வேட்டை முடிந்து விளையாட்டு..
புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது.
இன்றையே தேதியில், இடம்பெயர்ந்தோர் தங்கு முகாம்களில் புலி வேட்டையின் பின்னான விளையாட்டுக்கள் பற்றிய எமது ஆதங்கம் இது.
புலி வேட்டையைக் காடுகளில் முடித்தாயிற்று, இனி நாட்டுக்குள் ஆங்காங்கே இருக்கும் புலிகள்,அவர்கள் வலையமைப்பு,புலனாய்வுக் கட்டமைப்பு மற்றும் மக்களோடு மக்களாக தப்பி வந்து எஞ்சியிருக்கும் புலிகளையும் வடி கட்டுவதில் இலங்கை இராணுவம் விடாப்பிடியாக இருக்கிறது.
வளர்ச்சியடையாத ஒரு நாட்டின் எதிர்கால நலன் கருதி, அரசின் இவ்வாறான வடிகட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு எதிரான சர்வதேசக் குரல்கள், இலங்கை எனும் நாட்டின் வள மற்றும், கள நிலைகள் சார்ந்து இல்லாததால் அவர்கள் அனைவருடைய வேண்டுகோள்களையும் வேகமாகப் புறந்தள்ளுவதில் இலங்கை அரசாங்கமும் முனைப்பாக இருக்கிறது.
சரி,இராணுவம் வடி கட்டலை ஆரம்பித்திருக்கிறது என்பது போக, உண்மையில் அந்தத் தங்கு முகாம்களில் நடந்து கொண்டிருக்கும் பல விடயங்களை உலகம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறது.
இதில் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகளின் குறைபாட்டையே பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
அது தொடர்பில் தம்மை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வர சர்வதேசம் நிதியுதவி செய்யாத வரை இலங்கை அரசுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது.
எனவே பல குழப்பகரமான அரசியலுக்குள், சர்வதேசத்தின் மனிதாபிமான அறைகூவல்களும் பலமிழந்து போய்க் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மக்களுக்கு இரண்டு தெரிவுகள் விடப்பட்டிருக்கின்றன.
ஒன்று, தம் நிலையை உணர்ந்து நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொள்வது.
அல்லது, குறுக்கு வழிகளில் விரைவாகத் தம்மை விடுவித்துக்கொள்வது.
இரண்டாவது நிலையை மக்கள் நம்புவதற்கும் போதியளவு அவர்களிடம் அனுபவம் இருக்கிறது, கடந்த காலங்களில் நாட்டில் எந்தத் தேவைகளுக்கும் பணத்தைப் பாவித்து அவற்றை அடைந்து கொள்ளலாம் எனும் வரலாறே அவர்களுக்குப் புகட்டப்பட்டுள்ளது.
லஞ்சம் எனும் பேரால் அரசாங்க ஊழியர்களுக்கும், கப்பம் எனும் பேரால் புலிகளுக்கும் கொடுத்துக் கொடுத்தப் பழகிய கைகள் இனியும் எதையாவது கொடுத்து வெளியேறிக் கொள்ளத் துடிப்பதில் நியாயமிருக்கிறது.
வெளிநாடுகளில் வாழும் அவர்களது உறவினர்கள் ஊடாகப் பெருந் தொகை பணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புகளும் இருப்பதால் எப்படியாவது இந்தக் குறுக்கு வழியை நாடுவதையே அவர்களது மனங்களும் ஆதரிக்கும்.
சுற்றிவர அடைக்கப்பட்ட விசாலமான தங்கு முகாம்களில் ஒருவரை, வெளியிலிருந்து ஒருவர் சென்று சந்திப்பதானால் அதில் இருக்கும் ஆயிரத்தெட்டு நடைமுறைகளையும் தாண்டிச்சென்று, அறிவித்தல் கொடுத்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.
இரண்டு, மூன்று கல் தொலைவில் எங்காவது உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உறவின் காதுகளுக்கு அந்த ஒலி பெருக்கிச் சப்தம் கேட்குமானால், அவரும் களைத்துப்போயிருக்கும் உள்ளத்தோடு நடந்து வந்து சேர்வார்.
அவர்களைப் பல சோடிக் கண்கள் கண்காணிக்கும்.
அந்த நிலையில், தம்மைப் பார்க்க வந்தவர்களிடம் உரையாடி, தற்போதைக்கு அவர்களால் கேட்கக்கூடிய ஒரே கேள்வி, எம்மை வெளியில் எடுக்க உதவி செய்யுங்கள் என்பதாகும்.
உதவி செய்யப் போகும் ஒருவர், அவ்வளவு இலகுவாக அதைச் செய்யவும் முடியாது.
சரீரப் பிணையாக அவர் முன் நின்று பல படிவங்கள் நிரப்பி,அனுமதி பெற்று,சில நேரங்களில் பல வாரங்கள் காத்திருக்கிறார்கள், இன்னும் பதில் கிடைத்த பாடில்லை.
எனவே, நடைமுறையை மீறி எதையாவது செய்ய முடியுமா, விரைவாக வெளியேற முடியுமா என்பது வெளியிலிருந்து பொருளாதார உதவியைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கக்கூடிய பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் அந்த மக்களுக்கும், அதே நேரம் பொருளாதார வசதியில் பின் தங்கி வேறு வழியை நாட முடியாமல் தவிப்போருக்கும் “அரசாங்கம்” செய்ய வேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டு அதே அரசாங்கத்தை நாங்கள் குறை கூறுவதானால் இன்னும் பல வருடங்களுக்குக் குறைகூறிக்கொண்டே இருக்க முடியும்.
மத்திய அரசு என்னதான் செய்தாலும், அடைபட்டுக்கிடக்கும் இந்த மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது எதிர்காலத்திலும் அவர்களுக்குக் கை கொடுக்கும் கடமையும்,உணர்வும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், அல்லது இப்போதும் புதிதாகப் பதிந்து கொள்ள முனையும், தமிழர் அரசியல் பிரதிநிதிகளிடமே இருக்கிறது.
தமிழ் தேசியக் கூத்தமைப்பு எனும் புலிப் பினாமி அமைப்பு நாட்டின் எல்லைக்கு வெளியாக இருந்து நாம் ஏற்கனவே கூறிய அரசைக் குறை கூறும் நடவடிக்கையோடு தம்மை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளது.
அவர்கள் மக்கள் நலன் சார்ந்தவர்கள் அல்ல என்பது கடந்த காலங்களிலும் நிரூபிக்கப்பட்ட நிலையில், மக்கள் சார்பான நிலையை எடுக்க வேண்டிய, அந்த மக்களுக்காக செயற்பட வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் இதர தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடமே விட்டு வைக்கப்படுகிறது.
த.தே.கூத்தமைப்பு தவிர்ந்த அனைத்து தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் ஏதோ ஒரு வகையில் புலி இல்லாத ஒரு சமூகத்தை விரும்பியவர்களாகவும், அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வருபவர்களாகவும், இனி வரும் காலத்தில் மக்களுக்காக செயற்படப் போவதாகவும் மிகக் கவர்ச்சிகரமான தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்தக் கவர்ச்சியானது வெளியுலகில் நன்றாக இருந்தாலும், உள் நாட்டில், அதுவும் அல்லல் படும் அப்பாவி மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஒரு சில முன்னாள் போராளி இயக்கங்கள், இந்நாள் அரசியல் கட்சிகள் மிகக் கேவலமாக நடந்து கொள்வதைச் சுட்டிக்காட்டுவதும் எமது கடமையாகும்.
அரசாங்கம் புலியை வேட்டையாடியதோ இல்லையோ, புலியும் இராணுவமும் சேர்ந்து மக்களை வேட்டையாடியது என்பது மிகக் கொடூரமான உண்மையாகும்.
இந்நிலையைத் தாண்டி, இப்போது உயிர் வாழும் உத்தரவாதத்துடன் ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமற் தவிக்கும் இம்மக்களைப் பொறுத்தவரை நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வது எனும் பெயரில் அவர்களை மீண்டும் வேட்டையாடி விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
மிகக் கண்டிப்பான இராணுவ கட்டமைப்பாக இருக்கும் தற்காலிக தங்கு முகாம்களில் இருக்கும் மக்களுக்குப் போதிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க, தமக்கிருக்கும் தொடர்புகள் அவற்றின் பயன்பாட்டைப் பாவிக்கத் தவறும் இச் சமூக விரோதிகள் மக்களை மீண்டும் மீண்டும் வேட்டையாடுவதற்காகத் தம் ஆளுமையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அதன் அடிப்படையில் கொழும்பு வரை கொண்டு சென்று விடுவதற்கு ஒரு விலையும், அதையும் தாண்டி இந்தியா வரை கொண்டு சென்று விடுவதற்கு ஒரு விலையும் பேசி அந்த மக்களிடம் பணம் கறக்கிறார்கள்.
வெளியேறத் துடிக்கும் மக்களும், கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிநாடுகளில் வாழும் தம் உறவினர்களிடம் அறிவித்து, எப்படியாவது பணத்தைக் கட்டி, கொழும்போ இந்தியாவோ முதலில் இந்த முகாம்களை விட்டு வெளியேறினால் போதும் எனும் நிலைக்கு முண்டியடித்துக்கொண்டு முண்டுகொடுக்கிறார்கள்.
மக்களின் இந்த நிலையைச சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் இந்தக் கேவலமான தமிழ்ப் பிரதிநிதிகள் தலைக்கொரு விலை பேசி தமக்கிருக்கும் தொடர்புகள் மூலம் காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.
உலகுக்கு மிக இறுக்கமாகக் காட்டப்படும் இராணுவ முகாம்களுக்குள் உஙகளுக்கு இந்தளவு செல்வாக்கு இருக்கும் போது, அந்த செல்வாக்கை அல்லல் படும் மக்களின் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவும் நீங்கள் பாவிக்கலாமே?
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்தது ஒன்றுதான் அவர்கள் செய்த தவறா? அப்படியானால் அவர்களை புலிதான் இழு இழு என இழுத்துச்சென்றது என்று கை வலிக்க நீங்கள் சார்ந்த அமைப்புகளின் இணையங்களும் எழுதித்தள்ளியதும், பிரமுகர்கள் மேடைகளிலும், சந்திப்புகளிலும் பேசித் தள்ளியதும் எல்லாம் பொய் வேஷமா?
அவர்களின் பலர் புலிகளின் மாவீரர் குடும்பங்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அதிலும் பல ஆயிரம் பேர் தாம் விரும்பாமல் தம் பிள்ளைகளைப் பறிகொடு்த்தவர்கள் எனும் உண்மை உங்களுக்கும் தானே தெரியும்? அல்லல் பட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துத் தப்பி வந்த மக்களை சிங்கள இனமே ஆதரித்துக்கொண்டிருக்கும் போது தமிழர்கள் நீங்கள் பழிவாங்குவது நியாயமா?
இராணுவ முகாம்களுக்குள் இத்தனை செல்வாக்குள்ள நீங்கள் அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு சில நன்மைகளையாவது செய்து கொடுத்து, உங்கள் அமைப்புகளின் அரசியல் நிலைக்காகக் கூட உழைக்காமல், அம்மக்களின் தவிப்பைப் பயன்படுத்தி அவற்றைக் காசாக்கி, உங்கள் நலனிலேயே அக்கறையாக இருக்கிறீர்களே? அப்படியானால் உண்மையில் நீங்கள் முன்னாள் போராளிகள் தானா?
இவற்றைக் கண்டிக்க உங்கள் தலைமைகள் தயங்குகிறதா? அல்லது கண்டுகொள்ளத்தவறுகிறதா? இதில் எதைச் செய்தாலும் உங்கள் தலைமைகளும் பிரபாகரனுக்குச் சற்றும் குறையாத சுயநலவாதிகளாகத் தானே கணிக்கப்பட வேண்டும்.
பிரபாகரனின் வீட்டிற்குள் நடப்பதையெல்லாம் கூட அறிந்த தொனியில் முன்னர் வீரம் பேசிய தலைவர்கள், இப்போது நீங்கள் அவிழ்த்து விட்டிருக்கும் இந்த மனித விரோதத்தைத் தட்டிக்கேட்கவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த நிலை எடுப்பதற்கோ தயங்குமானால், புலி எப்படித் தமிழரின் பிரதிநிதியாக இருக்க முடியாது எனும் நியாயம் இருந்ததோ அதே போன்று நீங்களும் எந்த வகையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செயய முடியாது.
தவித்த முயலை அடிப்பதில் வல்லவர்களாக உலகமே அறிந்து கொள்ளும் அளவுக்கு உங்களை நீங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
நீங்கள் செய்யும் பிழைகளை வைத்துப் பிரச்சாரம் செய்துதான் உங்களை எப்போதுமே தமிழ் மக்களின் எதிரிகள் என்று புலிகள் தம் காரியங்களைச் சாதித்துக்கொண்டார்கள். அந்தக் காலத்தில் அதைப் புலி உங்கள் மீது உள்ள விரோதத்தில் செய்கிறது என்று வீரம் பேசினாலும், இப்போதும் நீங்கள் இன்னும் தான் மக்கள் நலன் சார்ந்தவர்களாக இல்லையே?
உங்களையெல்லாம் நம்பி இந்த மக்கள் ஏன் வாழ வேண்டும்? ஒற்றுமை பற்றி இப்போது அனைத்துத் தமிழ்த் தரப்பும் அடிக்கடி பேசிக்கொள்கிறது, எந்த ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? ஆட்சியில்,அதிகாரத்தில் வரக்கூடிய உங்கள் அதிகாரத்தின் ஒற்றுமையைப் பற்றி மட்டுமா பேசுகிறீர்கள்?
அப்படியானால் உங்களை அதிகாரத்தில் அமர்த்தியதும் மிக ஒற்றுமையாக எல்லோருமாக சேர்ந்து மீண்டும் மக்களை வேட்டையாடப்போகிறீர்களா? இதற்கு சிங்கள மக்களும் சிங்கள அரசியல் வாதிகளும் எவ்வளவோ திறமாயிற்றே?
சரி, ஒரு பேச்சுக்காக இடைத்தங்கல் முகாம்களில் நடக்கும் இந்த அட்டூழியங்கள் அங்கு இராணுவ செல்வாக்குடன் செயற்படும் அமைப்புகளின் தலைவர்களுக்குத் தெரியாது என்றே வைத்துக்கொள்வோமே, இனியாவது இந்தத் தலைவர்கள் இதில் தலையிட்டு மக்களை மீண்டும் மீண்டும் வேட்டையாடுவதை அவர்கள் வாழ்வோடு விளையாடுவதைத் தடுப்பார்களா?
கேவலம் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் அதுவும் இடர் சுமந்த வரலாற்றோடு வாழும் தமிழினம் அதன் பேரில் ஒரு சில சமூக விரோதிகளாவது செயற்படுவது என்பது தடுக்கப்படவும், துடைத்தெறியப்படவும் தேவையான மிக முக்கியமான விடயமாகும்.
இதில் எந்த அமைப்பு சம்பந்தம் என்ற வரைவிலக்கணம் கிடையாது, இராணுவ செல்வாக்குடன் முகாம்களுக்குள் செல்லும் வசதி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உள் நுழையும் அனுமதியை வைத்துக்கொண்டு எந்த முகாம்களுக்குள் நுழைகிறார்களோ அங்கெல்லாம் பல மூன்றிழக்க லட்சங்களைக் கறக்கிறார்கள்.
அந்த மக்களின் நிலையை நினைத்துப் பரிதாபப்பட்டு அவர்களுக்காக, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திறாக உங்கள் சலுகைகள்,வசதிகளைப் பாவித்து எதையாவது செய்வீர்கள் என்று எதிர்பார்த்தால், கிடைத்த சந்தர்ப்பத்தில் தவிச்ச முயலை அடித்து, மீண்டும் மீண்டும் தமிழினத்தைத் துண்டாடிக்கொண்டிருக்கிறீர்களே? தவறான வழிகாட்டிச் செல்கிறீர்களே? இதுவெல்லாம் நியாயந்தானா?
மக்கள் நலன் காக்க எழுத்தில் வீரமும், அறிக்கைகளில் ஒற்றுமையும் இருந்து என்ன பயன்? நடைமுறையில் அது மக்களைப் போய்ச் சேரவில்லை என்றால் “சிங்களப் பேரினவாதம்” எனும் பிரிவினையை உருவாக்கிய அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
தலை நிமிர்ந்து வாழ வேண்டிய ஒரு சமுதாயத்தை புலி எனும் சித்தார்ந்தம் முதுகெலும்பையும் உடைத்து வைத்தது என்றால் நீங்களும் அவர்களுக்குச் சற்றும் குறையாமல் முடமாக்கப் பார்க்கிறீர்களே?
தங்குமுகாம்கள் எல்லாம் தற்காலிகம் என்று அரசாங்கம் என்னதான் கூறினாலும், அங்கு பல நிலையான கட்டிடங்கள் ஏறத்தாழ புதிய நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நீங்களும் மறுக்க முடியாது.
அப்படியானால், அந்த மக்களுக்காகவும் அவர்கள் முன்னேற்றத்திற்காகவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த நிலையைப் போக்கி அவர்கள் தம் சொந்த நிலங்களில் மீளக் குடியேறி சுதந்திரமாக சுவாசிக்க வேண்டும் என்னும் அடிப்படைத் திட்டமே உங்களிடம் இல்லாமலா நீங்கள் எல்லாம் அவர்களை அரசியலில் பிரதிநிதித்துவம் செய்யப் போகிறீர்கள்?
உங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பாவித்து இனியாவது வசதி வாய்ப்பில்லாத மக்களின் அடிப்படை வசதிகளை, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எதையாவது செய்வீர்களா?
இல்லை தொடர்ந்தும் மக்களை வேட்டையாடி, அவர்கள் உணர்வுகளோடு விளையாடத்தான் போகிறீர்களா?
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment