பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் உயிருக்கு உலைவைத்த வலி நிவாரண மருந்துகள்? - அதிர்ச்சி தகவல் வெளியீடு
அதி சக்தி வாய்ந்த வலி நிவாரண மருந்துகள் மூன்றை ஒரே சமயத்தில் உபயோகித்ததையடுத்தே பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் உடல்நிலை மோசமடைந்து மரணத்தைத் தழுவியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரித்தானிய "த சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
"டெமெரோல்' என்ற வலி நிவாரண மருந்தை நாளொன்றுக்கு மூன்று தடவைகள் மைக்கேல் ஜக்ஸன் ஏற்றிக் கொண்டதாக தெரிவித்த மேற்படி வட்டாரங்கள், அம்மருந்துடன் அதி சக்திவாய்ந்த வலி நிவாரண மருந்துகளான "டில்லோடிட்' மற்றும் "விக்கோடின்' என்பவற்றையும் அவர் உபயோகித்ததாக தெரிவித்தன. "டில்லோடிட்' மருந்தின் 3 மில்லிகிராம் மாத்திரைகள் மூன்றை அவர் அச்சமயத்தில் உபயோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மருந்துகள் தவிர, தசைகளை இளக்க உதவும் "ஸோமா' மருந்தை தினசரி இரு வேளை 2 மில்லி கிராம் வீதமும், அமைதிப்படுத்தும் "ஸனாக்ஸ்' மருந்தை தினசரி இரு வேளை 0.5 மில்லி கிராம் வீதமும், மன அழுத்தத்தைக் குறைக்கும் "ஸொலோப்ட்' மருந்தை தினசரி 100 மில்லிகிராம் வீதமும், பிறிதொரு மன அழுத்தத்தைக் குறைக்கும் "பக்ஸில்' மருந்தை தினசரி 200 மில்லிகிராம் வீதமும் நெஞ்செரிவை தணிவிக்கும் "பிர்லோஸெக்' மருந்தின் குறிப்பிட்ட அளவையும் மைக்கேல் ஜக்ஸன் உள்ளெடுத்து வந்துள்ளார்.
அத்துடன் அண்மையில் தோல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சையொன்றுக்கு உட்பட்ட அவர், நோய் எதிர்ப்பு மருந்துகளையும் உபயோகித்துள்ளார். நோயாளியொருவர் ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வலி நிவாரண மருந்துகளை பாவிப்பது அனுமதிக்கப்படாத நிலையில் மைக்கேல் ஜக்ஸன் மூன்று வலி நிவாரண மருந்துகளை ஒரே சமயத்தில் பாவித்தமையே அவரது உடல் நலம் மோசமடைய காரணமென கருதப்படுகிறது.
மேலும் மைக்கேல் ஜக்ஸன் தனது உடல் பருமனாகி விடுமோ என்ற அச்சத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வந்துள்ளார். உடலை அழகுபடுத்த டசின் கணக்கான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டதால் ஏற்பட்ட உடல் வலிகளிலிருந்து நிவாரணம் பெற அவர் 1985 ஆம் ஆண்டு முதல் வலி நிவாரண மாத்திரைகளை தினசரி உள்ளெடுத்து வந்ததாக தன்னிடம் கூறியதாக அவரது தோல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பொப் இசை தொழிலில் திடீரென எதிர்கொண்ட சரிவு, கடன் தொல்லை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் சிக்கியமை என்பவை காரணமாக கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிய மைக்கேல் ஜக்ஸன், அம்மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மருந்துகளின் துணையை நாடியுள்ளார்.
மைக்கேல் ஜக்ஸனின் குடும்ப சட்டத்தரணியான பிரையன் ஒக்ஸ்மான் உள்ளடங்கலான மைக்கேல் ஜக்ஸனுக்கு நெருக்கமானவர்கள் பலர் மேற்படி தகவல்களைத் தெரிவித்ததாக "த சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
""என்னால் இதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாது. வலி நிவாரண மருந்துகளை பாவிப்பதில் உள்ள அபாயம் குறித்து மக்கள் அலட்சியமாக இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. அதனாலேயே இத்தகவலை பகிரங்கமாக தெரிவிக்கிறேன்'' என பிரையன் ஒக்ஸ்மான் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment