சிங்காரிதான் காவேரி, காவேரிதான் சிங்காரி…
மனித குலத்தையும் உயிரினங்களையும் இயற்கையையும் உருவாக்கிய இந்துக்களின் முழுமுதற்கடவுளான ஈஸ்வரனுக்கு ஐந்து பிரதானமான தொழில்கள் இருக்கிறது என்று புராணங்கள் சொல்கின்றன. படைத்தல், காத்தல், அருளல், அழித்தல், மறைத்தல். எல்லாம் வல்ல ஈஸ்வரன் தனது கடமைகளை ஒழுங்காகச்செய்வதனால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனல் அந்த ஈஸ்வரன் கண்ணுக்குத்தெரியமாட்டார்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஈஸ்வரன் மக்களின் கண்களுக்கு நன்றாகத்தெரிபவர். தமிழ் சமூகத்தில் நன்றாக அறியப்பட்ட ஒரு டாக்குத்தர்தான் இந்த ஈஸ்வரன். உலகத்தைப்படைத்த ஈஸ்வரன் ஐந்து தொழில்களையும் ஒழுங்காக செய்துகொண்டிருக்கும்போது, டாக்குத்தர் தொழிலை செய்யவேண்டிய இந்த ஈஸ்வரன், முன்னே குறிப்பிட்ட ஐந்து தொழில்களில் கடைசி இரண்டையும் அதாவது அழித்தல், மறைத்தல் தொழில்களை பலகாலமாக செய்துவருகிறார். பாவம் நல்ல மனுசன்.
தமது டாக்குத்தர் தொழிலில் உண்மையாக நேர்மையாக அவர் இருந்தாலும் தெரியாத்;தனமாக ஒரு சிக்கலிலிருந்து பல காலமாக தப்பமுடியாமல் தவிக்கிறார். அதுதான் தமிழர் புனர் வாழ்வுக்கழகம். அங்கே இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் புலிகளின் ஆயுதங்களுக்காக பல்வேறுவழிகளிலும் சேகரிக்கப்பட்ட பணத்தை என்னசெய்வது எனத்தெரியாமல் பல பினாமிச்சங்கங்கள் அந்தரப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. சர்வதேச ரீதியாக நிதிப்பொறுப்பில் இருந்தபலர் பிரபாகரனுக்கு முன்பும் பின்பும் தலைமறைவாகியிருக்கின்றனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு சுவிஸில் நிதிப்பொறுப்பாளராக இருந்த முரளி என்பவர் கனடாவுக்கு தப்பி ஓடிவந்து தலைமறைவாக இருந்தபோதிலும் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத ஒரு மரணத்தினால் ( ஸ்நோவில் புதைந்த பிள்ளையின் மறைவு) ஆசாமி எங்கே இருந்தார் என்ற மர்மம் துலங்கியது. பிரான்ஸில் புலிகளுக்காக நிதி சேகரித்துக்கொண்டிருந்த நாதன் என்பவரும் ஈழமுரசு ஸ்தாபக ஆசிரியருமான கஜன் என்பவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட தகவலும் அதனைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் புலிகளின் சர்வதேச பேச்சாளர் லோரன்ஸ் திலகர் புலிகளின் தலைமைப்பீடத்தினால் வன்னிக்கு அழைக்கப்பட்டதும் பிறகு திலகர் எந்தக்காட்சியிலும் (ஸீனில்) தென்படாதிருந்ததும் தற்போது கைதாகி கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தமிழர்கள் அறிந்ததே.
செல்வராஜா பத்மநாதன் அன்ட் உருத்திரகுமாரன் கம்பனி செலுத்தவிருக்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஒரு காகிதக்கப்பல் என்று, வறுமைக்குப்பிறந்தவரின் இன்பத்தமிழ் வானொலியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீகாந்தா ஏற்கனவே சொல்லிவிட்டார். அதே வானொலியில் இப்போது டாக்குத்தர் ஈஸ்வரன் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்துக்காக நிதிசேகரிக்க அச்சாரம் போடுகிறார். இதுவரைகாலமும் ரேடியோ தோன் மூலம் சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான டாலர்களுக்கு என்ன நடந்தது அவை எவ்வாறு தமிழ் மக்களுக்கு செலவழிக்கப்பட்டன முதலான எந்த எழுத்து மூல அறிக்கை பத்திரிகை மூல தகவல்கள் வெளிவராதுபோனாலும் வறுமைக்குப்பிறந்தவருக்குரிய பத்து வீத கமிஷன் மாத்திரம் ஒழுங்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள செய்தியாகும்.
தமிழர் புனர் வாழ்வுக்கழகத்திற்;கு கணக்கு வழக்கு இல்லாவிட்டாலும் ஒரு முறையான வரலாறு உள்ளது. வண.பிதா ஜெயகுலராஜா மற்றும் அடேல் பாலசிங்கம் போன்றவர்களினால் 1986 களில் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர் ஈழத்தில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக்கழகத்தின் (T.R.R.O) ஸ்தாபகர் வழக்கறிஞர் கே. கந்தசாமி பாலகுமாரின் ஈரோஸ் இயக்கத்தினால் கொலைசெய்யப்பட்ட பின்னர் ( பாலகுமார் இப்போது அரச செலவில் உள்ளே இருக்கிறார்) ஈழத்தில் இயங்கத்தொடங்கியது.
புலிகளின் பல பினாமி அமைப்புகளில் ஒன்றுதான் இந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகம். ஆங்கிலத்தில் TRO) என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்புக்கு தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கிளைகள் உள்ளன. ஆனால் எங்கே தோற்றம் பெற்றதோ அந்த தமிழ் நாட்டில் இது காணாமல் போய்விட்டது. இலங்கை அரசாங்கம் இலங்கையில் இந்த அமைப்பின் கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் முடக்கியிருப்பதும் Old News
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக இயங்கும் நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர் மாவீரர் குடும்பங்களினதும் புலிகளினால், புலிகள் இயக்கத்துக்குள்ளேயே துரோகிகள் என அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட ( புதைத்தால் விதை அதனால் எரிக்கப்பட்ட) மாத்தயா உட்பட பலரது குடும்பங்களினதும் பராமரிப்புச்செலவுகளுக்கும் உதவியது. அத்துடன் ஆயுதக்கொள்வனவுகளுக்கு தேவைப்பட்டபோதும் வெளிநாடுகளில் புலிகளின் பிரதிநிதிகளின் மரணச்சடங்குகளுக்கும் மாவீரர் தின விழா செலவுகளுக்கும் பணம்தேவைப்பட்டபோது இந்த TRO தான் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியாக செயல்பட்டிருக்கிறது.
அன்டன் பாலசிங்கத்தின் மரணச்சடங்கிற்கும் ஆஸ்திரேலியா ஜெயக்குமாரின் மரணச்சடங்கிற்கும் அவர்களின் குடும்பம்தான் முழுச்செலவையும் பொறுப்பேற்றது என்று நம்பிக்கொண்டிருந்தால் அது அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம். புலிகளின் வெளிநாட்டு பினாமி அமைப்புகள் தமது வசம் வைத்துள்ள (பதுக்கி வைத்துள்ள) கோடிக்கணக்கான பணத்தை வெளியில் எடுத்து வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் பரிதவிக்கும் எமது உடன் பிறப்புகளுக்கு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவைக்கவேண்டியது வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மிகத்தீவிரமாக இயங்கும் இளையோர் அமைப்பின் வரலாற்றுக்கடமையாகும்.
பழம் பெருச்சாளிகளிடம் முடங்கியிருக்கும் பணத்தை வெளியே எடுப்பதுடன் இதுவரைகாலமும் ஜோய் மகேஸ்வரனின் இன்னிசை மாலை மற்றும் வறுமைக்குப்பிறந்தவரின் வானொலியில் ரேடியோ தோன் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் ஆகியனவற்றுக்கு முறையாக கணக்காய்வு (Audit) செய்த அறிக்கையைப்பெற வேண்டியதும் புதிய தலைமுறையினரான இளையோர் அமைப்பின் தலையாய கடமை. வேலுப்பிள்ளை பிரபாகரனை சுற்றியிருந்து சுரண்டிக்கொழுத்த பலர் இன்று ஈழத்தில் இல்லை.
ஆனால் இன்னமும் கொழுத்துக்கொண்டிருக்கும் வெளிநாடுகளில் உள்ள பல பிரமுகர்களை தட்டிக்கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆயுதங்களின் மூலம் தமிழின விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதற்கும் வெளிநாட்டில் திரட்டப்பட்ட பணம் உதவியிருக்கிறது. சரணடையும் எண்ணம் நடேசனுக்கும் புலித்தேவனுக்கும் பிரபாகரனுக்கும் ஏற்கனவே இருந்திருக்குமாயின் ஆயிரக்கணக்கான மக்களை பணயமாக வைத்திருக்காமல் விடுவித்திருக்கலாம்.
இறுதியில் என்ன நடந்தது?
தமிழ் மண்ணை எவ்வளவு தூரம் நேசித்தாரோ தலைவர் ,அதேபோன்று தமது காதல் மனைவி மதிவதனியையும் அன்பு பிள்ளைகள் சார்ள்ஸ், பாலச்சந்திரன், துவாரகா ஆகியோரையும் நேசித்தவர். இப்போது எல்லாம் போய்விட்டது அவரது நீண்டகால கனவு உட்பட.
பல பெயர்களில் உருவான பினாமி அமைப்புகளில் ஒன்றுதான் இந்த தமிழர் புனர் வாழ்வுக்கழகம். இதற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு கணக்கு வழக்கு இல்லை. இந்த பினாமிகளை இப்படியும் சொல்லலாம் சிங்காரிதான் காவேரி காவேரிதான் சிங்காரி;. மனித உயிர்களின் பேரழிவுக்கு துணைபோய்க்கொண்டு எல்லாவற்றையும் (கணக்கு-வழக்கு) மறைத்துக்கொண்டிருப்பதனால்தான் டாக்குத்தர் ஈஸ்வரன் அழித்தல் மறைத்தல் தொழில்களை வறுமைக்குப்பிறந்தவரின் துணையுடன் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். இளையோர்களே, தமிழ் மக்களே விழிப்போடிருங்கள்.
ஏற்கனவே பணத்துடன் தலைமறைவான பலர் வெளிநாடுகளில் தேடுதல் பட்டியலில் இருக்கின்றனர். அத்துடன் ஆஸ்திரேலிய மத்திய அரசின் காவல் துறையினர் ஏற்கனவே நகைக்கடை முதலாளி, புடவைக்கடை முதலாளி, சாப்பாட்டுக்கடை முதலாளி, ஏயார் டிக்கட் முதலாளி, ஐஸ்பெட்டி முதலாளி, சீட்டு முதலாளி, சினிமா பட இறக்குமதி முதலாளி உட்பட பல முதலாளிகளை விசாரித்து விட்டனர். பிரமுகர் முதலாளிகள்தான் பாக்கி.
இளையோரே இனி எதிர்காலம் உங்கள் கரங்களில் நாளை நமதே…..
- தேசியத்தலைவர்
தேணி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment