எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடாரம் போடுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடக்கவுள்ள தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்பதற்கு ஆட்களைத் தேடுகின்றார்கள். ஒருகாலத்தில் வேட்பாளர் ‘ரிக்கற்று’க்காக ஆட்கள் இவர்களைத் தேடி வந்தார்கள். இப்போது இவர்கள் வேட்பாளர்களைத் தேடி அலைகின்றார்கள். தமிழ் அரசியல் அரங்கில் ஒரு மாற்றத்தை இது கோடி காட்டுகின்றது.
தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்ற பாரம்பரியத்தின் வழிவந்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. காலத்துக்குக் காலம் கட்சிப் பெயர் மாறிய போதிலும் பாத்திரங்கள் மாறவில்லை. ஒரே ஆட்களே தலைவர்கள். மக்களை முன்னிலைப்படுத்தாமையும் அவர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றுவதும் இவர்களின் பாரம்பரியம். ஓரிரு உதாரணங்களைக் கூறலாம்.
டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்தது. கபினற் அமைச்சராக மு. திருச்செல்வம் பதவியேற்றார். மாவட்ட சபைகளை அமைப்பது என்ற உடன்பாட்டின் அடிப்படையிலேயே தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் இணைந்தது. மாவட்ட சபை சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக ஒரு கட்டத்தில் கூறிய பின்னரும் அரசாங்கத்தில் தொடர்ந்து இருந்தார்கள். திருச்செல்வம் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்தார். கோணேஸ்வரர் ஆலயப் பகுதியைப் புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப் போவதாகக் கூறினார்கள். திருச்செல்வம் அதற்காக ஒரு குழுவை நியமித்தார். திருச்செல்வத்துக்குத் தெரியாமல் டட்லி சேனநாயக்க அக் குழுவைக் கலைத்ததும் திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
ஆனால் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை. தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரித்தது. பொதுத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன் அரசாங்கத்திலிருந்து வெளியேறி “ஐக்கிய தேசியக் கட்சி எங்களை ஏமாற்றிவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையை மாவட்ட சபை நிராகரிக்கப்பட்ட நேரத்தில் அல்லது கோனேஸ்வரர் புனிதப் பிரதேசக் குழு கலைக்கப்பட்ட நேரத்தில் வெளியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டுத் தேர்தலுக்குச் சில நாட்கள் இருக்கையில் வெளியிட்டார்கள். இப்படியான அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதையே கோரிக்கையாக முன்வைத்துப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. ஆனால் ஜே. ஆர். ஜயவர்தனவின் மாவட்ட சபையை ஏற்றுக்கொண்டு அதற்கான தேர்தலில் போட்டியிட்டார்கள். மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
இப்போதும் அந்த நம்பிக்கையுடனேயே களத்துக்கு வந்திருக்கின்றார்கள். எதையாவது கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் மக்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாததால் இத் தலைவர்களில் நம்பிக்கை இழக்கவில்லை. இப்போது நிலைமை வேறு. இத்தலைவர்களால் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்ததற்கும் அதனிலும் கூடுதலானோர் அங்கவீனர்களாகியதற்கும் ஏராளமானோர் அகதிகளாகியதற்கும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெகுவாகப் பின்தள்ளப்பட்டதற்கும் இத் தலைவர்கள் பொறுப்பாளிகள் என்பது மக்களுக்குப் புரிகின்றது. இந்த மக்களை இனியும் இவர்கள் ஏமாற்ற முடியாது.
இப்போது காட்சி மாறிவிட்டது. மக்கள் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்.
- வாகுலன்
(தினகரன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment