மூடப்பட்ட பாதைகள் யாழ் குடாவில் திறப்பு: ஊரடங்கும் குறைப்பு
அமைச்சர் டக்ளஸ், கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் முடிவு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்ட நேரத்தைக் குறைக்கவும் மூடப்பட்ட பாதைகளைத் திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ் குடா ஊரடங்கு சட்டத்தை இரவு 11 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்துவ தென உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ள்ளது.
இதேவேளை, ஸ்டான்லி வீதி, யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மணிக்கூட்டுக் கோபுர வீதி, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி உட்பட சில முக்கிய வீதிகளை பொதுமக்களின் பாவனைக்காகத் திறப்பதென முடிவு செய்யப்பட்டது.
யாழ். குடாநாட்டு பொதுமக்கள் முகங்கொடுத்து வருகின்ற முக்கிய சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், வீதித் தடைகளை அகற்றுதல், யாழ். மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், பாதுகாப்பு அனுமதி பெறுவதில் முகங்கொடுக்க நேரிடுகின்ற சிரமங்களை அகற்றுதல், தற்காலிக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் முகங்கொடுத்துள்ள குறைபாடுகளை நீக்குதல், ஊரடங்குச் சட்டத்தை நீக்குதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல், தடைசெய்யப்பட்ட பொருட்களின் தடைகளை அகற்றுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வலிகாமம் பிராந்திய படை அதிகாரி, யாழ். அரச அதிபர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஊரடங்குச் சட்டத்தை முற்றாக அகற்றுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்ட போதிலும், சில சமூக சீர்கேடுகளை கருத்தில் கொண்டு விழிப்புக்குழுக்கள் பரவலாக உருவாக்கப்படுதல் மற்றும் தமிழ் பொலிஸாரை பொலிஸ்துறையில் இணைத்துக் கொள்ளல் போன்ற சிவில் நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை தற்போதைக்கு இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் திட்ட வரைபொன்று உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம், இராணுவ வாகனத்தொடரணி போக்குவரத்தின் போது மக்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற அசெளகரியங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமெனவும், பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கான பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் ஏற்படுகின்ற தாமதங்கள் அகற்றப்படும் என்றும், பல வீதிகளில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. பருத்தித்துறை வரணி ஊடான கொடிகாமம் வீதி, மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவது குறித்து ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம், யாழ் லொறி உரிமையாளர்களது ஏ-9 பாதையிலான போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஏ9 பாதையில் வரையறுக்கப்பட்ட பயணிகள் பஸ் சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
யுத்தம் காரணமாக யாழ். குடாநாட்டிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களின் தடையை நீக்குவது தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடுவதாகக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment