யாழ்-கொழும்பு விமானப் பாதையில் மாற்றம்
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பாதையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடையைப் பாதுகாப்பு அமைச்சு தளர்த்தியுள்ளது. இதனால் உள்ளூர் விமானங்கள் யாழ்ப்பாணத்துக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்லும் நிலைமை தவிர்க்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையில் விமான சேவையில் ஈடுபட்டிருந்த உள்ளூர் விமானங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மேலாகப் பறப்பதைத் தவிர்த்து கொழும்பிலிருந்து புறப்பட்டு மன்னாரை அண்மித்த கடற்பரப்பின் மேலாகச் சென்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து இலகுவான வான்பாதை மூலம் யாழ்ப்பாணத்தை விமானங்கள் சென்றடையலாம் என சிவில் விமான சேவைகளின் பதில் பணிப்பாளர் பராக்கிரம திஸ்ஸாநாயக்க கூறினார்.
“பலாலிக்கும், இரத்மலானைக்கும் இடையில் விமான சேவைகளில் ஈடுபடும் விமானங்கள் இதுவரை கடல்பகுதிகளுக்கு மேலாகவே சென்றன. எனினும், தரைப் பகுதிகளுக்கு மேலாகப் பறந்து செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு கடந்த புதன்கிழமை அனுமதியளித்துள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
இந்த விமானப் பாதையை உள்ளூர் விமானங்கள் விரைவில் பயன்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்;காட்டினார்.
கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விமான சேவைகள் நடைபெற்று வருகின்றபோதும், விமானம் பயணிக்கும் பாதைகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பதால் குறைந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தைச் சென்றடையலாமென தனியார் விமான சேவையொன்றின் பணிப்பாளர் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment