புலி மிரட்டினால் பொலிஸில் முறையிடுங்கள் : புலிகளின் நோர்வே பொறுப்பாளர்களில் ஒருவர்.
இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக பலம் இழந்தாலும் நோர்வேயில் புலிகளின் கொலை அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது என நேற்று நோர்வே தேசியத் தொலைக்காட்சியில் பேசிய நோர்வே பிரஜாவுரிமையையுடைய 12 இலங்கையர்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் காட்டுமிராண்டி தனமான வேலைகள் தொடர்பாக நோர்வே தமிழ் மக்கள் நோர்வே தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ள விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள 12 பேரில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும், அவர்களது பிரச்சார செய்பாடுகளில் ஈடுபட்டவர்களும் தீவிர ஆதரவாளர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத் தொலைக்காட்சி நிகழ்வில் பேசிய புலிகளின் நோர்வே அரசியல் துறைப்பொறுப்பாளரும் நோர்வே தொழில் கட்சி பாராளுமன்ற வேட்பாளருமான யோகராஜா பாலசிங்கம், புலிகளின் அச்சுறுத்தல் இருந்தால் பொலிஸாரிடம் முறையிடுங்கள் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் பொலிஸாரிடம் சென்று முறையிடும்போது அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு எனவும் தெரிவித்தார்.
சிறுவர்களை பலவந்தமாக படையணியில் சேர்த்து வந்த புலிகளால் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்பாக நடாத்தப்படும் ஆர்பாட்டங்களின் ஊடாக நோர்வே வாழ் தமிழ் சிறார்களது உயிருக்கும் அச்சுறத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புலிகளால் அரங்கேற்றப்பட்டுள்ள இந் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத குடும்பத்தினருக்கும் குழந்தைகள் பிள்ளைகளுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் புலிகள் ஒரு அச்சறுத்தலான வாழ்கையை தமிழ் மக்களுக்கு உருவாக்கி உள்ளார்கள். புலிகளின் பணம் பறிப்பவர்கள் பணத்திற்காக கதவுகளில் வந்து தட்டுவதுடன் சுமார் 50 ஆயிரம் டாலர்கள் வரை கேட்கின்றனர் என கடந்தவாரம் நோர்வே தேசியத் தொலைக்காட்சி தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழர் ஒருவர்,
என்னிடம் வந்த புலிகள் பெருந்தொகைப் பணத்தை கேட்டனர். நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தேன். புலிகள் தாம் கேட்கும் பணத்தை தரமறுத்தால், நான் கொல்லப்படுவேன் என்றும் இலங்கை தீவை நீ உன் கண்ணால் பார்க்க முடியாது என்று மிரட்டினர் என்றார்.
மேலும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சிறு குழந்தைகளுக்கும் நோர்வேயில் புலிகளால் அச்சுறுத்தல் இருக்கின்றது. எனது மகள் கொலை அச்சுறுத்தலை எதிர் நோக்குகின்றாள். காரணம் அவளை ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு புலிகள் மிரட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் புலிகளினால் நடாத்தபடுகின்றது. எனது மகளுக்கு அதில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை. அதனால் அவள் கொல்லப்படுவாள் என அச்சுறுத்தப்பட்டுள்ளாள். இந்த அச்சுறுத்தலால் எனது மகளால் பாடசாலைக்குப் போக முடியவில்லை என்கின்றார் அவர்.
இலங்கை செல்ல அனுமதி மறுப்பு.
பணம் கட்ட மறுத்தால் நாம் இலங்கைக்கு சென்று, எமது தமிழர் பிரதேசங்களுக்குச் செல்வதற்கும் எமது குடும்ப உறவுகளை கண்டு வருவதற்கும் புலிகள் தடை விதித்திருந்தனர். புலிகளுக்கு இங்கு பணம் கொடுக்காவிட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு போக முடியாது. புலிகளுக்கு இங்கு பணம் கட்டினால், அவர்கள் ஒரு இலக்கம் தருவார்கள். எம்மிடம் புலிகளின் இலக்கம் இல்லாவிட்டால் புலிகள் எங்கள் கடவுச் சிட்டை பறித்துவிடுவார்கள். சில சமயங்களில் எம்மை தடுத்து வைத்துக்கொண்டு உறவினர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்துவார்கள். புலிகளுக்கு பணம் செலுத்தியதும் உடனடியாக விட்டுவிடுவார்கள் என்றார் மேலுமொருவர்.
பொலிஸ் நடவடிக்கை எடுக்குது இல்லை.
புலிகளின் இவ்வாறான அராஜகங்கள் தொடர்பாக, இலங்கை தமிழர்கள் தொடர்பான விசேட நிபுணர்களுடன் நாம் தொடர்புகொண்டு உறுதிபடத் தெரிவித்திருக்கின்றோம். ஆனால் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்குது இல்லை. இதன் ஆபத்தை பொலிஸார் உணர்ந்துகொள்கிறார்கள் இல்லை என்றார் மேலும் ஒரு தமிழர்.
தமிழ் மக்கள் பொலிஸில் முறையிடப் பயப்படுகின்றனர்.
பொலிஸில் முறையிடுவதால் ஒரு பயனும் கிடைக்காது என்ற மனோநிலை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தற்கொலைப்படையாளிகள் உட்பட சுமார் 100 நன்கு பயிற்றப்பட்ட புலி உறுப்பினர்கள் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வன்னியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் பயத்தை தருகின்றது என்றார் மேலும் ஒரு தமிழர்.
இலங்கையில் ஜனநாயகவாதிகளையும் தமக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களையும் கொலை செய்வதே புலிகளுடைய வரலாறு. எனவே எதிர்காலத்தில் இங்கும் அது உருவாகலாம் என்றார் மேலுமொருவர்.
அத்துடன், பல நோர்வே தமிழர்கள் புலிகளால் கொலை அச்சுறத்தலுக்கு உள்ளாவதாக நோர்வேயின் தேசிய அரச தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வே தேசிய தொலைக்காட்சியின் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியைப் பார்வையிட அழுத்துங்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment