சரணடைந்த புலிகளின் உறுப்பினர்களை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது?
புலிகளுடனான யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் 9 ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் அரசிடம் சரணடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனை அடுத்து பெருந்தொகைப் போராளிகள் சரணடைந்துள்ளனர்.
அரசுக்கெதிராக ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த தற்போது அரசிடம் நிராயுதபாணிகளாக சரணடைந்துள்ள போராளிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துகள் பரவலாகப் பேசப்படுகின்ற போதும் அவையேதும் உறுதிப்படுத்தக் கூடியதான மூலங்களைக் கொண்டதாகவோ அல்லது வெளிப்படைத் தன்மையானதாகவோ இல்லை. இந்நிலையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதானது மனிதாபிமான நடவடிக்கையே.
இந்நிலையில், இந்தியா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் (பி.பி.சி. தமிழோசை) பின்வருமாறு குறித்த சரணடைந்த போராளிகள் தொடர்பில் கருத்துகளைத் தெரிவித்தார். அதன் சாராம்சமானது இலங்கை அரசு சரணடைந்த போராளிகளுக்கு ஒரு பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதென்பதையும் இலங்கையில் ஜே.வி.பி.யினருக்கு கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பினையும் சுட்டிக்காட்டினார்.
எனினும், அரசாங்கம் மீது தம்மால் முடிவைத் திணிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டு உலகம் வரவேற்கும் செயலாகவும் இப்போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதானது இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன்.
கடந்த காலத்தில் அதாவது, படைத் தரப்பினருடன் விடுதலைப் புலிகள் நேரடியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயங்களில் அவ்வப்போது இரு தரப்பினராலும் போர்க் கைதிகள் சிறைப்பிடிக்கப்பட்டமையும் பின்னர் சர்வதேச ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கமைவாக போர்க் கைதிகள் பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகள் அரச படைகள் தமது முற்றுகையை நெருங்கிய சமயங்களிலும் போர்க் கைதிகளாக தம்மால் சிறைப்பிடிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இராணுவத்தினரை மனிதாபிமான நடவடிக்கையாக விடுவித்திருந்தனர்.
எனினும், இதுவரை காலம் நிலவிய நிலைமைகளுக்கப்பால் புலிகளின் கட்டமைப்புகள் யாவும் நிர்மூலஞ் செயப்பட்டுள்ளதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் மேற்படி சரணடைந்த போராளிகள் தாமாகவே இடம்பெயர்ந்து மக்களுடன் மக்களாக நிராயுதபாணிகளாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வைத்தும் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் வைத்தும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசானது எந்தளவிற்கு இப்போராளிகள் குறித்து மனிதாபிமானம் உள்ளதும் சர்வதேச நியதித் தன்மையானதுமான அணுகு முறையைக் கையாளப் போகின்றது அல்லது கையாளுகின்றது என்பது உன்னிப்பாக சர்வதேசத்தினாலும் உள்ளூர், வெளியூர் மனித உரிமைகள் பொறிமுறைகள் வாயிலாகவும் கவனிக்க வேண்டியுள்ளது.
வன்னியில் வீட்டுக்கொருவர் போராளியாக புலிகள் அமைப்பில் இருந்துள்ளனர் என்ற நிலையிலும் பல்வேறுபட்ட வகையிலும் அம்மக்கள் ஏதோவொரு வகையில் தொடர்புற்று இருந்தும் இருக்கலாம். இந்நிலையிலேயே அரசு கூறும் சுமார் 9500இற்கு மேற்பட்ட போராளிகள் சரணடைந்துள்ளனர் அல்லது கண்டறியப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புலி உறுப்பினர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, இறம்பைக்குளம் கல்லூரி, பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரியிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செதிகள் வாயிலாக அறியமுடிகிறது.
மேலும், விசாரணைக்குப் பின் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம்களுக்கும் அனுப்பப்படுவதாகவும் அங்கு சில தமிழ்க் கட்சித் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் சென்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் கருத்துப்படி அரசிடம் சரணடைந்த போராளிகள் தம்மை யுத்தம்/போர் என்ற வகையில் மட்டுமே இயைபுபடுத்திக் கொண்டவர்களெனவும் தற்போது விசாரணை களையடுத்து சரணடைந்தவர்களுக்கு தொழிற்பயிற்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளதாகவும் பலதடவைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1949ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கைகளின் உறுப்புரையின் பிரகாரம் வலியுறுத்தப்படும் பல்வேறு விடயங்களையும் எடுத்துக் கூறுவதானது சரணடைந்த போராளிகள் குறித்தான மனிதாபிமான நடத்துகைக்கு விழிப்பாயிருக்கும். இதில் 1948ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையின் 1ஆவது சரத்து,
""ஆயுதங்களைக் கீழே வைத்துள்ள மற்றும் நோ, காயங்கள், தடுப்புக்காவல் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போர் செவதனை இடைநடுவில் நிறுத்திக் கொண்ட ஆயுதந்தாங்கிய படைகளின் உறுப்பினர்கள் உட்பட மோதலில் தீவிரமாக பங்குபற்றாத ஆட்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இனம், நிறம், மதம் அல்லது நம்பிக்கை, பால், பிறப்பு அல்லது செல்வம் என்பவற்றின் அடிப்படையில் அல்லது இவையொத்த வேறு வித்தியாசத்தின் அடிப்படையில் எவ்விதமான பாதகமான வேறுபாடும் காட்டப்படாமல் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுதல் வேண்டும்' என்கிறது.
இதனடிப்படையில் சரணடைந்த போராளிகள் கடந்த காலங்களில் அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்களாகவோ அல்லது ஆயுத மோதல்களில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கலாம். எனினும், அந்தப் போராளிகள் போர்க் கைதிகள் என்ற நிலையைக் காட்டிலும் அவர்களது உரிமைகள் குறித்து உள்ள விடயங்களுக்கேற்றால் போல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரணடைந்தோர் தற்போது படையினரின் பிடியிலிருக்கின்றனர் என்பதனை அவர்களது விபரங்களையும் வெளியிடத்தக்கதாகவோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அறியக் கூடியதாகவோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சீர் செயப்பட வேண்டும்.
அடிப்படையில் போராளிகள் மக்கள் மத்தியிலிருந்தே தோற்றம் பெற்றவர்கள். அவர்களது உறவினர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கலாம். இந்நிலையில் பொதுவாக இவர்களில் அக்கறையுடையோர் எவரும் சரணடைந்தோர் நலன் குறித்து அறிவதற்கு வழிசெயப்பட வேண்டும்.
இந்த போர்க் கைதிகள் குறித்த விடயத்தில் மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச பொறிமுறைகள் முக்கியமானது. அதற்கேற்றால் போல் தலையீடுகளோ கருத்துகளோ இலங்கையில் நிலவுவதென்பது அருமையாகவேயுள்ளதுடன் இதுகுறித்து காத்திரமாக குரலெழுப்ப வேண்டியது மனித உரிமைகள் சார்ந்த பணியாகும். இதனிடையே அரசாங்கத்தின் தெரிவாக இவ்வாறு சரணடைந்தோர் ஆயுதக் குழுக்களாக பரிணமிக்க இடமளிப்பதாகவும் தற்போது சில கட்சிகள் துணை இராணுவக் குழுக்களாக இயங்க அனுமதிக்கப்படுவதைப் போல் இந்த சரணடைந்த போராளிகளும் மூளைச் சலவை செயப்படுவார்களாயின் இலங்கையின் இயல்புச் சூழல் மேலுமொருபடி பின்னோக்கித் தள்ளப்படுவதாகவே அமையலாம்.
யதார்த்தன்
0 விமர்சனங்கள்:
Post a Comment