சொந்த பண்ணையில் மைக்கல் ஜாக்ஸன் உடல் எதிர்வரும் புதனன்று அடக்கம்
பொப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இன்னமும் தீரவில்லை. அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
எனவே சந்தேகத்தை நீக்க 2ஆவது முறையாக அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களே தனியான பிரேத பரிசோதனை நிபுணரை வரவழைத்து பரிசோதனை நடத்தி உள்ளனர். இதன் முடிவு இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.
மைக்கல் ஜாக்ஸன் உடலை 2ஆவது முறையாக பிரேத பரிசோதனை நடத்தியதை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
எதிர்வரும் புதன்கிழமை இறுதிச் சடங்குகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மைக்கல் ஜாக்ஸனுக்கு சொந்தமான பெரிய பண்ணை ஒன்று கலிபோர்னியாவில் உள்ள ரெவர்லேண்ட்வேலி என்ற இடத்தில் உள்ளது. ஒரு மலைப்பகுதியைச் சொந்தமாக்கி அவர் பண்ணை அமைத்துள்ளார். இங்கு பெரிய பங்களா ஒன்றும் உள்ளது. இந்தப் பண்ணையில் அவரது உடலை அடக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் மைக்கல் ஜாக்ஸனுக்குப் பெரிய அளவில் நினைவாலயம் அமைக்கவும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையில் மைக்கல் ஜாக்ஸனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர் கொன்ட்ரட் மூரேயின் சட்டத்தரணிகளும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில்,
"ஜாக்ஸனின் மரணத்துக்கும் டாக்டர் கொன்ட்ரட்டுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஜாக்ஸனைக் காப்பாற்றவே டாக்டர் முயற்சி எடுத்திருந்தார். எனினும் ஜாக்ஸன் அதிகளவில் உட்கொண்ட மாத்திரைகளே அவரது மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஜாக்ஸனின் மரணம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளுக்கும் டாக்டர் மூரே முழு ஒத்துழைப்பு வழங்குவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment