இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்பு யோசனைத் திட்டம்
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சி அடிப்படையில் புதிய தீர்வு யோசனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகிறது. தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த யோசனைத் திட்டம் அமையுமெனக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனைத் திட்டம் தொடர்பாகத் தற்பொழுது இந்தியாவிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் பிரஸ்தாபித்துக்கொண்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், 13வது திருத்தம் இறந்துபோனதொன்று என்றும் கூறியுள்ளனர். எனவே, 13வது அரசியலமைப்பிற்கு அடிப்படையான தீர்வுத்திட்டத்தைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அரசியல் தீர்வுக்கான யோசனைத் திட்டமொன்றைத் தாயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவிருக்கும் இந்த யோசனைத் திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கூட்டமைப்பினர் யோசனைத் திட்டத்தை முன்வைக்கலாம்
இதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமது யோசனைத் திட்டமொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கலாமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் யோசனைத் திட்டமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றாக இருக்கவேண்டுமென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்திலேயே அந்தத் தீர்வுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
“எதிர்க்கட்சியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவொரு கட்சியும் தீர்வுக்கான யோசனைத் திட்டங்களை முன்வைக்கலாம். ஆனால், அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகவிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துள்ளனர். முதலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி இரண்டு தடவைகள் விடுத்த அழைப்பு எந்தவிதமான பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், அவர்கள் முன்வைக்கவிருக்கும் யோசனைத் திட்டம் எவ்வாறு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment