காயமடைந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் தலைமைத்துவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
புலிகளுடனான போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது
வடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 27ஆயிரம் படை வீரர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அத்துடன் அவர்களுள் 6ஆயிரம் பேர் அங்கவீனமடைந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் படையினர் நடத்திய தாக்குதல்களின் போது காயமடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே என்பது கேள்விக்குரிய விடயமாகிறது. இவ்வாறு காயமடைந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் தலைமைத்துவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். அதனாலேயே காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை முதலில் இவ்விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்த வேண்டும் அதன்பின்னர் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க வேண்டும்
0 விமர்சனங்கள்:
Post a Comment