ஜன் ஜனநாயகமும் தோற்றார்..
ஸ்டைலுக்காகத்தான் அவர் ஜன்.. உண்மையில் அவர் ஜனனி.. இதுதான் அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்ட ஆறுதலான விபரம்.
விபரம் தெரியாத சின்னப்பொண்ணு புலிகளின் வலையில் வீழ்ந்தது என்பதா இல்லை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஜன் அன் கோ தமிழ் மக்கள் மீது சவாரி செய்ததா என்பது நாளடைவில் அறிந்து கொள்ளக் கிடைக்கக்கூடிய விடயங்கள்.
எனினும் இப்போதைக்கு தமிழருக்கொரு சொந்தக் குரல் ஐரோப்பியப் பாராளுமன்றில் ஒலிக்க வேண்டும் எனும் நப்பாசை தான் நம் அனைவரையும் இந்த விடயத்தின் பால் ஈர்த்தது என்றே வைத்துக்கொள்வோம்.
அதன் அடிப்படையில் ஜன் எனும் ஜனனி வென்றிருந்தால் தமிழ் மக்கள் உள்ளாரப் பரவசமடைந்திருப்பார்கள், புலி ஆதரவாளர்களோ அதைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பர்.
சரி, அவராகவே விரும்பி இந்தப் பலப்பரீட்சைக்குள் வந்திருக்கிறார்,அவர் மனம் விரும்பியபடி போராடித்தான் பார்க்கட்டுமே என்று பொறுத்திருந்து பார்த்த மட்டில், ஏறத்தாழ அம்மையார் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் போட்ட சூட்டிற்கு நிகரான ஒரு சூட்டை தமிழீழ மக்கள் ஜன்னுக்குப் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
லண்டன் பகுதியில் போட்டியிட்ட ஜனனிக்கு மொத்தமாகக் கிடைத்திருப்பது 50,014 வாக்குகள் என்று தேர்தல் முடிவுகள் சொல்கிறது.
ஒரு தனி நபர் அதுவும் சுயேட்சை வேட்பாளருக்கு இத்தனை வாக்குகள் கிடைத்ததை நினைத்து நிச்சயமாக பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய அதே வேளை இனி ஒரு காலத்திலும் கூட இவரை ஒரு மக்கள் சக்தியாக வேறு எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அடையதளப்படுத்திக்கொள்ளவோ கூட விரும்பப் போவதில்லை.
ஏன்?
ஜன் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை அவருக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை நம்பிக்கையூட்டும் ஆரம்பமாக இருந்தாலும், இதில் இன்றைய போர்ச்சூழலும் அதன் விளைவுகளும், மக்கள் உணர்வுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை அனைவரும் நன்கறிவர்.
போர்ச்சூழலின் விளைவுகளைப் பயன்படுத்தி, தமிழர் பிரதிநிதியாக இவரைச் சித்தரிக்கும் போதே இவரும் ஒரு புலிப்பிரதிநிதியாக மாற்றப்பட்டுவிட்டார்.
புலி எனும் போர்வையினால் கிடைக்கக்கூடிய வாக்குகளே தனக்கும் பலமாக அமையும் என்று நினைத்த ஜன் அதையே தன் பிரச்சார சக்தியாக்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கவும் ஆரம்பித்தார்.
அப்படியானால், இதுவரை காலம் ஆர்ப்பாட்டங்க்ள,ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மூலம் இழுத்து இழுத்துக் களைத்துப் போன புலிகளின் இறுதிப் பலப்பரீட்சை தான் ஜன் ஜனநாயகமாகிப் போகிறது.
“லண்டனில் ஈழத்தமிழர் ஆர்ப்பாட்டம் – லட்சக்கணக்கில் தமிழர்கள் பாதைகளை முடக்கினர்”, ” லண்டன் வர்த்தகம் முடங்கியது”, “நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டது” என்றெல்லாம் செய்திகள் போட்டு அழகு பார்த்துக்கொண்ட புலி ஆதரவு ஊடகங்களுக்கும் இது ஒரு பலப் பரீட்சை தான்.
சாதாரண ஊர்வலங்களுக்கெல்லாம் லட்சக்கணக்கில் மக்களை ஒன்று படுத்திய புலிகளுக்கு ஜன்னுக்கு ஒரு லட்சம் வாக்குகளை பெற்றுக்கொடுப்பது ஒரு வேலையே இல்லை, அதெல்லாம் “Simple” விவகாரம் என்று முன்னாள் புலி இயக்கப் புலம் பெயர்ந்த நாடொன்றின் பொறுப்பாளர் கூறியிருந்தார்.
எது எப்படியோ, ஒரே போட்டோவை பல கோணங்களில் எடுத்து பிரசுரித்து அழகு பார்த்த இணையங்களுக்கும், ஆகக்கூடியது 3000 பேர் அளவைக் கூட ஒரே நேரத்தில் ஒன்றிணைக்க முடியாமல்,அதுவும் தேசியத் தலைவரின் தலைக்கே ஆப்பு வந்த வேளையில் ஒன்றிணைக்க முடியாமல் போன புலம் பெயர் புலி முகவர்களுக்கும் உள்ளாரப் பயம் இருந்து கொண்டே இருந்தது.
எனினும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு விடயம் இருந்தது.
அதுதான் வழக்கம் போல மக்களை “உணர்ச்சியூட்டுதல்”.
வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை இப்போது நிலவினாலும் கூட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் இடம்பெறக்கூடிய பல விடயங்கள் தொடர்பாக ஒன்றுக்கொன்று முரணான தகவல்களும், சந்தேகங்களும் சேர்ந்தே வெளியாகிக்கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்திய புலிப் பிரமுகர்கள் “நமக்காக ஒரு குரல் ஐரோப்பிய பாராளு மன்றத்தில் ஒலிக்கட்டும்” அப்படிச் செய்து நம் பிரச்சினையை பாராளுமன்றில் ஒலிக்கச் செய்யலாம் என்று மகுடி ஊதினார்கள்.
இதற்கு முன் பல வெள்ளையின உறுப்பினர்களே இந்த நியாயங்களையெய்லாம் பேசிப் பார்த்திருக்கிறார்கள், அப்போது கூட இவை அங்கே எடுபடவில்லை.
அதற்கான காரணம் என்னவென்று திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
புலி தான் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களுக்கும் ஒரே தடை!
அந்தத் தடையையே முன் நிறுத்திப் பேசப்படும் எதையுமே யாருமே காதில் வாங்கிக்கொள்ளப் போவதில்லை.
அண்டை நாடாம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் கூட எல்லாமே தீர்மான அரசியல் அளவோடு முடிந்து போவதற்கும் இந்தத் தடைதான் காரணம்.
இதை ஜன்னும் அறிந்திருக்காமலில்லை, புலியின் கோசத்தில் தனக்கொரு நன்மையுண்டு என்பதை உணர்ந்தவர் அவர்களைப் பாவித்திருக்கிறார் என்பதை அவரது தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாகக் கூறியுள்ளது.
மனித நேயம்
மிருக நேயம்
சம வுரிமை
என்றெல்லாம் தன் விளம்பரக் கையேடுகளில் வெளிநாட்டவர்களைக் குறி வைத்து வசனங்களை அச்சிட்டிருந்த ஜன், அதன் உட்பகுதியில் மாத்திரம் ஆனாலும் மிகக் கவனமாக ஒரு சிறு அளவில் இலங்கையின் விவகாரத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறார்.
வில்லனுக்கு வில்லன் போல அவர்களும் நடிக்க,இவர்களும் நடிக்க என்று ஆளாளுக்குப் போலி வேசங்களைப் போட்டு ஏமாற்றிக்கொள்வதைத்தவிர வேறு எதையும் இவர்கள் செய்வதாய் இல்லை.
லண்டன் ஹரோ பகுதியில் கவுன்சிலராகவும் அதற்கும் மேலாக புலி ஆதரவாளர்களின் மிக உயர்ந்த ஆதரவாளராக முன் நின்று நாடாளுமன்றின் முன் உண்ணாவிரதக் கலாச்சாரத்தைத் தொடக்கி வைத்த தயா இடைக்காடர் போன்றோர் எல்லாம் மக்கள் முன் வர முடியாமல் ஒரு புது முகத்தைக் கொண்டு வரும் தேவை புலி முகவர்களுக்கு வந்தது என்பதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தாலே அவர்களின் கடந்தகால வங்குரோத்து நிலை தெளிவாகிவிடும்.
இதற்கு முன்னர் தமிழர் குரலாகக் காட்டிய அத்தனை பேரையும் தூக்கியெறிந்து விட்டு புதியதொரு ஜன் இறக்குமதி செய்யப்பட்டதையும் கூட தமிழ் மக்களில் 50,000 பேர் நிராகரிக்கவில்லை எனும் போது அதிலிருந்து சில உண்மைகள் புலப்படுகின்றன.
அதாவது, இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இந்த மக்களுக்கு இன்னும் வரவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போன்று புலிகளின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத உணர்வாளர்கள் இருப்பதும் உண்மை.
இன்னும் வெளிவிடப்படாமல் இடைத்தங்கல் முகாம்களில் வைத்து வடிகட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டவர்களும் ஏதாவது ஒரு வழியில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்,அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சமூக அக்கறையுள்ள பலர் இன்னும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
இப்படி பல தரப்பினரின் விருப்பு,வெறுப்பில் ஒரு 50,000 வாக்குகள் ஜனனிக்காகப் பதிவாக இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஜனநாயக நீரோட்டத்தில் நம்பிக்கை வைத்திருப்போரும் இதில் அடங்கலாம்.
ஆனால், இவையனைத்தையும் தாண்டிய அடுத்த கட்ட “உண்மைதான்” கசப்பானது.
ஜன் ஜனநாயகத்தை எத்தனை பேர் நிராகரித்துள்ளார்கள் என்பதுதான் அந்த உண்மை.
கணிசமான அளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் லண்டன் நகரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புலிகள் பரப்புரையாளர்கள் சொன்ன படி பல லட்சம் மக்கள் ஊர்வலங்களிலும்,ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபற்றினார்கள் என்று ஏற்றுக்கொண்டால் கூட அந்தப் பல லட்சம் மக்களால் ஜனனிக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க முடியவில்லை? எனும் கேள்வி மேலெழுந்து நிற்கிறது.
அப்படியானால் இங்கே நிராகரிக்கப்பட்டது யார்? புலிகளின் முகவர்களா அல்லது ஜனனியா எனும் கேள்வியும் எழுகிறது.
ஜனனி என்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவு அவருக்கும் 50,000 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஒருமித்த தமிழர் விருப்புக்குரியவராக ஜனனி வெற்றி பெற முடியாத நிலைக்கு மிக முக்கிய காரணம் அவரைச் சுற்றியிருந்த புலிப் போர்வை என்பதும் தெட்டத் தெளிவாகிறது.
அந்தப் போர்வை மாத்திரம் இருந்திருக்காவிட்டால் அனைத்து தமிழர் வாக்குகளும் ஜனனிக்கே கிடைத்திருக்கும்.
அதையும் தாண்டிய நிலையில் ஜனனியின் தேர்தல் விளம்பரக் கையேடுகளில் ஏற்பட்டிருந்த கொள்கைக் குழப்பம், இந்தியத் தமிழர்களை காத தூரம் விரட்டிவிட்டிருந்தது என்பதும் உண்மை.
வெளிநாட்டவர்களின் ஆதரவைப் பெறும் அளவில் ஜனனியின் ஒரு சில கொள்கை விளக்கங்கள் இருந்தாலும், பொதுநிலை அல்லது நடுநிலை என்பதிலிருந்து விலகி, இலங்கை அரசை சாடும் வகையிலான கொள்கை வரிகள் அந்த விளம்பரங்களில் வெளிவந்தமையானது, இவர் புலிகளின் பிரதிநிதி எனும் தோற்றப்பாட்டையும், புலி என்றால் பயங்கரவாதிகள், எனவே பயங்கரவாதிகளை ஆதரிப்பதில் பிரயோசனமில்லை எனும் முடிவை அவர்கள் எடுக்கவும் உதவியிருந்தது.
எனவே, சுற்றி வளைத்துப் பார்க்கும் ஒவ்வொரு பக்கத்திலும் இலகுவான ஒரு வெற்றி வாய்ப்பை புலித்தோல் போர்த்தப் போனதால் ஜனனியும் தவற விட்டார் எனும் உண்மை புலப்படும்.
அந்த உண்மை புலப்படும் அந்த வேளையில் தமிழகத்தில் அம்மாவுக்குக் கிடைத்த அந்த வகை சூடே ஜனனிக்கும் கிடைத்தது என்பதும் தெளிவாகும்.
எத்தனையாயிரம் மக்கள் ஆதரித்தார்கள் என்ற மழுப்பலை விட்டு எத்தனை பல ஆயிரம் மக்களால் இவர் நிராகரிக்கப்பட்டார் எனும் கேள்வியை முன் வைத்தால் அந்தத் தோல்விக்கான ஒரே காரணம் ஜனனியின் கொள்கைக் குழப்பம் என்பது தெளிவாகும்.
இக்கொள்கைக் குழப்பம் என்பது புலி முகவர்களினால் திணிக்கப்பட்ட கொள்கைக் குழப்பமாகும்.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது, ஏறத்தாழ 3 லட்சம் பேர் அளவில் வாழும் இங்கிலாந்தில், அதுவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் லண்டன் பிரதேசங்களில் வெறும் 50,000 வாக்குகளை மாத்திரமே ஜனனியால் பெற முடிந்தது என்பதானது, அவருக்கு போர்த்தப்பட்ட புலித்தோலுக்கும் கிடைத்த சாட்டையடியாகும்.
அத்தனை நவீன வழிகளிலும் ஜனனிக்காகப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அனைத்து வழிகளிலும் இவர் தமிழருக்கான ஒரு குரல் என்று உரத்துக் கூறப்பட்டது.
இதன் பின்னரும்,அவரை ஏற்றுக்கொள்ளும் மன நிலை இருந்தாலும் கூட அவர் நிராகரிக்கப்பட்டார் எனும் உண்மையானது, பணம் கறப்பதைக் குறியாகக் கொண்டியங்கும் புலி இயந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் செருப்படியாகும்.
இந்நிலையிலேயே இனிவரும் புலி முகவர்களின் கொள்கைப் பிரகடனங்களும்,செயற்பாடுகளும் அளவிடப்படப்போகின்றன.
இத்தனை நடந்தும் கூட சமூக ஒற்றுமை பற்றிச் சிந்தித்து, சுயாதீனமான ஒரு வேட்பாளரை சுயாதீனமாகச் செயற்படவும் விடாமல், பிரிந்து போயிருக்கும் சமூகத்தை ஒற்றுமையாக்காமல் மீண்டும் மீண்டும் அதாள பாதாளத்தில் தள்ளி, அவர்களை உணர்ச்சிவசப்படுத்தி, தம் வங்கிக் கணக்குகளை நிரப்பிக்கொள்ளவே புலி முகவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இப்போது முதற்தடவையாக ஈழத்துத் தமிழர்களே புலி முகவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போரில் தோற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத அதி தீவிர பக்தர்களின் அறிவீனத்தை சரியாகப் பயன்படுத்தும் புலிப் பிரச்சார மருத்துவர்கள் இலங்கை அணி விளையாடும் 20-20 கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களையாவது தாக்கிவிட்டு வாருங்கள் என்று அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்தி விடுகிறார்கள்.
இப்படியான கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் அதி தீவிரமாகத் திட்டமிடும் இந்த புத்தி ஜீவிகள், ஒரு சமூகத்தை ஒன்றிணைப்பதற்காக ஆகக்குறைந்த முயற்சிகளாக நல்லெண்ணங்களையாவது இன்னும் வெளியிடத் துணியவிவ்லை.
புலி சார்பு, புலி எதிர்ப்பு என்ற இரு சாராரும் தொடர்ந்து இருந்து கொண்டாலும், மிக விரைவில் புலி சார்பு நிலை முற்றாகத் தகரும் என்பது திண்ணமாவதால் மறு சாராரும் இவர்களைப் பற்றி இப்போதைக்குக் கவலைப்படப் போவதில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இன்னும் சில நாட்களில் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடப்போகும் மக்களிலிருந்து இவர்கள் அந்நியப்படுத்தப்படுவார்கள்.
அப்போது நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பிப்பார்கள்.
அதன் பின் அவர்கள் போடப் போகும் புதிய ஜனநாயக வேசம் கார்த்திகை மாதத்து வீர அறிக்கைகளின் குறைப்பாட்டைத் தீர்க்கும் வகையில் அமையப் பெறும்.
எனினும், விட்டுக் கொடுக்க விரும்பாத அதி தீவிர பக்தர்கள் எப்போதுமே இந்த சமூக ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாகவே இருந்துகொண்டிருப்பார்கள்.
இவர்களின் கத்தல்கள் தானாக அடங்கும் நாளை மிக விரைவில் காண முடியாது, அதற்குப் பல காலங்கள் செல்லும்.
ஆனால், அது வரைக்கும் பொறுத்திருந்து இன்னும் பல வாய்ப்புகளை நழுவ விடாமல், ஒற்றுமையெனும் கயிற்றைப் பிடித்து மீண்டும் இந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணி அனைவரிடமும் விடப்படுகிறது.
இந்தப் பணிக்குள் செல்ல முயலும் யாரும் முதலில் கை விட வேண்டிய பிரதான விடயம் புலிப் போர்வையைப் போர்த்துவதாகும்.
இரண்டாவது, வேறு எந்த இயக்கத்தின் தனிப்பட்ட நன்மைக்காகவும் பிரச்சாரம் செய்வதாகும்.
இவற்றைத் தவிர்த்து, “மக்கள் நலன்” முற்படுத்தப்பட்ட கொள்கைகளின் பிரகாரம், எதிர்காலங்களில் ஆகக்குறைந்தது மேற்குலகின் மத்தியில் தைரியமாக நின்று பேசக்கூடிய, உண்மைகளை எடுத்துரைக்கும் போது அவை ஒரு பக்கம் சார்ந்ததாக இல்லாத உண்மையான குரல்களை உருவாக்க வேண்டும்.
அதற்கான பணிகளை மக்களாக முன் வந்து செய்யத் துணிந்தால் மாத்திரமே விடிவு கிடைக்கும். மக்களின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியது, அதே சமூகத்தின் அங்கமாகவும், பொறுப்புடனும் இருக்கும் அனைவருக்கும் கடமையாகும்.
கடந்த காலத்தை திறந்த மனதுடன் ஒருவொருக்கொருவர் ஆழ விமர்சிப்பதிலிருந்தே இது ஆரம்பமாகலாம்.
நாளை இன்னொரு நாள், இந்தச் சமூகம் கடல் கடந்தும், எங்கு சென்றாலும், எப்போதுமே பிளவு பட்டே இருக்கும் என்று வேறு நாட்டவர் கூட எள்ளி நகையாடும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
தமது அடுத்த தலைமுறையினரைப் பத்திரமாக வெளிநாடுகளில் வாழ வைத்துவிட்ட பெருமிதத்தில் வெட்டி வீரங்கள் பேசித்திரியும் பெரியவர்களும், தவறான வழிகாட்டல் மூலம் உணர்ச்சி மேலோங்களில் மிதக்கும் இளையவர்களும் கூடத் தம் சுய அறிவைக்கொண்டு கடந்த கால வரலாறை அலசி ஆராய்ந்து, புதியதொரு எதிர்காலத்திற்குத் திட்டமிட வேண்டும்.
இலங்கையிலும் சமூக ஒற்றுமை அதாள பாதாளத்தில் கிடக்கிறது.
நாகரீக நாடுகளில் இருக்கும் நீங்கள் நியாயங்களுக்காக ஒன்றிணைய ஆரம்பித்தாலே அங்குள்ளவர்களுக்கும் அது பெரும் எடுத்துக்காட்டாக அமையும்.
இனி வரும் காலங்களிலாவது, சமூகத்திற்குப் பயன் தரும் விடயங்களில் புலிப் போர்வையை போர்த்த வி்டாமல், மக்கள் தம் உரிமைகள் தொடர்பில் தமது கருத்துக்களை தைரியமாகவும், சுதந்திரமாகவும் பேச ஆரம்பிக்க வேண்டும்.
வழி நடத்தப்படும் மந்தைகளாக அங்கும்,இங்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து கொண்டே இருப்பதனால் அவர்களும் நன்றாகப் புகுந்து விளையாடுகிறார்கள்.
இவர்களைப் பார்த்ததும், சமூகத்தின் இன்னொரு சாரார் ஒதுங்கிச் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
எப்போது சிந்திக்கத் தொடங்கும் இந்த சமுதாயம்?
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment