விடுதலையாகி இங்கிலாந்து செல்வதற்கு தமிழ்ச் செல்வனின் மனைவி விருப்பம்-அமைச்சர் ராஜித்த சேனாரட்ன கூறுகிறார்
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை நான் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டேன். அதன்போது தமிழ்ச் செல்வனின் மனைவி மற்றும் பிள்ளைகளைச் சந்தித்து கலந்துரையாடினேன். அவர்கள் விரைவில் விடுதலையாகி இங்கிலாந்துக்கு செல்லவே எதிர்பார்க்கின்றனர் என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
அமைச்சர் அண்மையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை பார்வையிடுவதற்காக வவுனியா நலன்புரி முகாம்களுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிடுகையில், "வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை நான் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டேன். அந்த மக்களுடன் உரையாடினேன். அவர்களின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டேன். முக்கியமாக தாங்கள் புலிகளிடம் இருந்ததைவிட நிம்மதியாக முகாம்களில் இருப்பதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
மூன்று இலட்சம் பேருக்கு வசதிகளை செய்துகொடுப்பது என்பது இலகுவான விடயமல்ல. எனினும் அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். நான் அங்கு தங்கியிருந்து பணியாற்றும் வைத்தியர்களுடன் பேச்சுநடத்தினேன். அவர்கள் தாங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வழங்கிவரும் சேவைகள் குறித்து விளக்கினர். உணமையில் அந்த வைத்தியர்களுக்கு தங்குவதற்கு முறையான இடங்கள் இல்லை. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
சில முகாம்களில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சில முகாம்களில் மலசலக்கூட பிரச்சினை கூடார பிரச்சினை என்பன காணப்படுகின்றன. அவற்றை தீர்த்துவைப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனது அமைச்சின் ஊடாக செய்ய முடியுமானவற்றை செய்ய எதிர்பார்க்கின்றேன். இதேவேளை எனது விஜயம் தொடர்பிலும் அங்கு காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.
தமிழ்ச் செல்வனின் மனைவி
அதேவேளை வவுனியா விஜயத்தின்போது தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்து உரையாடினேன். தமிழ்ச் செல்வனின் மகள் 5 ஆம் வகுப்பிலும் மகன் முதலாம் வகுப்பிலும் கல்வி கற்கின்றனர்.
அந்தப் பிள்ளைகள் சோறு போன்ற உணவுகள் உண்பதற்கு விரும்பவில்லை. தயாரிப்பு உணவுகளையே அவர்கள் விரும்புகின்றனர். அதேவேளை தமிழ்ச்செல்வனின் மனைவி தாங்கள் விரைவில் விடுதலையாகி இங்கிலாந்துக்கு சென்றுவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் தொடர்பில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பில் எனக்கு தெரியாது" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment