தமிழ் கட்சிகளை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடச் செய்ய அரசு முயற்சி
யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சி மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளபோதும் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதி முடிவெடுப்பார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாது தனித்துப் போட்டியிடுவதற்கே இந்தக் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தத் தேர்;தல்களில் தாம் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆனந்தசங்கரி கூறியுள்ளார். ஆனாலும், இந்த விடயம் தொடர்பாக ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.
இதேநேரம், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக சித்தார்த்தனை நிறுத்துவதற்கும் இணங்கியிருந்தார்.
எனினும், பொதுத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புவைத்திருக்கப் போவதில்லையென ஆனந்தசங்கரி கூறியிருப்பதால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வ சந்திப்புக்களை நடத்தமுடியாதிருப்பதாக சிறிகாந்தா கூறியுள்ளார்.
பழைய விடயங்களைக் கிண்டிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லையெனச் சுட்டிக்காட்டி சிறிகாந்தா, இவ்வாறு செய்வதன் மூலம் எவருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லையெனக் கூறினார்.
இதேவேளை, இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வாரம் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளபோதும், வவுனியாவுக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ சென்று தேர்தல் வேலைகளைப் பார்ப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment