பொட்டம்மான் மோதல்களில் கொல்லப்பட்டார்: இராணுவத் தளபதி
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் மற்றும் அவரின் உதவியாளர் கபிலம்மான் ஆகிய இருவரையும் இராணுவத்தினர் கைதுசெய்யவில்லையெனவும், அவர்கள் மோதல்களில் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொட்டம்மானும், கபிலம்மானும் இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவுவதாகக் குறிப்பிட்ட அவர், எனினும், அவற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் கூறினார்,
ஆனாலும், உயிரிழந்த இவர்கள் இருவரினதும் சடலங்களையும் இராணுவத்தினர் இதுவரையில் அடையாளம் காணவில்லையென்பதால், அவற்றை அடையாளம் காணும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேநேரம், விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவனும் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியுமெனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடையப்போவதாக 7 அல்லது 8 மணித்தியாலங்களின் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிருடன் கைதுசெய்திருப்போமெனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அதேநேரம், இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கும் பொட்டம்மானின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொட்டம்மான் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment