தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !....
ஐரோப்பாவில் இருந்து பல தொலைக்காட்சிகள் தமிழில் பல சேவைகளை நடாத்தி வருகின்றது, அவற்றில் தீபம் தொலைக்காட்சி பிரித்தானியாவில் இருந்து ஒளி பரப்பினை நடாத்தி வருகின்றது, தீபம் தொலைக்காட்சியானது தனது சேவையைத் தொடங்கி இன்றுடன் பத்து ஆண்டுகளை எட்டுகின்றது எனக்கூறும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நேர்மை, பக்கச்சார்பின்மை, எப்போதும் நடுநிலமைச் செய்திகளை மக்களுக்கு கொணர்வது போன்ற மேதாவித்தன அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.
இவர்கள் நடுநிலமை எனக் கூறுவது எது என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது, ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுவது ஊடகங்களின் தார்மீகப் பணி, அதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு அந்தரங்கங்க விடயங்கள் மட்டும் தான் நடுநிலைச் செய்திகள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் அசைவுகளில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுவது தான் நடுநிலைச் செய்தி, ஆரோக்கியமானதும் கூட, ஆனால் தீபம் தொலைக்காட்சி என்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே!
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தீபம் தொலைக்காட்சிக்கு தெரியாமல் போனதற்குக் காரணமென்ன, அல்லது ஏன் போய் வீண் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டுமென தவிர்த்து ஒரு தலைப் பட்ச செய்திகளை மட்டும் பதிவு செய்ததா?
சிறீலங்கா அரசாங்கம் தமிழினத்துக்குச் செய்யும் தவறுகள் அளவுக்கு அதிகமானது தான், ஆனால் அதற்கு எதிர் தரப்பு எனக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை ஏன் தீபம் தொலைக்காட்சி பதிவேற்றம் செய்ய மறந்து விட்டது.
ஜனநாயக நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர்கள் துரோகியாக வர்ணிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே, இது பிழையான வாதம் என தீபம் குரல் கொடுக்கத் தவறிவிட்டதே!
வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வரவேண்டும் எனக்கூறி பலவந்தமாக பதின்ம வயதுக்குள்ளானவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் யுத்த களத்துக்கு அனுப்பி கொன்றதுடன், எஞ்சிய சிலராக ஊனமுற்ற சமுதாயமொன்றை விடுதலைப் புலிகள் பிரசவித்து விட்டு காணாமல் போனார்களே இது தீபம் தொலைக்காட்சிக்குத் தெரியவில்லையா?
வன்னியில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்து யுத்தம் நடத்தினார்களே, அந்தவேளை எதிரி பாரிய ஆயுத தளபாடங்களுடன் யுத்தத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றான் மக்களை விடுவியுங்கள் என ஒரு நாளிகையாவது விடுதலைப் புலிகளுக்கு உங்களின் ஊடகத்தின் மூலமாக அறிவித்தல் விடுத்தீர்களா முடியவில்லையே ஏன்?
இன்னும் அதிகம் குறிப்பிடலாம் இனிமேலாவது நடுநிலை தவறிய ஊடகம் தீபம் எனப் பதிவு செய்யுங்கள், அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !
ஆகவே மொத்தத்தில் தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமென்பதே நிஜம்.
நன்றி http://kalamm.blogspot.com
0 விமர்சனங்கள்:
Post a Comment