புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா?
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ள தமிழர்கள் எவ்வேளையிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையை ஆட்சி புரிந்த அரசுக்களுக்குமிடையே இடம்பெற்றுவந்த போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக் கலவரத்தையடுத்தே தமிழர்கள் வெளிநாடுகளை நோக்கி அகதிகளாகச் செல்லத் தொடங்கினர். ஐரோப்பிய நாடுகளிலும் அயல்நாடான இந்தியாவிலுமே பெருமளவானோர் அகதிகளாக அடைக்கலம் தேடினர்.
கனடாவில் இன்று நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் அங்கு ஒரு குட்டி யாழ்ப்பாணத்தையே உருவாக்கியுள்ளனர். அதேபோன்று பிரான்ஸிலும் பெருமளவானோர் குடியேறியுள்ளனர். இங்குள்ள "லாச்சப்பல்' என்ற பெரும் கடைத்தெருவே இலங்கைத் தமிழருக்கு சொந்தமாகவுள்ளது.
அதேபோன்று பிரிட்டன், சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதேபோன்று நோர்வே, டென்மார்க், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் கல்வித்துறையில் முன்னிலையில் உள்ளனர்.
ஆனால் இந்தியாவிலுள்ள 25 மாவட்டங்களிலுள்ள அகதிகள் முகாம்களிலுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழரின் நிலைதான் மிகவும் மோசமானது. எந்தவித அடிப்படை வசதிகளோ, பொருளாதார வசதிகளோ இன்றி தமிழக அரசின் நிவாரணத்தை நம்பியே கடந்த 26 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கான புனர்வாழ்வு, நிவாரண உதவிகளை இலங்கையரசும் தொண்டர் அமைப்புகளும் வழங்கி வருகின்றன.
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளவர்களில் மிகக் குறைந்தளவினருக்கே அந்த நாட்டு அரசுகள் அகதி அந்தஸ்து கொடுத்துள்ளன. சிறுதொகுதியினர் அந்த நாடுகளின் பிரஜாவுரிமைகளையும் பெற்றுள்ளனர்.
அகதிகளாக வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்த லட்சக் கணக்கானோருக்கு அந்த நாடுகள் தற்காலிகமாக தமது நாடுகளில் தங்குவதற்கான அமைதியையே வழங்கியுள்ளன. அதுவும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை அந்த அனுமதியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.
இதில் பிரிட்டனே மிகக் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதுடன் அகதி அந்தஸ்து கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. பிரிட்டனில் அகதி அந்தஸ்துக் கோருபவருக்கு வழங்கப்படும் அனுமதி ஒரு மாதத்திற்கு மட்டமே செல்லுபடியாகும். அதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தமது அனுமதிகளை புதுப்பிக்கச் செல்பவர்களில் பலர் அனுமதி புதுப்பிப்பது மறுக்கப்பட்டு உடனடியாகவே அடுத்த விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்படும் சம்பவங்கள் பெருமளவில் நடந்துள்ளன. இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் கூட பெருமளவான தமிழரை ஈவிரக்கமின்றி பிரிட்டன் இலங்கைக்கு நாடு கடத்தியது.
தற்போது உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தமது நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் மீதான நடைமுறைகளை பல நாடுகளும் இறுக்கி வருகின்றன. இதில் அந்த நாடுகளில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழர்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பல நாடுகள் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த தமது நாட்டு சட்டங்களையே திருத்தி அமைத்துக் கொண்டுள்ளனர். பல நாடுகள் அகதிகள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கியதுடன் அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தின.
அதேவேளை இலங்கையில் ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்த தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளில் தமது உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய போராட்டங்களாலும் பல நாடுகளில் இலங்கைத் தமிழர் தொடர்பில் ஒரு இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளால் வெளிநாடுகள் நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தமை அந்த நாடுகளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்த அதேவேளை, தமிழர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இலங்கையில் நடந்த தமது உரிமைப் போராட்டம் இவ்வளவு விரைவாக முடிவுக்கு வருமெனவும் இவ்வாறானதொரு முடிவு ஏற்படுமெனவும் கனவில்கூட நினைத்திராத இவர்கள் தற்போதைய இலங்கையின் அரசியல், இராணுவ மாற்றங்களால் ஆடிப்போயுள்ளதுடன் தமது எதிர்காலம் குறித்த கலக்கத்திலும் உள்ளனர்.
இவர்களின் கலக்கத்தை அதிகரிப்பது போல் இலங்கையரசின் செயற்பாடுகளும் வெளிநாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளும் அங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவேயுள்ளன. இலங்கையின் போர் முடிவு இவ்வாறானதொரு மாற்றத்தை வெளிநாடுகளில் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்திலிருந்து அறிவித்த ஒரு சில தினங்களுக்குள்ளேயே இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமது நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களென அறிவித்தார்.
இதையடுத்து அங்குள்ள 25 மாவட்டங்களிலுமுள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலுள்ள ஒரு லட்சத்தக்கும் மேற்பட்ட அகதிகளிடம் இலங்கைக்கு திரும்பிச் செல்வதற்கான விருப்பம் குறித்த பதிவுகளை பொலிஸார் மூலம் தமிழக அரசு மேற்கொண்டது. ஆனால் 99 வீதமாக அகதிகள் இலங்தைகக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஆனால் பதிவுகளை மேற்கொண்ட பொலிஸார் பெருமளவான அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தனர். இதனை அங்குள்ள ஊடகங்களும் "இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு திரும்பிச் செல்ல விருப்பம், என செதிகளை வெளியிட்டன.
இதன் மூலம் இலங்கை அகதிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்பதில் இந்திய அரசு உறுதியாகவுள்ளதையே அது எடுத்துவரும் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
இதேவேளை, வெளிநாடுகளிலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வருமாறும் இலங்கையில் போர் முடிந்துவிட்டதனால் அவர்களுக்கான சுபீட்சமான வாழ்க்கையை தனது அரசு ஏற்படுத்திக் கொடுக்குமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அத்துடன் இனிமேல் இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரை ஏற்றுக்கொள்ள வேண்டாமென வெளிநாடுகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டதால் அகதியாக இனி எவரும் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லையென்றும் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகளை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ள அரசு அந்தந்த நாடுகளில் உள்ள தனது தூதுவர்கள் மூலம் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான அழுத்தங்களையும் அந்த நாடுகளுக்கு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையரசின் இந்த அறிவிப்பையடுத்து பல நாடுகள் தமது நாட்டிலுள்ள இலங்கைத் தமிழரை திருப்பியனுப்புவது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இது தொடர்பில் அந்த நாடுகள் சில திட்டங்களை வைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தந்த நாடுகளின் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், நீதிமன்ற தண்டனை பெற்றவர்கள் முதலில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களெனவும் அடுத்த கட்டமாக குழுக்களாக அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் திருப்பியனுப்ப ப்படுவார்களென்றும் அதற்கடுத்ததாகவே தற்காலிக அனுமதியில் தங்கியிருப்போர் திருப்பி அனுப்பப்படுவார்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ள போதும் அதற்கான சூழ்நிலை இங்கு இன்னும் ஏற்படவில்லை. அது இன்னும் சில வருடங்களுக்கு ஏற்படப் போவதும் இல்லை.
வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ளவர்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் கிழக்கு மீட்கப்பட்டு அங்கு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் இனிமிகவிரைவாக வடக்கிலும் இயல்பு நிலை தோற்றுவிக்கப்படுமெனவும் அரசு கூறுகின்றது.
கிழக்கு மீட்கப்பட்டு மாகாண சபைத்தேர்தல் நடத்தப்பட்ட போதும் அங்கு தற்போதும் ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனங்களும் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் வடக்கும் தற்போது அரசினால் மீட்கப்பட்டுள்ளது.
அரசினால் மீட்கப்பட்ட வடக்கில் மிக விரைவாக இயல்புநிலை தோற்றுவிக்கப்படுமென கூறப்படுகின்றது. ஆனால் யுத்த நடவடிக்கைகளால் அங்கிருந்து வெளியேறிய 4 லட்சம் பேர் வரையானோர் அகதிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மீள் குடியேற்றம் இன்னும் 3 வருடங்களுக்கு சாத்தியமில்லையென்றே கூறப்படுகின்றது.
அவ்வாறானால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் 3 வருடங்களுக்கு மக்கள் மீள் குடியேற்றப்படமாட்டார்கள். அத்துடன் யாழ் குடாநாட்டிலும் பெரும்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பேரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிப்பு செயப்பட்டுள்ளதால் அப்பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்போதும் அகதிகளாகவேயுள்ளனர்.
அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் ஏற்படுத்தப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கிழக்கிலும் தமிழரின் பூர்வீக இடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டுவருவதால் பலர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இலங்கையில் 4 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் மீள்குடியேற்றமின்றி அகதிமுகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழும்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தமது நாட்டுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பது வேடிக்கையான செயலாகவே உள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றிவிட்டு அவர்களுக்கான இயல்புநிலையை அரசு ஏற்படுத்துமானால் வெளிநாடுகளில் உள்ள அகதிகள் தாமாகவே தமது தாமண்ணை நோக்கி ஓடி வருவார்கள்.
அதைவிடுத்து, இங்குள்ள அகதிகளையே பராமரிக்க முடியாமல், அவர்களை மீளக் குடியேற்றாமல், செயற்பட்டு வரும் அரசு வெளிநாடுகளிலுள்ள அகதிகளையும் இங்கு அழைத்துவிட்டு என்ன செய்யப்போகின்றது.
அதேவேளை இலங்கை அரசின் பேச்சைக் கேட்டு இலங்கை அகதிகளை வெளிநாடுகள் திருப்பி அனுப்புமாகவிருந்தால் அது ஒரு பெரும் மனிதாபிமானமற்ற செயலாகவும் மனித அவலத்தை ஏற்படுத்தும் செயலாகவுமே இருக்கும்.
தாயகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment