வெள்ளைத் தோல், கருப்பு மனிதன்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம், ஆனால் இறந்தும் மனிதர் மனங்களில் வாழ்வது அவனவன் செய்த பாக்கியம்.
இன்று உலகம் ஒரு வெள்ளைத் தோல் போர்த்தியிருந்த கருப்பு மனிதனின் மரணச் சோகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
வெறும் பாடகன், ஒரு மேடை நாட்டியக்காரன் என்கிற நிலை தாண்டி உலகின் எந்த மூலையில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் அவன் நன்கு பரிட்சயமான பெயராக இருந்த நிலையில் மரணித்துள்ளான்.
மைக்கேல் ஜாக்சன் என்று உலகறிந்த பாடகன் தனது 50 வது வயதில் மார்படைப்பில் இறப்படைந்த செய்தி பரவியதும் ஏறத்தாழ முழு உலகமும் அதுதான் “தலைப்புச் செய்தி” ஆகிவிட்டது.
இந்த நிமிடமளவில் மைக்கேல் ஜாக்சன் பற்றிய, அவர் ஏற்ற இறக்கம், வாழ்க்கை தொடர்பான எக்கச்சக்கமான பதிவுகள்,ஆராய்வுகளும் வெளி வந்து விட்டன.
ஊடகங்களின் விளம்பரப் பசிக்குத் தீனி போட்ட மிகப் பெரும் மனிதர்களில் டயானாவையும் மிஞ்சி உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைந்த மாபெரும் கலைஞன் மைக்கேல் ஜாக்சன் என்பது எவ்வளவு உண்மையே, அதே போன்று அவனுக்குள் இருந்த இன வெறி, அடக்கு முறைக்கு எதிரான சிந்தனைகளும் உண்மைகளாகும்.
கருப்பின மக்களோடு கொஞ்சம் பழகக் கிடைத்த யாரைக் கேட்டாலும் அவர்கள் மிக விரைவில் கோபப்படும் மனிதர்களாகவும், தமக்குக் கோபம் வந்தால் அதை மிகவும் சத்தமாக வெளிப்படுத்துபவர்களாகவும், வன் முறைக்குள் மிக இலகுவாக உள்வாங்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுவார்கள்.
இந்தக் கோபம் என்பது பரம்பரை பரம்பரையாக அவர்கள் மீது உலகம் திணித்த அடக்குமுறைக்கு எதிரானதாகும்.
என்னதான் அமைதியாக இருந்தாலும் திடீரென சீறிப்பாயும் அவர்கள் கோபத்தின் அடிப்படை அவர்கள் ஆழ் மனதில் எப்போதுமே உறங்கிக்கிடக்கும் அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடாகும்.
தாம் அமைதியாக இருந்தால் அடக்கப்பட்டு விடுவோம், தம் உரிமைகள் மறுக்கப்பட்டு விடும் என்று நினைத்து அடுத்தவரை விட சத்தமாக தனது குரலை உயர்த்திக்கொள்வார்கள்.
இதில் மிகப் பெரும் பங்கு வகிப்பவர்கள் Caribean தீவுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல்களுமாகும்.
இதே வேளை இந்த ஒரு சாராருக்கு மிக எதிரான, மிக அமைதியான நற்குணங்கள்,பொறுமை மற்றும் சேவை மனப்பாண்மை கொண்ட மனதால் மிக உயர்ந்த மனம் படைத்த மனிதர்களும் இதே இனத்தில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
மேலை நாடுகளின் வைத்தியசாலைகளில் அதிகளவு கருப்பினத் தாதிகளையும், சேவைகள் பணியாளர்களையும் பார்க்கலாம்.
அடிப்படையில் இரு வேறு குணாதிசயங்களையும் ஒன்றர உலகில் சமப்படுத்திக்கொண்ட கருப்பின மக்களின் வாழ்க்கை அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், பல விடயங்களில் மிக ஒற்றுமையாகக் காணப்படும்.
கருப்பின இளைஞர்களின் “ஸ்டைல்” வாழ்க்கை ஏறத்தாழ முழு உலகையும் கவர்ந்திழுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகும்.
அதிலும் குறிப்பாக அமெரிக்க கருப்பின இளைஞர்களின் வாழ்க்கை முறை, ஆடை முறை என்பன மிக இலகுவான உலகின் அனைத்து பாகங்களையும் சென்றடைகின்றன.
அதற்கான பிரதான காரணம் இசையுலகம்.
அமெரிக்க இசையுலகை கருப்பினக் கலைஞர்களே ஆட்சி புரிகிறார்கள் என்றால் மிகையில்லை. அவர்கள் அறிமுகப்படுத்தும் இசை வகைகளைக் கொண்டு வெள்ளைத் தோல் மனிதர்கள் வியாபாரத்தை மேற்கொண்டாலும், இவர்களது இசைத் திறமை தனித்துவமானது.
அந்த இசையுலகுக்கு முடிசூடா மன்னனாகத் திகழ்நத மனிதன் மைக்கேல் ஜாக்சன்.
ஊடகங்களில் சிக்கி்ச் சின்னாபின்னமாகிப்போன அவரது வாழ்க்கை ஒரு புறம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு புறம், குடும்ப வாழ்க்கையின் பயணம் ஒரு புறம் என்று அவர் திணறடிக்கப்பட்டு நிலை குலையச் செய்யப்பட்ட போதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை நீங்கள் அவதானித்திருக்க வேண்டும், அதுதான் அவரது குடும்பம் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்பும் ஆதரவும்.
புகழின் உச்சியில் இருந்த இந்த மனிதன் ஒவ்வொரு தடவை உடைந்து விழும் போதும் அவருக்குத் தோள் கொடுக்க ஒரு குடும்பம் இருந்தது, அந்தக் குடும்பத்தின் அன்பை முழு உலகமும் பகிர்ந்து கொண்டது.
உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இவர் விரும்பப் பட்டார்.இனியும் விரும்பப்படுவார்.
அது வெறும் இசையால் மட்டும் அவரை வந்தடைந்த வெற்றியல்ல, அவரது எழுத்துக்கள், அவற்றை அவர் வெளிக்கொண்டு வந்து சேர்த்த விதம், அனைத்தும் கலந்த கலைஞனாக அவர் தன்னைத் தானே வெளிக்கொண்டு வந்த விதம் என அனைத்தும் இதில் அடங்கும்.
மைக்கேலைப் பின்பற்றிய, பின்பற்றிக் கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் இளம் கலைஞர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்க வாழ் கருப்பினக் கலைஞர்கள், இன்றும் தாம் பாடும் பாடல்கள், தாம் சொல்லும் கருத்துக்களை அன்றைய புரட்சிப் பாடகன் Bob Marley போன்று நேரடியாக இல்லையாகினும் ஆகக்குறைந்தது மைக்கேலைப் போன்று தாம் சொல்லவரும் சமத்துவக் கருத்துகளையும், தம் உரிமைக்கு மக்களிடம் தேவைப்படும் ஆழ்ந்த சிந்தனை மற்றும் விழிப்புணர்வையும் தவறாது இணைத்து வருகிறார்கள்.
இன்றைய இசையுலகில் மிகப்பெரும் ஆளுமையுள்ள இசை வடிவங்களாக கருப்பினக் கலைஞர்களுக்கே உரிய R & B , Hip Hop வடிவங்கள் காணப்படுகின்றன.
பெரும்பாலான கருப்பினக் கலைஞர்கள் இந்த வடிவங்களிலேயே தமது இசையை உருவாக்கிக்கொள்கிறார்கள், அதே வேளை அவர்கள் அந்தப் பாடல்களுக்காக எழுதும் வரிகளை உற்று நோக்கின் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு (பெரும்பாலான) பாடலிலும் அடககுமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு ஸ்டைலுக்காகத்தானும் தமது வாகனங்களில் பெரும் சத்தத்தோடு இந்தப் பாடல்களைக் கேட்டுச் செல்லும் அந்த இன மக்கள் நாளடைவில் அதைக் கேட்டுப் பழகும் போது அதன் அர்த்தத்தையும் உள் வாங்குகிறார்கள், அதைக் கொண்டு விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் இப்படிப் பல வழிகளிலும் தம்மைத் தாமே முன்னேற்றி, உலக அரங்கில் தனித்துவத்தைப் பெற்றுக்கொண்டு வரும் இந்த மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரம் பராக் ஒபாமாவின் அமெரிக்க அதிபர் பதவியாகும்.
ஒபாமாவின் வெற்றியை ஆசியாவின் தூரத்து மூலையில் இருக்கும் ஒரு சாதாரண விவசாயியும் விரும்பினான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கான காரணம் அவர் வெள்ளைத் தோல் இல்லாதவர் என்பது மட்டுமல்ல, வெள்ளைத் தோல் மனிதர்கள் இதுவரை செய்த அரசியலையும், தம் மீது திணித்துத் தந்த வாழ்க்கையையும் அனைத்து தரப்பினரும் அறிந்து தான் இருக்கிறார்கள், உலக அரசியல் பற்றிய அறிவும் அனைவருக்கும் இருக்கிறது என்பதும் கலந்ததாகும்.
இவையனைத்தையும் தாண்டி பணமிருந்தால் கருப்புத் தோலை வெள்ளைத் தோலாக மாற்ற முடியும், அதற்குள் வாழும் கருப்பு மனிதன் உலகின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதையும் திறமையின் உச்சியை அடைந்து கொண்டே நிரூபித்தவர் மைக்கேல் ஜாக்சன்.
நிறம் மாற்றிக்கொள்ளும் தேவை மனிதர்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், தாம் சார்ந்த சமூகத்திலும் உலகத்திலும் தம் நிறத்துக்கும், தம் உரிமைக்கும், தம் திறமைக்கும், தம் வாழ்க்கைக்கும் வழியும் வேண்டும், உரிமையும் வேண்டும் என்று ஒவ்வொரு மனித மனமும் சிந்தித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கும் ஜாக்சனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.
இவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒரு சமூக விடிவின் பின்னால் கலை,கலாச்சாரமும் எந்தளவு பங்கு வகிக்க முடியும் என்பதற்கு கருப்பின மக்களின் வளர்ச்சி மிகப்பெரும் உதாரணமாகும்.
சமூகம் என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையை மட்டும் பிரதிபலிக்கும் ஒரு சொல் இல்லை, அந்தச் சொல் தான் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்தின் வாழ்வியல்,கலாச்சாரம், கலை மற்றும் ஒவ்வொரு அடிப்படை விடயத்தையும் தாங்கியிருக்க வேண்டும்.
சமூகத்தின் தலைமை என்பதும் தாம் சார்ந்த சமூக வாழ்க்கையின் அனைத்தப் பகுதிகளையும் மக்களுக்கு நெறிப்படுத்திக் கொடுக்க வேண்டும், அவற்றில் அவர்கள் முயற்சி செய்யக் கூடிய வழி முறைகளை வாழ்க்கையை நம்பிக்கையோடு ஆரம்பிக்கக் கூடிய பாதைகளைத் திறந்து வைக்க வேண்டும்.
ஒரு காலத்தில் அடிமை வாழ்வுக்காகவே உலகமெல்லாம் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு இனம் இன்று உலகமெங்கும் சக்திவாய்ந்த இனமாக தலை நிமிர்ந்திருக்கிறது என்றால் கடந்த நூற்றாண்டுகளில் அறிந்தோ அறியாமலோ அவர்கள் விட்டுக்கொடுக்காமல் பேணிப்பாதுகாத்து வந்த உணர்வும் அதன் அடிப்படை சார்ந்த விளக்கமும் இன்றளவும் அவர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.
ஒருவேளை, இந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு போராடும் தலைமை வந்திருந்தால், அதன் பின் அந்தத் தலைமை சார்ந்த அரசியலில் இவர்கள் கலக்கப்பட்டிருந்தால், இன்றளவும் இத்தனை வேகத்துடன் அவர்கள் உணர்வுள் உயிர்வாழுமா என்பது கேள்விக்குறியே.
ஒரு தலைவர்தான் வேண்டும், வழி் நடத்த அமைப்புதான் வேண்டும் என்றில்லாமல் ஒவ்வொரு கருப்பின மனிதனிடமும் இந்த உணர்வு இருக்கிறது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து மகாராணியார் பங்கெடுத்துக்கொண்ட அடிமை வாழ்வுக்கு எதிராண நிகழ்வு ஒன்றில், யாராலும் வழி நடத்தப்படாத சாதாரண கருப்பின மனிதர் ஒருவர் பொங்கியெழுந்து அடிமை வாழ்வை உலகில் ஊக்குவித்த இங்கிலாந்தின் மகாராணி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உரத்த குரலில் தன் உணர்வை வெளிப்படுத்திய போது அரங்கமும்,உலகமும் அதிர்ந்து போனது.
ஆனாலும் அந்த மனிதரின் கோரிக்கை தவறானது இல்லை என்பதால் சட்டமும் அடங்கிப்போனது.
இந்த உணர்வு என்பது ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய உணர்வில்லை, தானாக வர வேண்டியது. மக்களை ஒன்று கூட்டி போராடுகிறோம் என்று ஒரு அமைப்பு வெளிவரும் என்றால் அந்த அமைப்பு அதன் பின் அந்த மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் கட்டுப்படுத்தி இதை வளர்க்க வேண்டியதில்லை.
தொலைக்காட்சியில் இதைத்தான் பார்க்க வேண்டும், வானொலியில் இதைத்தான் கேட்க வேண்டும் என்று மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. விரும்பியோ விரும்பாமலோ மாதம் ஒரு தொகை போனால் போகிறது என்று அவர்கள் சந்தாக் கட்டிவி்ட்டு தாம் விரும்பும் தொலைக்காட்சி சானல்களையும் பெற்று மறைமுகமாக தமது அடிப்படை வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
உலகமெல்லாம் பரந்து வாழும் கருப்பின மக்களிடம் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு வாழ்வு முறைகள், பல்வேறு தராதரங்கள் இருந்தாலும் அடக்குமுறைக்கு எதிராண உணர்வு ஏறத்தாழ ஒரே வகையாகவே இருக்கிறது.
மிகப்பெரும் பணம் படைத்த, செல்வாக்குள்ள ஒரு கருப்பின மனிதரும் ஏதோ ஒரு வகையில் தன்னை இதில் ஈடு படுத்திக்கொள்கிறார். மைக்கேல் ஜாக்சனும் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை, அன்றைய நாள் வியட்நாம் போரில் பங்கெடுக்க மறுத்து மனிதநேயத்துடன் குரல் கொடுத்த குத்துச் சண்டை வீரர் “அலி” யும் இதில் விதி விலக்காக இருக்கவில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? எந்த அமைப்பு காரணம்? என்றெல்லாம் எதுவுமே இல்லை. அவரவர் உணர்ந்ததனாலேயே இந்தப் பேரெழுச்சி அவர்களிடம் இன்னும்,இனியும் வாழப்போகிறது.
தம் உரிமைகள் மறுக்கப்படுவதை மக்கள் உணர வேண்டும், அதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும், கிளர்ந்தெழும் மக்களின் கோசம் உண்மையாக இருக்க வேண்டும், அப்போது அது தலைதலைமுறையாக தமது வேட்கையை விதைக்கும் சக்தியுடையது என்பதற்கு கருப்பின மக்கள் மிகப் பெரும் உதாரணமாகும்.
ஆங்காங்கே அவர்கள் தமக்குத் தலைவர்களை உருவாக்கிக்கொண்டாலும் அந்தத் தலைவர்கள் தம் விடுதலை உணர்வை மக்களிடம் நாகரிகமாக விதைத்துச் சென்றார்களே தவிர வலுக்கட்டாயமாக ஆயுத முனையில் திணிக்க வில்லை.
இதன் விளைவாகவே அன்று 60 களில் மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று 2009ல் அமெரிக்காவில் நிறைவேறியுள்ளது.
அந்தக் கனவுகள் கிளர்ச்சியை மிஞ்சிய, வன் முறையை மிஞ்சிய நிரந்தரமான ஜனநாயக வழியில் இந்த மக்களிடம் உள்ளீடு செய்யப்பட்டதனாலேயே அந்த உணர்வு அவர்களை ஒன்றிணைக்கிறது.
அன்று மார்ட்டினின் ஊர்வலத்தில் பலவந்தமாக அவர்கள் இணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்கள் கைகளில் பலவந்தமான பதாதைகள் கொடுக்கப்பட்டு, கருத்துக்கள் திணிக்கப்பட்டிருந்தாலோ இன்று ஒபாமாவின் வெற்றிக்காக அதே இன மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்க மாட்டார்கள், மாறாக அந்த இனத்தின் ஒரு பகுதியினர் களிப்படைந்த அதே வேளை இன்னொரு சாரார் காறித் துப்பியிருப்பார்கள்.
நல்லவேளையாக இந்த மக்களிடம் இப்படியான பிளவுகள் வரவில்லை, ஒரு வேளை தலைமையொன்றில் தங்கியிருக்காத ஆனால் ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்ட அந்த உணர்வு நிலை இல்லாமல் அவர்களுக்கும் வழிநடத்துகிறோம் பேர்வழிகள் வந்து சேர்ந்திருந்தால் அவர்களின் உணர்வாலான ஒற்றுமை எப்போதோ சிதைந்திருக்கும்.
சில கருப்பினத்தவர்கள் பல காலங்களுக்கு முன்னர் கலப்புத் திருமணங்கள் மேற்கொண்டதால் வெள்ளை நிறத்தவர்களாகவும் இருப்பார்கள், ஆனாலும் அவர்களை நன்கு கவனித்தால் அவர்கள் எப்போது கருப்பின நண்பர்கள், குடும்பங்களோடே சேர்ந்திருப்பார்கள், சேர்ந்து விளையாடுவார்கள், தம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஆகக்குறைந்தது அவாகள் ஒவ்வொருவரையும் அவர்கள் உள்ளங்களிலேயே அடங்கிக் கிடக்கும் ஏதோ ஒன்று ஒன்றிணைக்கிறது, ஒற்றுமையடையச் செய்கிறது.
அது அவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் ஒரே வகையாகவும் இருக்கிறது, ஓர்மப்படுத்தப்பட்ட தலைமை எங்குமே இல்லாவிடினும் கூட அவர்கள் சார்ந்த ஊடகங்கள், கலைஞர்கள், சிறு சிறு அமைப்புகளும் மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்க பேருதவியாக இருக்கிறது.
அங்கே அடக்குமுறை இல்லை, யார் யாரும் எந்தத் தொழிலை செய்ய வேண்டும், எவ்வளவு சம்பாதிக்க வேண்டும், ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதென்றால் எத்தனை லட்சம் தண்டப் பணம் கட்ட வேண்டும், சொந்த நிலத்தை எப்படியெல்லாம் தாரை வார்க்க வேண்டும், பிறிதொரு கூட்டம் நியாயம் என்று சொல்வதையெல்லாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், சமூகத்தில் துரோகிகள் என்று ஒரு சாராரை ஏன் உருவாக்க வேண்டும் என்ற எந்தி நியதியும் இல்லை, பாசிசத் திட்டங்களும் இல்லை.
ஆனால், உலகளாவிய ரீதியில் அவாகளிடம் அந்த “உணர்வு” மேலோங்கியிருக்கிறது, அதை வழிநடத்தும் தலைமையே இல்லாமல் மைக்கேல் ஜாக்சன் முதல் அத்தனை செல்வாக்குள்ள மனிதர்களிடமும் எப்போதும் இருந்தே வந்தது.
யாராலும் திணிக்கப்பட முடியாத சொந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகள் சென்றாலும் மறையாது என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
இப்போது மண்ணை விட்டு மறைந்திருக்கும் மைக்கேல் ஜாக்சனின் ஆதம் சாந்திக்காக இன,மொழி,ஜாதி,நாடு என்று எந்தவித வேற்றுமையும் இல்லாமல் முழு உலகமே பிரார்த்திக்கிறது, இரங்கல் தெரிவிக்கிறது.
தம் சமூகத்துக்காக உழைத்த அத்தனை தலைவர்களும் காலத்தால் அழியாத சுவடுகளாய் மக்களோடு மக்களாக வாழ்வார்கள், தலைவர்களாக இல்லாத மனிதர்களும் வாழ்வார்கள். ஆனால்………. !?
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment