சர்வதேச சதியை புரிந்துகொள்வோம்
- சுவிசிலிருந்து துருவாசன் -
தோல்வியில் இருந்து மீண்டெழுதல், இன்றைய வரலாற்றுக் கடமை இது
'இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி." இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.
இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது. அதேவேளை, நடந்து போன துயரமான நிகழ்வுகள் வெறும் வரலாறாக மட்டும் இருந்துவிட முடியாது. அவை, எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் செம்மையான, திருத்தமான செயற்பாடுகளை நோக்கி முன்செல்ல முடியும்.
வன்னியில் கடந்த மே 19 ஆம் திகதி முடிவுக்கு வந்த போர் தமிழினத்தின் வரலாற்றில் மிக மோசமான வடுவாக மாறிவிட்டது. இதன் தாக்கத்தில் இருந்து - அழிவுகளில் இருந்து ஈழத் தமிழினத்தால் இலகுவில் மீட்சி பெற்றுவிட முடியாது. ஆனால், நாம் வரலாற்றில் பின்தள்ளப்பட்டு விட்டோம் என்றோ - எம்மால் நிமிர்ந்து கொள்ள முடியாதென்றோ - முடங்கிப் போய் விடவும் முடியாது.
அப்படிச் செய்வது தமிழீழத் தாயகத்துக்காகப் போராடி - உயிர்கொடுத்த ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்களின் ஆன்மாவை அவமதிப்பதாகி விடும். தமிழினத்தை வேரோடு சாய்த்து, அதன் வல்லமையை அழித்துவிடக் கங்கணம் கட்டிய சிங்களத் தேசியத்தின் நோக்கத்தை நாமே நிறைவேற்றியதாகி விடும்.
எனவே, நாம் மடிந்து போனவர்கள் அல்ல - முடிந்து போனவர்களும் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். நீறாகிப் போனாலும் நூறாக எழுவோம் என்பதை வரலாற்று ரீதியாக உணர்த்த வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது.
மூன்று தசாப்தங்களாகக் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மூன்று வருடப் படை நடவடிக்கைகளின் மூலம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டக் களத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எமது வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளி விட்டிருக்கிறது.
ஒரு சிறிய கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஆட்டிலறிகள், விமானங்கள், சண்டைப் படகுகள், போர்கப்பல்கள் என்று வளர்த்தெடுக்கப்பட்ட போதும் - கடைசியில் ஒரு தொடர் போருக்குள் சிக்கி அனைத்தையுமே இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்போது 1970-களில் இருந்த நிலைக்கு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தள்ளப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியாக நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டியதொரு விடயம்.
போர் என்பது வெற்றியையும் தோல்வியையும் கொடுக்கக் கூடியதொரு களம் தான். ஆனால் இந்த மூன்றாண்டுப் போர் என்பது தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியான பின்னடைவை - அழிவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடி விட்டு மிகப் பெரிய தோல்விக்குள் தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது.
இந்தக் கட்டத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாக குழப்பம் - வெறுமை அனைவரையும் சூழ்ந்து நிற்கிறது.
விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு செயற்பட்ட தமிழினம் பொறுப்பற்ற சிலரின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்து இன்று நிர்க்கதி நிலைக்குள் நிற்பது போன்ற உணர்வில் இருக்கிறது.
ஆயுதப் போராட்டமாகத் தொடங்கிய புலிகளின் போராட்டம் - பின்னர் அரசியல் போராட்டமாகி, இராஜதந்திரப் போர்களையும் நடத்தும் அளவுக்கு பரிணாம ரீதியாக வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள் அனைத்துமே - புலிகளின் அத்தனை இராணுவ, அரசியல், இராஜதந்திரப் போர்களையும் முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அவர்களின் இந்த வெற்றியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. அதேவேளை தமிழினத்துக்கு ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட இந்தத் தோல்வியையும் நாம் இலகுவில் மறந்து விட முடியாது.
இது தமிழினத்துக்கு எதிராக உலகமே செய்த சதி என்று தான் சொல்ல வேண்டும்.
திம்புப் பேச்சுகள் முறிந்த பின்னர தேசியத் தலைவர் பிரபாகரன் - ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். பேச்சுக்களில் இருந்து வெளியேறியதால் இந்தியாவின் ஆதரவைப் புலிகள் இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியிருந்த நேரம் அது.
அப்போது தேசியத் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அந்த அறிக்கையில் - 'நாம் எந்த வெளியுலக சக்தியையும் நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எமது மக்களை நம்பியே போராட்டம் நடத்துகிறோம். எனவே யாருடையை ஆதரவை இழந்தாலும் எமது இலட்சியத்தில் வெற்றி பெறுவோம்" என்று கூறியிருந்தார்.
அதேபோன்று புலிகள் இயக்கம் கடைசி வரையில் மக்களின் ஆதரவில் - அவர்களின் நிழலில் தான் இருந்தது. அந்த மக்களை அழித்து - அவர்களுக்கு ஆதரவாக இருந்து நிழல் கொடுத்த மரங்களைத் தறித்தே - அரசாங்கம் இந்தப் போரில் வெற்றி பெற்றது.
அத்தோடு, வெளியுலகத்தை நம்பிப் போராட்டம் நடத்தவில்லை என்று கூறியிருந்த தலைவர் பிரபாகரன், தான் முன்னெடுக்கும் போராட்டம் மக்களுக்கானது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் கடைசிக் காலகட்டத்தில் சர்வதேச உலக ஒழுங்குடன் ஒத்துப் போகும் நிலைக்கு வந்தார்.
தான் நேசித்த மக்களின் விடிவுக்காக சர்வதேச ஆதரவுவை உருவாக்கும் நோக்கில் - பொறுமையைக் கடைப்பிடிக்க முற்பட்டு, அவர்களுக்காகப் போரைப் பிரகடனம் செய்யாமல் தவிர்த்து, அவர்கள் உதவிக்கு வருவார்கள் என்று நம்பியே மோசம் போய்விட்ட வரலாற்று நிகழ்வும் அவரின் உயிரையே பறிக்கும் அளவிற்கு துரோகத்தனமாக நடந்தேறியிருக்கிறது.
உலக ஒழுங்கு என்பது வலிமை பெற்ற சக்திகளுக்கு ஒன்று என்ற வகையிலும் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னொன்று என்ற வகையிலுமே அமைந்திருக்கிறது. புலிகள் பலமாக இருந்தவரை சர்வதேசம் அவர்களை எப்படியாவது அனுசரித்துப் போகவே விரும்பியது.
ஆனால், அவர்கள் பலமிழந்து வருகிறார்கள் என்று எப்போது கருதத் தொடங்கியதோ - அப்போதே புலிகள் என்றால் யார் என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.
தமிழ் மக்களுக்கு இப்போது ஒரு உண்மை தெளிவாகப் புரிந்திருக்கிறது.
ஐ.நா.வின் வாசலில் - அமெரிக்க வீதிகளில், பிரித்தானியா நாடாளுமன்றத்தில், ஜரோப்பிய பாராளுமன்ற சதுக்கங்களில் நடத்திய அகிம்சைப் போராட்டங்களை விடவும் வலிமையானது இராஜதந்திர உறவுமுறையும், தொடர்பாடல்களும் அதனுடன் பின்னிப்பிணைந்த ஆயுதப் போராட்டமுமே என்ற உண்மை இப்போது உணர வைக்கப்பட்டிருக்கிறது.
போரை நிறுத்துமாறு உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் எழுப்பிய குரல்களால் - மகிந்தவின் பீரங்கிகளின் சத்தத்துக்கு முன்னால் தாக்குப் பி;டிக்க முடியாது போய்விட்டது.
2000 இன் தொடக்கத்தில் புலிகள் படைவலுச் சமநிலை பெற்றிருந்தபோது - அவர்களுடன் சட்ட ரீதியாகவும் சட்டத்துக்கு முரணாகவும், தொடர்புகளைப் பேணிய உலகம், அந்தப் படைவலுச் சமநிலை மாற்றம் பெற்ற போது புலிகளைக் கண்டு கொள்ளவேயில்லை.
புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க சர்வதேசம் பெரும் முயற்சிகளைச் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பினும் - புலிகளின் அழிவை இரசித்த உலக நாடுகள் தான் அதிகம்.
இந்தியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜரோப்பிய ஒன்றியம் போன்றன மறைமுகமான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தன.
ஒரு காலத்தில் சமாதான வேடம் போட்ட ஜப்பான் கடைசி நேரத்தில் போருக்காக நிதியைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தை ஊக்குவித்தது.
உண்மையில் இலங்கையில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற போரின் போது - உலக ஒழுங்கின் சகல ஓட்டத்துக்கு இசைவாகவும் முரணாகவும் பல நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. ஈழத் தமிழினத்தின் நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் முகம் காட்டியதொரு வித்தியாசமான களம் இது.
- ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
- எங்கே தவறுகள் நேரிட்டன?
- அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டதில் தவறுகள் நேர்ந்ததா?
- இராணுவ முனைப்புகளில் தவறிழைத்தோமா?
- இராஜதந்திர காய்நகர்த்தல்களில் பலவீனமாக இருந்தோமா?
- யாரை நம்பி நாம் மோசம் போனோம்?
- யாரையாவது நம்ப வைத்து கழுத்தறுத்தோமா?
- இல்லை, எமது தேசிய இனத்தின் வளர்ச்சியை - எழுச்சியை அடக்க நினைத்த சர்வதேச சக்தி அல்லது சக்திகள் எவை?
- அதற்கான காரணங்கள் என்ன?
- புவிசார் உலக ஒழுங்கிற்கு முரணாக எமது போராட்டம் நடத்தப்பட்டதா?
இப்படியே பல கேள்விகளின் ஊடாக எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டத்துக்கு வந்து நிற்கிறோம்.
மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் மகிந்தவின் படைகள் நடத்திய மூன்று வருடப் போருக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தகர்ந்து போனதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.
இந்த வரலாற்றுத் தோல்வி என்பது தமிழினத்துக்கு நிரந்தரமான தோல்வியாக அமைந்து விடக் கூடாதென்று கருதும் எந்தவொரு தரப்புமே - இத்தகைய ஆய்வு அல்லது விசாரணையை நிச்சயம் விரும்பும். விடுதலைப் புலிகள் கூட இப்போது நிறையவே மாற்றங்களை விரும்புகின்றனர்.
எனவே இத்தகைய பகிரங்க விசாரணைக்கு - ஆய்வுக்கு அவர்கள் விரும்பம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தாயகத்தில் நடந்தேறிய அவலங்களையோ - மண்ணுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களையோ கேவலப்படுத்தாமல், கொச்சைப்படுத்தாமல் - அதேவேளை ஒரு பக்க சார்பற்ற ஆய்வு விசாரணை சர்வதேச அளவில் நடத்தப்பட வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதில் மாற்றுக்கருத்துடையவர்களின் ஒத்துழைப்பும் உதவிகளும் கூட அவசியமாகின்றது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இத்தகைய பாரிய பின்னடைவைச் சந்தித்தற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, அவை கண்டறியப்பட வேண்டும். அப்போது தான் எமது வரலாற்றுத் தோல்வியில் இருந்து எம்மால் மீட்சிபெற முடியும். தோல்வியில் இருந்து பாடம் கற்கின்ற மனிதனே வரலாற்றைப் படைப்பான்.
அதுபோன்றே தமிழினத்துக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு - அவற்றைத் திருத்திக்கொண்டு, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தோல்வியை நினைத்து மனந்தளர்ந்து, சோர்ந்து போய்க் கிடப்பதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. அது எம்மை இன்னும் இன்னும் பின்நோக்கிக் கொண்டு செல்லவே வழி வகுக்கும்.
போரில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை - அதன் அரசியல் பரிமாணங்களின் சுவடுகளை அழிக்கின்ற முயற்சிகளில் சிங்கள தேசம் இறங்கி விட்டது. ஆனால், நாம் சரியான வழியில் செயற்படவோ - சிந்திக்கவோ தொடங்கவில்லை. இதற்கு ஒரு உடனடித் தேவை இருக்கிறது.
மூன்று வருடப் போர், அதற்கு முந்திய போர்நிறுத்த காலகட்டம் ஆகியவற்றுக்குள் நடந்தேறிய சம்பவங்களில் எவையெவை தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன? எவையெவை பாதகமான விளைவைக் கொடுத்தன? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ நாம் தவறிழைத்த பக்கங்கள் எவை? திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் எவை? என்று இனங்காண வேண்டும். அவற்றின் படிப்பினைகள் ஊடாக - சரியாக பாதையைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இந்தத் தவறுகள் தனியே மற்றொரு ஆயுதப் போராட்த்துக்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு என்றாலும் சரி, இராஜதந்திர ரீதியில் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கு என்றாலும் சரி - எமக்கென்றொரு கொள்கை - அணுகுமுறை வகுக்கப்பட வேண்டும்.
உலக ஒழுங்கோடு எப்போதும் ஒத்துப்போவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வளைய வேண்டிய இடத்தில் வளையாமல் நிற்பது எமக்கே சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், வளைந்து கொடுக்காமல் செல்ல வேண்டிய இடத்தில் நிமிர்ந்த நடையில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.
எனவே, நிரந்தரமான கொள்கை அல்லது அணுகுமுறை வகுத்தல் என்பது எமது உரிமைப் போராட்டத்துக்கு உகந்ததாக அமையுமா அல்லது நெகிழ்வுத்தன்மையுள்ள போக்கு அதிக பயனைக் கொடுக்குமா என்று பார்க்க வேண்டும். இராணுவ ரீதியாகவும் நாம் தவறுகள் செய்திருக்கலாம். அதுவும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
சர்வதேச அளவில் போரியல் நிபுணர்களை, அரசியல் ஆய்வாளர்களை, புலனாய்வு அனுபவஸ்தர்களை, இராஜதந்திர விற்பன்னர்களை அழைத்து இந்த ஆய்வை - விசாரணையை நடத்தலாம்.
சர்வதேச அளவில் எத்தனையோ எமது கல்விமான்கள் தேசத்துக்காக கைகொடுக்கத் தயாராக இருகிறார்கள். அவர்களின் ஆதரவுடன் இதைச் செய்வது இன்று எம்முன் விரிந்துள்ள அவசியமான கடமை.
37 வருடப் போராட்டம் பற்றிய ஒரு முறையான ஆய்வை - விசாரணையை நடத்தி அதில்; இனங்காணப்படும் தவறுகளைச் சரி செய்து கொண்டு எழுவதே முறையானது. எம்மைத் தூக்கி விட உலகில் இருந்து எந்தவொரு கையும் வரப் போவதில்லை என்று உணர்ந்திருக்கிறோம். அனுபவ ரீதியாக நாம் படித்துக் கொண்ட கசப்பான பாடம் இது.
எனினும், அவர்களின் ஆதரவை எப்படிப் பெறுவது? அவர்களை எமது பரப்புக்குள் எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றிய ஒரு திறந்த கொள்கை உருவாக்கப்பட்டாலே - அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக சிங்கள தேசத்துக்கு அமையும்.
போர் வெற்றியைக்கொண்டு தமிழினத்தை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சியில் இறங்கி விட்ட சிங்கள தேசத்துக்கு எமது இத்தகைய முயற்சிகள் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். இன்னும் அதிக உரிமைகளைக் கொடுத்து தமிழரின் போராட்டத்தை சரிக்கட்டும் முயற்சிகளில் இறங்க வைக்கும்.
இராணுவ வெற்றிகள் நிரந்தரமானதல்ல என்ற உண்மை எமக்குப் புரிந்திருக்கிறது.
இது சிங்கள தேசத்துக்கும் புரியும் காலம் விரைவில் உருவாகும். இனிமேல் இராணுவ வெற்றிகளின் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்த முடியாது போனாலும் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளினூடாக சிங்கள தேசத்தின் இந்த இராணுவ வெற்றியை உடைக்க முடியும்.
இதைச் செய்வதற்கு எமது தோல்விகளின் காரணங்கள் ஆராய்ந்து அவற்றைக் களையும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் எமது தோல்விக்கான காரணங்களை ஆராய்வது தேசத்துரோகம் என்றோ, இராணுவ இரகசியம் என்றோ, புலனாய்வுச் சதி என்றோ பிழையான கற்பிதங்களுக்குள்ளே சிக்கிக் கொண்டால் - எம்மை நாம் திருத்திக்கொள்ள முடியாது. எமது பாதையை செப்பனிட முடியாது போய்விடும். தவறுகள் திருத்தப்பட்டு சரியான பாதையில் பயணிப்பதற்கு சரியான வழிகாட்டி அவசியம்.
~வரலாறு தான் எமது வழிகாட்டி| என்று எமது தேசியத் தலைவரே கூறியிருக்கிறார். அந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால் அது எமது இனத்தை நிரந்தர அடிமைத்தனத்துக்குள் கொண்டு செல்லவே வழிகோலும்.
ஒன்று மட்டும் உண்மை ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு.
நிலவரம்
0 விமர்சனங்கள்:
Post a Comment