்தி பாருங்கள்.சிந்திக்க கூடியர்வர்கள், புத்திஜீவிகள், அரசியல் புலமை உடையர்கள் கூறும் கருத்துக்களை, ஆய்வுகளை அலசுங்கள். அவன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பதினை தவிர்த்து , அதனை எவன் சொன்னான் என பகுத்து பாருங்கள். வட கிழக்கு மக்கள் தங்கள் பிள்ளைகளை போராளிகளாக இழந்து, துரோகிகளாக புலிகளுக்கு பலி கொடுத்து, புலிகளினால் மனித கேடையங்களாக மறித்து வைக்கப்பட்டு , உறவுகளை இழந்து , இறுதியில் தாம் வாழ்ந்த வீடுகளை இழந்து அகதிகளாக முகாங்களுக்குள் முடங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நிரந்த அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும், அவர்களுக்கு எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொடுப்பதும், அவர்களின் பொருளாதார நிலையினை மீண்டும் நிலை நிறுத்வதிலும் புலம்பெயர்ந்த மக்களே உங்களுக்கு பாரிய பங்கு இருக்கின்றது. இஸ்ரேலில் வாழும் யூத மக்களை காட்டிலும் அமெரிக்காவில் வசிக்கும் யூத மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்த அமெரிக்காவில் வாழும் யூத மக்களின் ஒற்றுமையான கடுமையான உழைப்பினால் இஸ்ரேல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. உங்களின் பங்களிப்பு வட கிழக்கில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கு மெருகேற்ற வேண்டும். ஆனால் கடந்த காலங்களை போன்று கேள்வி செவியனா மட்டும் இருந்து விடாதிர்கள்.
ஏகப்பிரதிநித்துவம் குறித்து யாராவாது எனியும் பேசினால் எட்டி உதைப்பேன் என்று எச்சரியுங்கள் , உண்டியலுடன் வந்தால் உதைப்பேன் என்று கூறுங்கள். வவுனியாவில் முகாம்களில் இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென்று புலிகள் அமைப்பு புனர்வாழ்வு கழக முகமூடி அணிந்து உண்டியலுடன் மீண்டு உலாவலம் ஆரம்பித்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. புலிகளின் தலமை முற்றாக அழிந்துள்ள நிலையில் இவர்கள் நிதி சேகரித்து அதனை யாரூடாக யாருக்கு கொடுப்பார்கள். வவுனியாவில் உள்ள முகாம்களுக்கோ அல்லது வைத்தியசாலைக்கோ செல்வதற்கு புலிகளின் பினாமிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கூட அனுமதி இல்லை. சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு என்று வானோலியூடாக , தொலைக்காட்சியூடாக பெருந்தொகையான நிதியை பல நாடுகளில் புலிகள் சேகரித்து இருந்தார்கள். அந்த நிதிகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு கணக்கு இல்லை. எனிமேல் கணக்கு கேட்கவும் முடியாது. பிரித்தானியாவில் வெண்புறா என்ற பெயரில் சேகரித்த நிதியின் ஒரு பகுதியினை பிரித்தானியா அரசு முடக்கியது. அமெரிக்காவில் சேர்த்த நிதியியின் ஒரு பகுதியும் அந்த நாட்டு அரசினால் முடக்கப்பட்டது. இலங்கை வங்கியில் இருப்பு செய்யப்பட்ட ஒரு பகுதி இலங்கை அரசிற்கு இரையாகி போனது. இதற்கு காரணம் புலிகளின் அறிவற்ற செயலாகும். தமிழர்கள் மத்தியில் சுதந்திரமாக ஒரு தொண்டர் நிறுவனம் உருவாகுவதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. அதனையும் தாமே செய்ய வேண்டும் என்று அடம்பிடித்து , அதனையும் நாசமாக்கினார்கள்.
புலிகளின் தலமை அழிந்ததும் கனடாவின் ரொறொன்றோ நகரிலும் ,அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வசித்து வந்த பல புலி பொறுப்பாளர்கள் புதிய பண்க்காரர்களாக உருவெடுத்து வருவதாக செய்திகள் கிடைக்கின்றன. புலிகளுக்கு சொந்தமாக இருந்த நகைகடைகள், சந்தைகள், புடவை கடைகள் , கட்டிடங்கள் என்று எவர் பெயரில் இருந்ததோ அவர்களை இனி யார் கேட்பது என்ற தைரியத்திலும் பூரிப்பிலும் அவர்கள் இருக்கின்றார்கள். புலம் பெயர்ந்த மக்களே நீங்கள் விடுதலைக்கு என்று கொடுத்த பணம் வீணர்களின் கைகளில் செல்லக் கூடாது. அந்த நிதி மாவீரர் குடுபங்களுக்காவது சென்றடைய வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, புனர்வாழ்வு நிதி , வவுனியா அகதிகளுக்கு நிதி என்றெல்லாம் புலிகள் பல வேஷம் போட்டு வருவார்கள், தமிழர்கள் மீது பாசம் இருப்பது போல் காட்டி உங்களை மோசம் செய்து விடுவார்கள். நீங்கள் ஏமாறுவதில் வல்லவர்களா? உங்களை புலிகள் ஏமாற்றுவதில் வல்லவர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
வவுனியாவில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிதியுதவி தேவையென்று புலிகளின் புனர்வாழ்வு கழகம் மீண்டும் நிதியுதவி கோரிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் புனர்வாழ்வு கழகமும், தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பும் வருங்காலங்களில் வட கிழக்கில் எந்த பகுதியிலும் இயங்க முடியாது. இவர்கள் சேர்க்கும் நிதி மீண்டும் அந்த மக்களின் அமைதியை கெடுக்கும் செயல்களுக்கே உதவும் என்பதினை நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும். வவுனியாவில் உள்ள முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் வவுனியாவில் ஒரே ஒரு தமிழர் தொண்டர் அமைபே உள்ளது. நீங்கள் அந்த மக்களுக்கு உதவ விரும்பினால் வவுனியாவில் உள்ள அந்த அமைப்பான சமூக சுய தொழில் அபிவிருத்தி நிறுவனம் (Social Self Employment Development Organisation, SSDO) என்ற அமைப்புடன் தொடர்புகளை மேற்கொள்ளுங்கள். இந்த அமைப்பானது தனது செயற்பாடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகின்றது. தமிழர்களுக்கு என்று ஒரு சொந்த உதவி நிறுவனம் (relief agency) தேவை என்கின்ற அவசியத்தினை உணர்ந்து நீங்கள் அவர்களுக்கு உதவுவது குறித்து சிந்தியுங்கள்.
Neruppu
0 விமர்சனங்கள்:
Post a Comment