தமிழர் படுகொலை: 'உண்மைகளை மறைக்கிறது ஐ.நா!'
பாரீஸ்: இலங்கை தமிழர் இனப்படுகொலை குறித்த உண்மைகளை ஐ.நா. சபை மறைத்து வருகிறது என்று பிரான்ஸைச் சேர்ந்த முன்னணி நாளிதழான லே மான்டே குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பெருமளவிலான உயிர்ப்பலிகள் குறித்து தனக்குத் தகவல் தெரிந்தும் கூட அதை வெளியிடாமல் வேண்டும் என்றே மறைத்து வருகிறது ஐ.நா. என்றும் லே மான்டே குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து லே மான்டே விரிவான புலனாய்வு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா. ரகசிய அறிக்கையின்படி கடைசி கட்டப் போரின்போது 7720 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 678 பேர் குழந்தைகள். 18 ஆயிரத்து 465 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2384 பேர் குழந்தைகள்.
இந்த சம்பவம் அனைத்தும் ஜனவரி 20ம் தேதி முதல் மே 13ம் தேதிக்குள் நடந்ததாகும். ஆனால் இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஐ.நா. வெளியிடாமல் மறைத்து வருகிறது. இலங்கை அரசுடன் நல்லுறவை பேணிக் காப்பதற்காக இவ்வாறு ஐ.நா. செய்வதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனே கூட உண்மை பலி எண்ணிக்கையை மறைக்க விரும்புவதுதான்.
மிகக் கடுமையான தாக்குதல்களே கடைசி நாட்களில் நடந்தது. இந்த நிலையில் 7720 பேரே இறந்ததாக ஐ.நா. கருதுவது நம்பும்படியாக இல்லை. பான் கி மூனின் தூதராக கொழும்பு வந்து சென்ற விஜய் நம்பியார், 20 ஆயிரம் பேரை கொல்லப்பட்டதாக பான் கி மூனிடம் தெரிவித்ததாக ஐ.நா. அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்துகிறார். இதை டைம்ஸ் இதழும் வெளியி்ட்டுள்ளது.
மே 19ம் தேதியன்று நடந்த உச்சகட்ட தாக்குதலின்போது மட்டும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பலி எண்ணிக்கை இத்தோடு முடியவில்லை. இது மேலும் மேலும் அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது என்று லே மான்டே செய்தி கூறுகிறது.
அதேபோல, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. பணியாளர்களுக்கே கூட ஐ.நா. அவை உதவ மறுப்பதாகவும் லே மான்டே குற்றம் சாட்டியுள்ளது.
போர்க்களத்தில் கடைசி நேரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐ.நா. ஊழியர்கள் பலர் ஐ.நாவுக்கு அடுத்தடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர். போரை நிறுத்துங்கள், சர்வதேச சமுதாயம் என்ன செய்து கொண்டிருக்கிறது, நூற்றுக்கணக்கான அப்பாவிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். அப்பாவி மக்களின் நிலை மிக மிக மோசமாக உள்ளது என்று அந்த எஸ்.எம்.எஸ். செய்திகள் கூறின. ஆனால் இதை ஐ.நா. பொருட்படுத்தவே இல்லை.
இதை விட கொடுமையாக கடந்த ஏப்ரல் மாதம், போர் முனையில் இருந்த ஐ.நா. பணியாளர்களுக்கு விஜய் நம்பியார் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில், அதிகமாக குரல் கொடுக்க வேண்டாம். இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயல்படுங்கள் என நம்பியார் அறிவுறுத்தியுள்ளார். இது மிகவும் மோசமானது என்று லே மான்டே குற்றம் சாட்டியுள்ளது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment