புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம்
புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்'' என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்'' என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம்.
அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், ""இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்'' என்று சொல்ல, புன்முறுவலோடு மெது வாகத் தலையசைத்தார் பெரியவர். உடனே அந்த நண்பர் ""இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு'' என்று வருத்தப்பட்டார்.
"அய்யா...' என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், ""தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச் சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்'' என்று அடிக்குரலில் பேசினார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார்.
""பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன். என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, "எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள ராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும். எங்கட மக்களுக் குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா... சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக் கோம்'னாரு.
போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு.
நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு. இந்திய தேசியப் படையின் பிரிவு களுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு.
என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும். இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல. தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில... சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துட ணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி "உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்'னு அவரே அறுத்தாரு. எதிரிக்கு சிம்ம சொப்ப னமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்.
ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, "அண்ணா... குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படி யிருந்தா நல்லதுன்னு சொல்வாங் கள்ல...' என்று உற்சாகமாகச் சொல்ல... நானோ, "இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக' என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன். தம்பியோ "அடப் போங்கண்ணா... என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா... சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு'ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.
கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்'' என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், ""சற்று ஓய்வு எடுத்துக்கங்க...'' என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.
""நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு'' என்று கண்கலங்கினார்.
மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள... "அய்யா அழைக்கிறாரா?' என்றோம். எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ... ""அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா...'' என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள்.
தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந் திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க... வாசகர் களின் சார்பில் அம் மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: அண்ணல்
0 விமர்சனங்கள்:
Post a Comment